Sunday, December 21, 2008

கேரள சர்வதேச திரைப்பட விழா

டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கிய கேரள சர்வதேச திரைப்பட விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. நான்கு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொன்டு 10 படங்களைப் பார்த்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நான்கு படங்களின் விமர்சனங்கள் இங்கே! திருவனந்தபுரம் புகைப்படங்கள் இங்கே.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் தற்போது நடந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நிறைவுறும். கலந்து கொண்டவர்கள் விவரங்கள் தெரிவிக்கவும்!

Wednesday, December 03, 2008

மதுரை விவரணத் திரைப்பட விழா

10 ஆவது உலக விவரண மற்றும் குறும்படத் திரைப்பட விழா மதுரையில் இன்று (டிசம்பர் 3) தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விவரங்கள் இங்கே.

Sunday, November 23, 2008

அகண்ட பாரதத்தினாய் வா வா ...


தங்கள் நாடு சிதறுண்டு மேலுள்ள படத்திலுள்ளது போலாகும் என்று பாகிஸ்தானியர் பயப்படுவதாய் இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கிறது. மிச்சமிருக்கும் பஞ்சாபும் சிந்தும் இந்தியாவுக்குத் திரும்பினால் அகண்ட பாரதக் கனவு நனவாகும். இந்து நதி மேற்கு எல்லையாக இருந்தால்தானே இது 'இந்தியா'. சரி, சரி, கனவுதான். இவர் கூட அத்தகைய கனவு கண்டிருக்கிறார்.

படம்: நன்றி நியூயார்க் டைம்ஸ்.

Tuesday, November 11, 2008

மெல்ல குன்க்னா இனி வாழும்!

குஜராத் மாநிலம் தேஜ்கடில் செயல்பட்டுவரும் ஆதிவாசி அகாதமி பாராட்டப்பட வேண்டியதொரு முயற்சி. ஆதிவாசிகளின் மொழி, சமையல், ஓவியம் மற்றும் இன்னபிற கலை பாரம்பரியங்களைக் காப்பாற்ற முயன்று வருகிறார்கள். குன்க்னா உள்ளிட்ட சில பேச்சுமொழிகளுக்கு அகராதி தயாரிக்கும் முயற்சி பற்றிய செய்தி இங்கே.

Saturday, November 08, 2008

அத்வானி வலைதளம்!

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானி அவர்களின் வலைதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கே.

Monday, October 27, 2008

தீபாவளி வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! மகாவீரரின் வாழ்வியல் நெறிகள் நம்மை ஆட்கொள்ளட்டும்!

Saturday, October 25, 2008

கொடுத்தாய் வாழி இந்தியா!

மிண்ட் பத்திரிக்கையில் இன்று வெளியான நிரஞ்சன் ராஜதக்ஷாவின் கட்டுரை மிகவும் சிந்திக்க வைத்தது.

உலகின் முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, அவற்றின் இயலுமை வரிசையில் கோபன்ஹேகன் இணக்க முடிவு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையின்படி குழந்தைகளுக்கு உயிர்சத்து மாத்திரைகள் வழங்குவது உலக வெம்மையை தடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதைவிடவும் அதிக பலனளிக்கக்கூடியது என்று தெரிகிறது.

இன்றைய மிண்டில் குழந்தைகள் நலன் மற்றும் பிற விசயங்களுக்காக உழைக்கும் பல தொண்டு நிறுவனங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். நான் சேகரித்த பட்டியல் கீழே.

Meljol, Mumbai.
Able Disabled All People Together (ADAPT), Mumbai.
Action for Ability Development and Inclusion (AADI), Delhi.
Spastics Society of Karnataka, Bengaluru.
Vidya Sagar, Chennai.
SOS Children's Villages of India, Delhi.
Balagurukulam, Chennai.
Room to read, Delhi.
Akshara Foundation, Bengaluru.
Association of Writers and Illustrators for Children, Delhi.
Pratham, Mumbai.
Pankhudi, Bengaluru.
The Blind Relief Association, Delhi.
National Association of the Blind, Mumbai.
Esha - People for the Blind
Mumbai Mobile Creche
Door step School, Mumbai.
Deepalaya, Delhi.
Akanksha, Mumbai and Pune.
Butterflies, Delhi.
Make-a-wish Foundation, Delhi.
Cancer Foundation of India, Kolkata.
Cancer Patients Aid Association (CPAA), Mumbai.
Arushi (Salaam Baalak Trust), Gurgaon.
Pranab Kanya Sangha, Kolkata.
Parikrma, Bengaluru.
Nanhi Kali, Mumbai.
Jamghat, Delhi.
Aasra, Mumbai.
Lifeline Foundation, Kolkata.
Childline India Foundation, Mumbai.
Roshni, Secunderabad.
Sneha, Chennai.
Maithri, Kochi.
Sumaitri, Delhi.
Naz Care Home, Delhi.
The Freedom Foundation.
Manavya, Pune.
Child Survival India, Delhi.

Thursday, October 23, 2008

தமிழ் இனவெறிவாதம் ஒழிக!

தமிழக அரசியல் கட்சிகளின் இனவெறிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இப்போது தனித்தமிழ்நாடும் வேண்டுமாம் (?!) ஆமாம். பிராமணர்களுக்கு தனிதமிழ்நாடு (சென்னை மட்டும்?) கொடுப்பது எவ்வளவு நியாயமாக இருக்குமோ அவ்வளவு நியாயமானது ஈழத்தமிழர் போராட்டம்.

தமிழகத்தில் ஈழத்தமிழர்களை, அதுவும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுக்கு இனவெறி தவிர்த்த வேறு எந்த காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கை எதையாவது இவர்களை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! எதற்கெடுத்தாலும் 1983 ஜூலைப் படுகொலைகளை வைத்தே தங்களது இனவெறிக்கு நியாயம் கற்பிப்பவர்கள் இவர்கள்.

இந்தியா சுதந்திரமடைந்த போது தமிழக அரசு மற்றும் இன்னபிற துறைகளில் எப்படி பிராமணர் அளவுக்கு அதிகமான இடங்களில் அமர்ந்திருந்தார்களோ, அதேபோல இலங்கையில் தமிழர்கள் அளவுக்கதிகமான பதவிகளை தங்களிடம் வைத்திருந்தார்கள். சுதந்திர இலங்கை இந்த ஏற்றுக்கொள்ள முடியாத சமூக நிலையை மாற்றி, சிங்களவரின் உரிமைகளை நிலைநாட்ட படிப்படியாக பல செயல்களைச் செய்தது.

அந்த செயல்களில் பல நியாயமில்லதவை. இந்தியாவில் இந்தியை தேசிய மொழியாக்க நினைத்ததுபோல அங்கு சிங்களத்தை ஆக்க முயற்சித்தார்கள். தமிழகத்தில் பிராமணரின் பங்களிப்புகள் (கிரந்தம், நாட்காட்டிமுறை, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு. செய்தித்தாள்கள் ...) சிறுமைப்படுத்தப்படுதல், அவர்களின் குடுமி அறுத்தல் போன்றவற்றிற்கு நிகரான செயல்கள் இலங்கையிலும் சிங்களவரால் செய்யப்பட்டன.

இந்தகைய செயல்கள் தமிழர், சிங்களர் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது இயல்பே. அது இனக்கலவரத்தில் முடிந்ததும் எதிர்பார்க்கக்கூடியதே. இனக்கலவரத்தில் அரசுப்படைகள் எவ்வளவு நடுநிலையோடு செயல்படும் என்பதை சொல்லவும் வேண்டுமா? குஜராத், பம்பாய் கலவரங்களில் நாம் பார்க்காத 'நடுநிலைமையா'? தமிழகத்திலேகூட காவல்துறையினர் "முஸ்லீம்களை போய் அடியுங்கள், நாங்கள் வந்தவுடன் ஓடிவிடுங்கள்" என்று சொன்னதை அடித்தவர் மூலமாகவே நான் கேட்டிருக்கிறேன்!

அதே போல 1983இல் நடந்த இனப்படுகொலைகளில் இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்கேற்றது உண்மையே. அதற்காக இலங்கைத் தமிழருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் அளவுக்கெல்லாம் சென்று இந்தியா உதவி செய்தது. எதிராளியை பலமாக்கி இன்னொரு கட்சியை பேச்சுவார்த்தைக்கு வரவைப்பது எங்கும் நடப்பதே. அவ்வாறு 1987இல் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனாய் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களே தாம் அதிக வாழும் இடங்களை ஆளும் வகையில் மாகாண அரசுகள் ஏற்படுத்த இலங்கை ஒப்புக்கொண்டது.

ஆனால் ஆயுத பலமும், தமிழ்நாட்டு இனவெறியர்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்ற புலிகள் என்னும் பாசிச, இனவாத, பயங்கரவாத அமைப்பு, 'நம் கை ஓங்கியிருக்கும் போது எதற்காக அமைதி வழியில் செல்லவேண்டும்' என்று 1987 உடன்படிக்கையை செல்லாக்காசாக்க முயற்சித்தது. ஈழத்தமிழரின் பாதுகாப்புக்கு சென்ற இந்திய இராணுவத்தை (ஜெயவர்த்தனே உதவியுடன்) போரில் சிக்கவைத்தது.

அவ்வாறு சிக்கிக்கொண்ட இந்திய இராணுவம் புலிகளை நேரடியாக எதிர்கொண்டு, அவர்களை பூண்டோடு அழிக்காததையும், இந்திய இராணுவ வீரர்கள் ஈழத்தமிழர்பால் செய்த அத்துமீரல்களையும், நான் ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகள் என்று முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 1987-88 இல் ஒழுங்காகச் செய்து முடிக்காத புலிகள் அழிப்பை, இன்று ராஜபக்சே அரசும், இந்திய அரசும் செய்து முடிப்பது மிகவும் வரவேற்கத் தகுந்ததே.

தமிழகத்தில் புலிகளை ஆதரிக்காதவர்கள் தமிழ்த்துரோகிகள் என்றால், ஆதரிப்பவர்கள் (இந்திய) தேசத்துரோகிகள் என்று ஜெயலலிதா சொல்வது சரியே. மேலும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் (இலங்கை) தேசத்துரோகிகள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

ஈழத்தமிழரிடம் தற்போது நியாயமான கோரிக்கைகள் ஒன்றுமேயில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்கள் போல் இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல. (இந்திய வம்சாவளித் தமிழரில் பலர் சிறிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்தியா திரும்பினர். முத்தையா முரளிதரனின் குடும்பமும் திரும்பியிருந்தால் நமக்கு நல்ல சுழற்பந்துவீச்சாக்ளர் இடைத்திருப்பார்!).

தாங்கள் ஆரம்பித்த இனவெறி அரசியல் மற்றும் ஆயுதப்போராட்டத்தின் பலன்களை ஈழத்தமிழர் இன்று அனுபவிக்கிறார்கள். இவர்களை அடக்க இலங்கை இராணுவம் நியாயமாகவோ, அத்துமீறியோ நடவடிக்கை எடுத்தால் 'இனப்படுகொலை' என்று அந்தர்பல்டி அடிக்கிறார்கள். உலகின் பிறநாடுகளில் அண்டிப்பிழைத்தும்கூட தங்கள் நாட்டில் தீவிரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இவர்களுக்கு தமிழக மக்கள் வேறு உதவவேண்டுமாம்! நல்ல கதை!

நிற்க. இலங்கை அரசும், இராணுவமும் எப்போதும் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் 25 ஆண்டு தொடர் சண்டையில் சிங்களர் மட்டும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. 13வது சட்டத்திருத்தில் சில ஷரத்துகளை மாற்றவோ, சேர்க்கவோ வேண்டுமானால், அதை தமிழ் அரசியல் கட்சிகள்தான் முயன்று செய்யவேண்டும். புலிகள் என்னும் தீவிரவாத அமைப்பும், அவர்களின் தமிழ்நாட்டு இனவெறி நண்பர்களும் அல்ல.

மேலும் ஈழத்தமிழர் இலங்கையின் நல்ல குடிமக்களாய், அமைதியாய் வாழவிரும்பினாலும் புலிகள் அதை அனுமதிக்கப்போவதில்லை. புலிகளை அழித்தொழிப்பதுதான் ஈழத்தமிழருக்கு சிங்களவரும், இந்தியரும் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி. அந்த உதவியை தடுக்க நினைக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டுவங்கி அரசியல் மிகவும் கண்டிக்கத்தது.

Tuesday, October 21, 2008

தேமதுரச் சிங்களம்!

இந்திய மொழிகளிலேயே மலையாளம் கேட்பதற்கு ரம்மியமான மொழி என்பது எனது கருத்து. 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து' என்று பாரதி பாடியதில், 'சுந்தரம்' கர்னாடக இசையைக் குறிப்பதேயன்றி தெலுங்கைக் குறிக்க வாய்ப்பில்லை. மலையாளத்தின் பால் சமஸ்கிரதத்தின் தாக்கம் நாம் அறிந்ததே.



மேலுள்ளது போல், சிங்கள மொழி உச்சரிப்பு இவ்வளவு தூரம் சமஸ்கிரதத்தை ஒத்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. பிரயாசை, நகரம் என்று சொற்களையும் இனங்காண முடிகிறது. ஈழத்தமிழின் ரிங்காரமும் சிங்களத் தாக்கத்தினால் வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. மலையாளமும், சிங்களமும் கிரந்த எழுத்துகள் சார்ந்த எழுத்துமுறையைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிற்க. தேமதுரச் சிங்களத்தில் விடுதலைப் புலிகள் அடித்து விரட்டப்பட்டு, கிளிநொச்சி மீட்கப்படுகிறது என்ற செய்தியைக் கேட்பதில் சுகமே தனிதான்!

Monday, October 20, 2008

விழிப்புணர்வு!

மார்பகப் புற்றுநோய் பற்றிய 'விழிப்புணர்வும்', அது பற்றிய ஒரு தமிழரின் அலம்பலும் இங்கே! ஹே!

Wednesday, October 08, 2008

இலங்கை: வெற்றியை நோக்கி ...

தமிழக அரசியல் கட்சிகளின் போலி ஒப்பாரிகள், இலங்கையில் 'விடுதலைப் பொறுக்கிகளுக்கு' தர்ம அடி விழுகிறது என்னும் நல்ல செய்தியை உறுதிப்படுத்துகின்றன. மகிழ்ச்சி!

புலிகளை ஒழிப்பதற்கு இந்திய இராணுவம் உதவி வருவது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகளுக்கு நல்ல பிராயச்சித்தார்த்தம். பிரபாகரன் கொல்லப்பட்டு, புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டு, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.

இலங்கையில் நிரந்தர அமைதிக்கான பாதையில் அடைய வேண்டிய மைல் கற்கள் கீழே.

1. பிரபாகரன் மரணம்.
2. புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அவர்கள் வசமுள்ள (வன்னி உள்ளிட்ட) அனைத்து பகுதிகளும் மீட்கப்படுதல்.
3. ஐ.நா உள்ளிட்ட சேவை, மறுவாழ்வு அமைப்புகள் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு படிப்படியாகத் திரும்புதல்.
4. வடக்கு மாகாணத் தேர்தல்.
5. இலங்கை அரசியலைமைப்பு சட்டத்தின் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
6. ஈழ மறுசீரமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் உடன்பாடுகள்.
7. எஞ்சியுள்ள புலிகளும் பூண்டோடு அழிக்கப்படுதல் அல்லது போர்க் குற்றங்களுக்காக இலங்கை நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுதல்.
8. இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்புதல்.
9. உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் (விருந்தினராகவேணும்) நாடு திரும்புதல்.
10. சுபம்!

Wednesday, September 03, 2008

கற்றது தமிழ், செத்தது ரசனை!

'ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்' என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் 'கற்றது தமிழ்' என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.

ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது பலருக்கும் புரிவதில்லை. கதை, கருத்து அகியவையெல்லாம் ஒரு படத்தை மதிப்பிடுவதில் எந்த பங்கும் வகிக்கக்கூடாது. (ம் ... கதையே இல்லாமல் படமெடுப்பதை கண்டிப்பது வேறு விசயம்!)

கொடுத்த கதையை எவ்வாறு எடுத்திருக்கிறார்கள், ஒளி, ஒலிப்பதிவு எப்படியிருக்கிறது, திரைக்கதை தெருக்கூத்துத் தனமாக இருக்கிறதா, நடிகர்கள் தேமேயென்று வந்துபோகிறார்களா, ஒப்பனை தேவைப்பட்டால் அது எவ்வளவு அசிங்கமாகயிருக்கிறது? என்று எதையுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்தை புகழ்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது!

மேலே நான் கொடுத்த எந்த தராதரத்திலும் 'கற்றது தமிழ்' நூற்றுக்கு பத்து மதிப்பெண்களைக்கூடப் பெறாது. மற்றபடி எதோ தமிழ் பற்றிய கதை என்றால் அதுவும் நகைப்புக்குரியது. ஒரு நூறு படங்களில் பார்த்துப் புளித்துப்போன தனிமனிதனின் துன்பங்களுக்காக சமூகத்தைப் பழிவாங்கும் மசாலாக் கதையில், தமிழ் என்ற மையை லேசாக (தேவையேயில்லாமல்) தடவி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

நிற்க. படமெடுப்பவர்கள் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்களே, படத்தை விமர்சிக்க நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள். ஆரோக்கியமான விமர்சனமே கலைஞர்களிடமிருந்து சிறந்த படைப்புகளை வரவைக்கும்!

***

பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று 'வின்டர் லைட்' என்ற படத்தை பார்த்தேன். எப்போதும் போல ஆழமான படம். கடவுள் நம்பிக்கை போலித்தனமான சுயநலவாதம் என்கிறார் பெர்க்மன். ஆமேன்!

பிகார் வெள்ள நிவாரணம்

பிகார் வெள்ள நிவாரணத்துக்கு நிதியளிக்க விரும்புவர்களுக்கு கீழுள்ள விவரங்கள் பயன்படலாம்.

பிகார் முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கியில் இணையப் பண மாற்றம் செய்யத் தேவையான விவரங்கள்:

CHIEF MINISTER RELIEF FUND,
State Bank of India,
Account Number: 10839124928
Branch: Patna Secretariat, Bihar.

மேலும் விவரங்கள் இங்கே.

அமெரிக்காவில் வசிப்பவர்கள் AID India வின் நிரந்தர நிவாரண நிதிக்கும் பணம் அனுப்பலாம்.

Sunday, August 31, 2008

பெங்களூரில் பெர்க்மன் வாரம்!

இங்க்மார் பெர்க்மன் நினைவு திரைப்பட வாரம் பெங்களூரில் இன்று துவங்கியது. சுஜித்ரா திரைப்பட சமூகத்தின் திரையரங்கில் வைல்டு ஸ்டராபரீஸை மீண்டும் பார்த்து ரசித்தேன். ஸ்வீடன் தூதரகம் மற்றும் பாலடோர் திரைப்பட நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த திரைப்பட வாரம் நடைபெறுகிறது. வருகிற சனிக்கிழமை முடிவடையும்.

வைல்டு ஸ்டராபரீஸுக்கெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய அவசியமிருப்பதாய் தெரியவில்லை. கடந்த ஆண்டு மறைந்த பெர்க்மனின் படங்களிலேயே மிகவும் இலகுவான படம். நான் பார்த்த அதிசிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள படம்! அவ்வளவுதான்.

வரும் மாதத்தில் நிகழவிருக்கிற இரண்டு திரைப்பட விழாக்கள் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 'தண்ணீரிலிருந்து எழும் ஒலிகள்' என்னும் தண்ணீர் பற்றிய விவரண திரைப்பட விழா மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கூட்டம் செப்டம்பர் 13 அன்று துவங்குகிறது.

லூமியர் கொண்டாடங்கள் என்னும் அமைப்பு நடத்தும் மலையாள திரைப்படத் திருவிழா செப்டம்பர் 19 அன்று துவங்குகிறது. லாவண்யா திரையரங்கில் நாலு பெண்கள், மரண சிம்மாசனம் உள்ளிட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

Sunday, August 24, 2008

மாத்தி மாய் (என் அம்மா)

பெங்களூரு திரைப்பட சமூகம் சார்பாக திரையிடப்பட்ட மாத்தி மாய் என்னும் மராத்தி மொழி படத்தை சனிக்கிழமையன்று பார்த்தேன். மகேஷ்வேத்தா தேவி வங்காள மொழியில் எழுதிய புதினத்தை சித்ரா பாலேகர் மராத்தியில் எடுத்திருக்கிறார். இறந்த குழந்தைகளை புதைக்கும் சோகமான வேலை செய்யும் ஒரு பெண் தாயாவதும், அதனால் நிகழும் விபரீதங்களும் படத்தின் கதை.

அதுல் குல்கர்னி, நந்திதா தாஸ் விளம்பரத்துக்கென நாயகர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் இயக்குனரைச் சொல்லி குற்றமில்லை. செத்துப்போன மராத்தி திரைப்பட உலகில் படமெடுத்ததற்கே அவரை பாராட்டவேண்டும்! படம் பார்க்க வந்திருந்த கிரீஷ் கர்னாட், படத்தின் இசை குறித்து இயக்குனரிடமே குறை சொன்னது மிகவும் ரசக்குறைவாக இருந்தது.

சித்ரா பாலேகர் பேசும்போது, "நாம் பிரஞ்சு மொழி திரைப்படங்களை திரையிட்டாலும் இந்தியாவின் பிறமாநில மொழிப் படங்களை திரையிடமாட்டோம்" என்றார். ம்... ஒரே நாளில் ஐந்தாறு மொழிப்படங்கள் திரையிடப்படும் பெங்களூருக்கு இந்த விமர்சனம் பொருந்தாதுதான். ஆனால் இன்றிரவு இருநூறு ருபாய் கொடுத்து Far North என்னும் படுசுமாரான படத்தை பார்த்தபோது, என்.டி.டிவி லூமியர் நிறுவனம் இந்திய மொழித் திரைப்படங்களையும் விநியோகிக்கலாம் என்று தோன்றியது.

'சாவதற்கு முன் பார்க்கவேண்டிய 50 படங்கள்' என்கிற சவடாலோடு (பிரதி வெள்ளி இரவு 11 மணிக்கு) யு.டிவி உலகத் திரைப்பட அலைவரிசையில் ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் வாரத்தில் ஹீரோ என்கிற ஹாங் காங் படத்தை திரைடயிட்டார்கள். இது நான் சாவதற்கு முன் பார்க்கவேண்டிய படமா? Crouching Tiger, Hidden Draganனை மீண்டுமெடுக்க செய்யப்பட்ட இந்த வீண் முயற்சியைப் பார்த்து எவனாவது சாகாமலிருந்தால் சரி!

Wednesday, August 20, 2008

மாமல்லர்கள்!

1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சுஷீல் குமாருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

குத்துச் சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள விஜேந்திர குமாருக்கு பாராட்டுகளும், அவர் வெண்கலத்தோடு நில்லாமல் தங்கமோ, வெள்ளியோ பெற வாழ்த்துகள்!

விஜேந்திர குமார் மற்றும் காலிறுதி வரை முன்னேறி, போராடித் தோற்ற அகில் குமார், ஜிதேந்தர் குமார் என்னும் மூன்று வீரர்களை நாட்டுக்கு அளித்த பிவானிக்கு ஒரு ஓ போடலாம்!

பேட்மிண்டன் விளையாட்டில் சிறப்பாக விளையாடிய சாய்னா நேஹ்வால் பிற்காலத்தில் பதக்கங்களையும் வென்றுவருவார் என நம்பலாம். பறக்கும் இறக்கைகளைக் கொண்ட இந்த விளையாட்டு பேட்மிண்டன் வீடு என்னும் இடத்தின் பெயரால் அழைக்கப் படுவது சுவாரசியமான விசயம்!

கடைசியாக, அப்கானிஸ்தானின் ரோஹுல்லாஹ் நிக்பாய் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. பாராட்டுகள்!

Saturday, August 16, 2008

தமிழில் உபாகர்மம்!

உபாகர்மம் என்னும் பாரம்பரிய பழக்கத்தை கைவிடாது செய்துவருபவர்களுக்கு எனது பாராட்டுகள். வேத பாடசாலையில் வரும் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் செய்யப்படும் செயல்களுக்கு உபாகர்மம் என்று பெயர். மேலும் விவரங்கள் இங்கே.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரம்மனையும் (Brahman - Cosmic flow), கணபதியையும் (chance, luck) சூரியனையும், மற்றும் பிற இயற்கையின் அங்கங்களையும், வேதம் இயற்றிய, பகுத்தளித்த பெரியோர்களையும் வணங்கும் இந்தப் பழக்கம் மிகவும் சிறப்பானதே. இந்த வழக்கததை தமிழில் செய்ய விரும்புவர்களுக்கு தேவையான குறிப்புகள் கீழே.

கடந்த ஆண்டு காயத்ரி மந்திரம் குறித்து நான் எழுதிய இடுகை இங்கே.

உபாகர்மம் (ஆரம்ப செயல்கள்)

1. காமோகார்ஷீத் ஜபம் (காமன் மன்யு என்னும் தேவதைகளை வேண்டுதல்):

காமனே போற்றி! மன்யுவே போற்றி! (108 தடவை)

2. யஜ்ஞோபவீத தாரணம் (பூணூல் அணிதல்):

2.1. ஆசமனம் (குறியிடுதல்):

அச்சுதனுக்கு வணக்கம், அனந்தனுக்கு வணக்கம், கோவிந்தனுக்கு வணக்கம். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, சிறீதரா, ஹிருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

உன்னைப் பன்னிரு திருநாமங்களால் போற்றி என் உடலைனைத்தும் குறி இடுகின்றேன்.

2.2. கணபதி-தியானம்:

எங்கும் நிறைந்தவரும், எனினும் அன்பர்க்குகந்த வடிவம் ஏற்பவரும், வெண்மையான ஆடை உடுத்தவரும். நிலவு போன்ற ஒளியுள்ளவரும், நான்கு கைகளுள்ளவரும், ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக தியானிக்கிறேன்.

2.3. பிராணாயாமம் (மூச்சின் ஆட்சி):

ஓங்காரமே பூலோகம், ஓங்காரமே புவர்லோகம், ஓங்காரமே ஸுவர்லோகம், ஓங்காரமே மஹர்லோகம், ஓங்காரமே ஜனலோகம், ஓங்காரமே தபலோகம், ஓங்காரமே சத்தியலோகம், ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி உருவத்தை தியானிப்போம்.

ஓங்காரமே நீரும், ஒளியும், ரசம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும், எங்கும் பரந்த ஆகாசமும் ஆகும்.

மனம், புத்தி, அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.

2.4. சங்கல்பம் (தெளிந்த தீர்மானம்):

பக்தியோகமும், கர்மயோகமும், ஞானயோகமும் இந்த பூணூலை அணிவதால் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

2.5. யஜ்ஞோபவீதம் (பூணூல் அணிதல்):

பரிசுத்தியளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும், ஆயுளையும், முதன்மையையும் அளிக்கவல்லதுமாகிய வெண்மையான பூணூலைத் தரிக்கிறேன். ஞான ஒளியும், பலமும் அதனால் நிலைபெற வேண்டும்.

2.6. உபவீதம் (பழைய பூணூலைக் கழட்டுதல்):

இழைகள் பின்னமானதும் பலங்குறைந்ததும், அழுக்கடைந்ததுமாகிய பூணூலை விலக்குகிறேன். பரம்பொருளே! மீண்டும் தொடர்ந்து எனக்கு ஞான ஒளியும் நீண்ட ஆயுளும் இருக்கும்படி அருளவேண்டும்.

3. காண்டரிஷி தர்ப்பணம் (வேத கண்ட ரிஷிகளை வணங்குதல்):

பிரஜாபதியின், ஸோமனின், அக்னியின், விச்வ தேவனின், ஸாஹிதீர் தேவனின் (உபநிசத), யாக்ஞீகீர் தேவனின் (உபநிசத), வாருணீர் தேவனின் (உபநிசத), ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவின், ஸ்தஸஸ்பதியின் வேதக் கண்டத்திற்கு உரியவர்களான ரிஷிகளுக்கு இந்த தர்பையை சமர்பிக்கிறேன்.

Friday, August 15, 2008

சுதந்திர தின வாழ்த்துகள்!


இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

Thursday, August 14, 2008

வென்றது இந்தியா!!


தில்லியில் நடந்த ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் மூன்றாம் தரநிலைப் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. பாராட்டுகள். இதன் மூலம் 2011 இல் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தகுதி பெற்றுள்ளது!

Monday, August 11, 2008

அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார்!!

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அபிநவ் பிந்த்ரா தனி நபர் தங்கம் வென்றார்! 10மீ துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தம் 700.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். பாராட்டுகள்!!

அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் தளத்தில் அபிநவ் தங்கம் வென்றது பற்றிய செய்தி இங்கே, அவரைப் பற்றிய பக்கம் இங்கே. பதக்கப் பட்டியல் இங்கே.

Sunday, August 10, 2008

பெங்களூரில் ஜெர்மன் திரைப்பட வாரம்

கூதே மையம், ஜெர்மன் திரைப்பட நிறுவனம், சுஜித்ரா திரைப்பட சமூகம் ஆகியோர் சேர்ந்து நடத்தும் ஜெர்மானிய திரைப்பட வாரம், பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் நடந்துவருகிறது.

நேற்று Grave Decisions, The Edge of Heaven மற்றும் Head-On ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன். நல்ல தரமுள்ள படங்கள். வரும் வியாழக்கிழமை வரை திரையிடப்படவிருக்கும் 21 படங்களில் (7 குழந்தைகள் திரைப்படங்கள்) 10 படங்களை பார்த்து விடுவதாக உத்தேசம்! அடுத்த வாரம் ஒற்றைவரி விமர்சனங்கள் எழுதுகிறேன்.

ஜெர்மானிய படங்கள் பிரஞ்சு, போலந்து நாட்டு படங்களைப் போல ஆழமில்லாதவை என்ற என் கருத்தை இந்த திரைப்பட விழா மாற்றவேண்டும். பார்க்கலாம்! நீங்கள் பெங்களூரில் இருந்தால் சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லாவண்யா திரையரங்கத்திற்கு விரையுங்கள்!

செப்டம்பர் 3: மேலே கூறிய மாதிரி ஒரு வரி விமர்சனம் எழுதும் ஆர்வம் போய்விட்டது! அதனால் இந்த விழாவில் நான் பார்த்த மற்ற படங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். Requiem, Ghosts, Nothing but Ghosts, Distant Lights, War Child.

Wednesday, August 06, 2008

நட்பு!

Tuesday, July 22, 2008

ஆத்தா, நான் ஜெயிச்சுட்டேன்!!

மன்மோகன் சிங் நமக்கு செய்யும் சேவைக்கான கட்டணம் (ஒரு எம்.பி.) தலைக்கு 3 கோடியாம்!

Saturday, July 12, 2008

நீரேற்றம்!

குவாண்டானமோ பே உள்ளிட்ட இடங்களில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளை (மற்றும் சும்மா மாட்டிக்கொண்டவர்களை) அமெரிக்க ராணுவத்தினர் waterboarding என்னும் சித்ரவதைக்கு ஆளாக்குவது நாம் அறிந்ததே. ஆனால் இந்த 'நீரேற்ற' முறை சித்ரவதை இல்லை என்று அமெரிக்கா கூறி வருகிறது.

புகழ்பெற்ற (ஆப்ராமிய) நாத்திக பேச்சாளர் கிறிஸ்தபர் ஹிட்சன்ஸ், தானே இந்த கொடுமையை அனுபவித்து, அது பற்றி Vanity Fair பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். கீழுள்ள ஒளித்துண்டையும் பார்க்கவும்.

Tuesday, July 08, 2008

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ...

உலகத் தலைவர்கள் எல்லோரும் வயிறு முட்ட சாப்பிடுவோம்! ஜப்பானில் கூடியிருக்கும் ஜி-8 நாடுகளின் தலைவர்கள், மன்மோகன் சிங் உள்ளிட்ட வேறு ஐந்து நாடுகளின் தலைவர்கள் ஆகியோர், உலக உணவுப் பற்றாக்குறை, உலக வெம்மை போன்ற விசயங்களை விவாதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நேற்றைய உணவுப் பட்டியல் கீழே!


18 வகையான பண்டங்களை, அதுவும் அசைவ உணவு. பால் உள்ளிட்ட இயற்கைக்குப் புறம்பான, ஈவிறக்கமற்ற உணவுகளை பதம் பார்த்துவிட்டு இவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள்? இந்த தலைவர்களின் வீண் ஆடம்பரம் எதற்காக? இவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகளாகத்தானே இங்கு கூடியிருக்கிறார்கள்?

மரக்கறி (உருளை, வெங்காயம், கேரட்...) தவிர்த்த காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட தாணியங்கள் ஆகியவை கொண்டே மனிதன் திடமாக, ஆரோக்கியமாக வாழமுடியும். ஒரு ஆடோ, கோழியோ தன் வாழ்நாள் முழுதும் சாப்பிட்ட உணவுக்கு ஈடானதை ஒவ்வொரு உணவு வேலையிலும் மனிதன் சாப்பிட்டால், இந்த பூமி தாங்குமா?

படம், செயதி நன்றி: டெய்லி மெயில். ஹஃப்பிங்டன் போஸ்ட்.

Sunday, July 06, 2008

தமிழில் பழுப்புப் புதினங்கள் (Pulp Fiction)

இந்து நாளிதழில் இன்று வெளியான பழுப்புப் புதினங்கள் பற்றிய கட்டுரை படிக்கத்தகுந்தது. முதலில் Pulp Fiction என்பது மட்டரக தாளில் பிரசுரிக்கப்பட்டு மலிவுவிலையில் விற்கப்படும் மசாலா புதினங்களைக் குறிக்கும் என்பதே இதைப் படித்துதான் எனக்குத் தெரிந்தது.

தமிழ் நாட்டுப் பொட்டிக்கடைகளில் சக்கைப்போடு போடும் ராஜேஷ் குமார் போன்றோரின் புதினங்கள் இவ்வகையைச் சார்ந்தவை. தமிழில் இவைகளுக்கு ஏற்கனவே எதாவது பெயரிருக்கிறதா என்று தெரியவில்லை. சாணித் தாள் புதினம் என்று அழைக்கலாமா? அந்தத் தாள்கள் பழுப்பாக இருப்பதாலும், பழுப்பு என்பது pulp என்பதோடு ஒத்தொலிப்பதாலும் 'பழுப்புப் புதினம்' நல்ல தமிழாக்கமாக இருக்குமென்று நினைக்கிறேன்.


நிற்க. தமிழ் பழுப்புப் புதினங்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டிக்கிறது. இதை தொகுத்து வெளியிட்ட ப்ரீதம் சக்ரவர்த்தி, ராகேஷ் கன்னா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அட்டைப்படத்துக்கு தனியாக ஒரு பாராட்டு :)

Saturday, July 05, 2008

ஊருக்கு நூறு பேர்

பழைய படம் தான். மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையில் இன்றிரவு ஊருக்கு நூறு பேர் திரையிட்டார்கள். சுமாரான படம். பார்க்கலாம்.

மரண தண்டனை எதிர்ப்பு, கம்யூனிசம் உள்ளிட்ட கருத்துகளை பற்றிய ஜெயகாந்தன் அவர்களின் கதை. தேசிய விருது வாங்கிய படம். கொஞ்சம் பிரசார நெடியடித்தாலும், நல்ல நடிப்பு, பாத்திரத்தேர்வு, வசனம் என்று சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அந்த (?!) காலத்தில் தூர்தர்ஷன் மாநில மொழித்திரைப் படங்களைப் பார்த்ததை பலபேர் என்னிடம் சிலாகித்திருக்கிறார்கள். இப்போது மக்களவை தொலைக்காட்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு விருது பெற்ற படங்களை திரையிடுவதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட உலக திரைப்படங்கள் என்னும் அலைவரிசையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் பாருங்கள்.

நீங்கள் தில்லியில் வசிப்பவராயின் ஓசியான் அமைப்பின் ஆசிய மற்றும் அரபு திரைப்படவிழாவில் (ஜுலை 10-20) கலந்துகொள்ளலாமே!

Thursday, June 19, 2008

தசாவதாரம் - அபாரம் பாதி, அபத்தம் மீதி!

கடவுள் இல்லை. அதுவும் ஆக்கலும் (creationist - transcendent), காத்தலும் (immanent - personal) ஒன்றாய் சேர்ந்த கடவுள் (monotheist God) சத்தியமாய் இல்லை என்று அற்புதமாய் சொல்லும் அல்லது சொல்ல நினைத்த படம் தசாவதாரம். கட்டாயம் பார்க்கலாம்.

தசாவதாரம் என்றால் என்ன? மக்கள் இயற்கையினாலும், பகைவர்களாலும் ஆபத்துக்கு உள்ளாகும் போது 'இறைவனான' விஷ்ணு அவதரித்து காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையே தசாவதாரக் கதை. அந்த பத்து அவதாரங்களையும் இந்தப் படத்தில் அற்புதமாய் கொண்டு வந்திருக்கிறார்கள்.

(கீழ் வருவன அரூண் என்பவர் சுருமுரியில் எழுதியதிலிருந்து பெறப்பட்ட விளக்கம்.)
1. மச்சம் - ரங்கராஜ நம்பி - கடலோடு போவதால்.
2. கூர்மம் - அமெரிக்க அதிபர் புஷ். தேவருக்கும் அசுரருக்கும் சண்டை மூட்டியது போல் இன்று மேற்கத்தியருக்கும், இஸ்லாமியருக்கும் சண்டை மூட்டிவிடுதல்.
3. வராகம் - பாட்டி - ஒரு பாட்டில் அவரே பன்றியாக நடிக்கிறார்.
4. நரசிம்மம் - ஸிங்கன் நராஹாசி - பெயர், கைகளால் கொல்வதற்காக பயிற்சி.
5. வாமனன் - கலீபுல்லா - விஸ்வரூபம்.
6. பரசுராமன் - ஃபெலெட்சர் - கொலைகாரர்.
7. ராமன் - அவதார் சிங் - ஒரு தார மணம்.
8. பலராமன் - பலராம நாயுடு - பெயர், காவல் துறை.
9. கிருஷ்ணன் - பூவராகன் - திரெளபதியை (அசின்) காத்தது, பாண்டவர் (சகாக்கள்), தூது செல்வது, காலில் அம்பு பட்டு இறப்பது.
10. கல்கி - கோவிந்த் ராமசாமி - நிகழ்கால உலகத்தை காப்பவர்.
(நன்றி அரூண்.)

மச்சவதாரம் இந்திய கதைப்படி மட்டுமல்லாது, வரலாறு, அகழ்வாராய்சி மூலமாகவும் மிகப் பழமையான கதையே. வேதக் கதைகளில் மனுவைக் (Manu) காப்பாறும் மீனும், ஆப்ராமிய மதக்கதைகளில் வரும் நோவா (Noah of the river) கதையும் பழைமையானவை. பாண்டியரின் சின்னமும், பல ஆப்பிரிக்க நாட்டு சித்திரங்களும்், திருமாலில் உள்ள 'மா'வும், மீன் ஆதி காலத்திலிருந்து வணக்கப் படுவதை பறைசாற்றும். மற்றபடி மீன் சாப்பிட்டதால் அது கடவுள். பிராமணர்கள் பால், மாட்டுக்கறி சாப்பிட்டதால் அவர்களுக்கு காமதேணு கடவுள் என்று மிக எளிதே.

நிற்க. மீன் கதை மிகப்பழைமையானது என்பதற்கு ஏற்றார்போல, தசாவதாரம் படத்தின் முதல் பகுதி மட்டும் தனியே 12ஆம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அதில் சைவரும், வைணவரும் அடித்துக்கொண்ட தமிழரின் அவமானகரமான வரலாற்றை சொன்னது ஓ போட வைத்தது. மற்றபடி காஞ்சி சங்கர மடத்தை கெடுத்த ஜயேந்திரர் உள்ளிட்ட பொறுக்கிகள், தீட்டு என்ற பெயரால் சாதியம் போற்றும் பிராமணர் (பூவராகன் உடலை கட்டிக்கொண்டு பாட்டி அழும்போது கூட வருபவர்), பிராமண பாஷை என்னும் பெயரில் வடமொழி கலப்பு (அசின் பேசுவது), முஸ்லீம்கள் என்றாலே அல்கொய்தா என்னும் அபாண்ட போலீஸ் நடைமுறை என்று பல பேரை சாத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் கமல் கதை, திரைக்கதை எழுதும்போது இருந்த அசாத்திய திறமையின் வெளிப்பாடு. படம் எடுக்க ஆரம்பித்தவுடன் எல்லாம் குட்டிசுவராய் முடிந்திருக்கிறது. மிக மோசமான ஒப்பனையை (Makeup) மன்னிக்கவே முடியாது. பலராம நாயுடு மற்றும் ஒப்பனையில்லாமல் வரும் கோவிந்த், ரங்கராஜ நம்பி பாத்திரங்கள் தவிர பிற ஒப்பனைகள் படுகேவலம்.

போயும் போயும் ஹிமேஷ் ரேஷ்மய்யா என்னும் தரித்திரத்தை பிடித்து வந்து இசையமைக்க வேண்டிய அவசியமென்ன? சண்டைக்காட்சிகள் மகா-மோசம் என்றால், கணிப்பொறி சித்திரவேலைகள் (graphics) தயாரிப்பாளரிடம் காசு தீர்ந்துவிட்டதை பறைசாற்றுகின்றன. கே. எஸ். ரவிகுமார் எல்லாம் ரஜினியோடு சேர்ந்து அல்லக்கை மடமெடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் ஒரு அருமையான கதையை, கருத்தை எடுக்கும் அளவுக்கு தமிழ் திரைப்பட உலகம் இன்னும் வளரவில்லை என்பதை தசாவதாரம் நிரூபித்திருக்கிறது. கமல் திரைப்படங்களை விடுத்து, புதினம் (novel) எழுத ஆரம்பித்தால் தமிழுக்கு அபாரமான சேவை செய்யமுடியும்.

Tuesday, May 06, 2008

பர்மா துயரம்

பர்மாவின் ரங்கோன், இர்ராவாடி மாகாணங்களை நர்கிஸ் என்னும் புயல் தாக்கியதாலும், புயலினால் கரையோரப் பகுதிகளை கடல் கொண்டதினாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 22000 பேர் இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவுவது நமது கடமை. கேர் அமைப்பு மூலம் உங்களால் முடிந்த அளவு உதவலாம்.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சீரழிவுகள் ஏற்படும்போது முன்னின்று உதவுவது இந்திய அரசின் அத்தியாய கடமை என்பது தில்லியில் உள்ள மரமண்டைகளுக்கு எப்போதுமே தோன்றுவதில்லை. வங்காள தேசம், பாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீர், இலங்கை, இந்தோனேசியா என்று சமீபத்தில் நடந்த பேரழிவுகளில் இந்தியாவின் உதவி மிகவும் சொர்ப்பமே.

உலக நாடுகள் பலவும் பர்மாவின் இராணுவ ஆட்சியை எதிர்ப்பதால் வரிந்து உதவ வரப்போவதில்லை. பர்மாவோடு ஓரளவு உறவு வைத்துள்ள பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால் நமது தார்மீகக் கடமை மேலும் அதிகம்.

Sunday, April 13, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday, April 06, 2008

பாரதியின் கடிதங்கள்!

இந்து நாளிதழின் ஆசிரியருக்கு பாரதியார் எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே படிக்கலாம்.

Friday, April 04, 2008

ஒகேணக்கல் பிரச்சனையில் தமிழரின் சிறுபிள்ளைத்தனம்!

ம்... என்னை தமிழ் விரோதி என்று கட்டம் கட்டுபவர்கள் இதையும் படியுங்கள்.

1. பெங்களூரில் சில திரையரங்குகளை சில முட்டாள்கள் தாக்கினார்கள் என்றால் அதற்கெல்லாம் தமிழ் திரைத்துறையினர் உண்ணாவிரதம் இருக்கவேண்டுமா? இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?
2. எதோ தென்னிந்திய திரைத்துறையினர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதாம். அதிலிருந்து கர்நாடக மாநிலத்தவரை இடைநீக்கம் செய்துவிட்டார்கள். நாம் மற்றவர்களை இனவெறியர் என்று சொல்லிக்கொள்கிறோம்! விந்தை.
3. கன்னடர்களின் உணவகங்கள் தாக்கப்படுவது, கர்நாடக பேருந்துகள் தாக்கப்படுவது என்று மிகவும் கேவலமாக நிலைக்கு தமிழகம் ஏன் சென்று கொண்டிருக்கிறது? இதையெல்லாம் கண்டிப்பது மற்ற தமிழரின் கடமையல்லவா?
4. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டக்கூடாது என்று தமிழக கட்சிகள் போராடவில்லையா? அதேபோல சில கன்னட அமைப்புகள் போராடினால் போராடிக்கொள்ளட்டுமே. கடைசியில் அரசுகளும், நீதிமன்றங்களும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளுக்கு எதற்கு பொதுமக்கள் அலட்டிக்கொள்ளவேண்டும்?
5. பாலக்காடு தொடர்வண்டி மண்டலத்தை பிரித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நாம் 'விட்டுக்கொடுத்தல்' பற்றி மற்றவர்களுக்கு பாடம் நடத்தமுடியுமா?
6. கருணாநிதி என்கிற கிழவன் தேவையில்லாமல் எரிந்துவிழுந்து தமிழ்நாட்டுக்கு குந்தகம் விளைவித்து வருவதை பத்திரிக்கைகள் ஏன் கண்டுகொள்வதில்லை? இராமர் பற்றி தேவையில்லாமல் பேசி சேது சமுத்திரத் திட்டத்தைக் கெடுத்தது யார்? ஒகேணக்கல் பற்றி ஒரு சென்னை விழாவில் குடிகாரன் மாதிரி பேசி கன்னடர்களை கிழப்பிவிட்டது யார்?

Monday, March 31, 2008

கிழக்கே போகும் சனநாயகம்!

ம்... தொடர்ந்து ஈழம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேனோ? பிரபாகரனை அழிப்பதில் வருகிற மே 10 கிழக்கு மாகாணத் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. நான் போன வார இடுகையின் பின்னூட்டப் பக்கத்தில் குறிப்பிட்டது போல, விடுதலைப் புலிகளுக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது. அதன் ஓலம் தமிழகத்திலும் ஒலிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை தெரிந்தோ தெரியாமலோ புலிகளுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாயிருக்கின்றன. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

வருகிற தேர்தல்கள் குறித்து இன்றைய இந்து நாளிதழ் தலையங்கம் இங்கே. விடுதலைப் புலிகளின் எடுபுடிகளான தமிழ் தேசிய கூட்டனி தவிர்த்த எல்லா கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இழக்கு மாகாணத் தமிழரும், இந்தியா மற்றும் உலகத் தமிழர் அனைவரும் சேர்ந்து ஒரே அடியாக புலிகளைத் தலைமுழுக வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணா, பிள்ளையன்), முக்கட்சி கூட்டனி (PLOTE, அனந்தசங்கரியின் TULF, EPRLF-Padmanaba Wing) மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP ஆகியவற்றுக்கு எனது ஆதரவும் வாழ்த்துகளும்!

விவரம் புரியாதவர்களுக்கு: இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் 13ஆம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் இந்த மாகாணங்களைக் கொண்டுவந்தது. இவற்றில் இரண்டு மாகாணங்கள் ஈழத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈழமக்கள் கொடுத்து வைத்திருந்தால் வடக்கு மாகாணத்திலும் புலிகள் வேரறுக்கப்பட்டு அங்கும் தேர்தல் நடத்தும் நிலை வரலாம்.

Thursday, March 27, 2008

'பிரபாகரன்' வளர்க! பிரபாகரன் ஒழிக!



மேலுள்ள நிகழ்படத்தில் சிதறும் பெண் சீமானின் அல்லது சுப. வீரபாண்டியனின் சகோதிரியாக இருந்திருந்தால் அவர்கள் சமீபத்திய தீவிரவாத ஆதரவு ரவுடித்தனத்தில் இறங்கியிருப்பார்களா? எவனோ, எவளோ சாகிறான். சும்மா வேலையில்லாமல் இருப்பதால் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் இந்த அல்லக்கைகளுக்கு சில உயிர்கள் காப்பாற்றப்படுவது பொறுக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் மூளைச்சலவை செய்யப்பட்டு தேவையில்லாமல் பலிகொடுக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்த விசயம்தான். பலியாடாகத் தேர்வு செய்யப்பட்டு பின் மனதை மாற்றிக்கொண்ட பின்பும், வெடித்துத்தான் ஆகவேண்டும் என்னும் புலிகளின் கொலைமுயற்சியிலிருந்து தப்பிவந்த சில தமிழரின் கதையை ஒரு சிங்களர் படமாக எடுத்திருக்கிறார். அந்த இயக்குனருக்கு சென்னையில் அடி, உதை! உண்மை வெளிவரக்கூடாது என்பதில் ஒரு செய்தியாளருக்கும், இன்னொரு கலைஞனின் படம் வெளியாகக்கூடாது என்பதில் ஒரு இயக்குனருக்கும் எவ்வளவு அக்கறை!

சமீபத்தில் ஈராக்கில் மனநலம் குன்றிய பெண்களின் உடம்பில் வெடிமருந்துகளை கட்டியனுப்பி தூரத்திலிருந்து வெடிக்கவைத்தார்கள். அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன வித்தியாசம்? மேலுள்ள ஒளித்துண்டில்கூட அந்த பெண் தான் கொல்லவந்த மனிதர் அலுவலகத்தில் இல்லை என்று தெரிந்தும், சும்மா வந்துவிட்டோமே என்பதற்காக யாரோ ஒருவரைக் கொன்று தானும் சாகிறாள். இதுதான் சுதந்திர போராட்டமா?

ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன். சாக விரும்பாதவர்களை மூளைச்சலவை செய்து சாக அனுப்பும் புலிகள் கடைசியில் அந்த பலியாட்டை பிரபாகரனோடு எதற்கு சாப்பிட அனுப்புகிறார்கள்? கடந்த இருபது ஆண்டுகளில் சண்டையே போடாமல் ஒளிந்துகொண்டு, தின்று தின்று பன்றி போல உடம்பை வைத்திருக்கும் அந்த கோழையைப் போய்ப் பார்த்தால், அதுவும் அவன் தின்றுகொண்டிருக்கும்போது பார்த்தால் ஏற்றியிருக்கும் மூளைச்சலவை இறங்கிவிடாதா?

Saturday, March 15, 2008

சங்கே முழங்கு!



தர்மசாலாவில் இருந்து இயங்கும் திபெத் அரசு இங்கே. திபெத் நன்பர்களின் தளம் இங்கே.

Friday, March 14, 2008

தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு!

ம்... ஈழத்தமிழரை அழித்தொழிக்கும் அந்த கெட்ட புலிகள் அல்ல! தமிழகக் காடுகளில் உலவும் நல்ல புலிகளைத் தான் சொல்கிறேன். இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து சுமார் 1400 புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக சமிபத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் தமிழகத்தில் ஒரு வேளை புலிகளைக் காப்பற்றும் முயற்சிகள் வேலை செய்ய ஆரம்பித்திருக்கலாம். தமிழகத்தில் தற்போது சுமார் 65-86 புலிகள் மீதமிருப்பதாகத் தெரிகிறது. இது பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய செய்தியில்லை என்றாலும் இருந்த புலிகளும் அழிந்தன என்று செய்தி வராமல் இருப்பதே பெரிய விசயம்.

புலிகள் விசயத்தில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இங்கேயும் வாங்க -> புலிகள் திட்டம், உலக வனவிலங்கு ஆணையத்தின் கையெழுத்து இயக்கம்.

அப்புறம், எவ்வளவு நாளைக்குத்தான் ஆர்க்கூட்டிலும், யூடூபிலும் பழியாய் கிடப்பீங்க. Connet2Earthத்துக்கும் வாங்க!

Monday, March 10, 2008

தமிழா இசையா?

கர்னாடக இசையில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று பல காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நான்கூட இது பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். இதற்கு எதிர்விவாதமாக ராம் சிறிராம் என்பவர் எழுதிய கட்டுரை இங்கே. தமிழில் பாடல்களே இல்லை என்னும் விதண்டாவாதத்தை விட இவரது கட்டுரை சற்று ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

முன்பைவிட இப்போது நிலைமை சற்று தேறிவருகிறது என்றுதான் நினைக்கிறேன். சென்னை சங்கமத்தில் கர்னாடக இசையும் இடம்பெற்றிருப்பது நல்லதே. அருணா சாய்ராம் போன்றவர்கள் பழந்தமிழ் பாடல்களை கச்சேரிகளில் பாடுகிறார்கள்.

கர்னாடக இசையும் தமிழரின் இசையே (?!) என்னும் நிலை வரவேண்டுமானால் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கென்றே நிறைய புதிய தமிழ் பாடல்கள் எழுதப்படவேண்டும். திரைப்படங்களுக்கெல்லாம் எழுதும் கவிஞர்களால் கர்னாடக இசைக்கு எழுதமுடியாதா என்ன?

Tuesday, March 04, 2008

கிரிக்கெட் என்னும் அரக்கன்!

கிரிக்கெட் என்னும் விளையாட்டு இரண்டு வேலை உணவுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடும் கோடிக்கணக்கானோரின் முகத்தில் பூசப்படும் கரியாகி வருகிறதா? Cricinfo வில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரை சிந்திக்கத் தக்கது.

ஆறு பந்தில் சிக்ஸர் அடித்ததற்காக யுவராஜ் சிங்கிற்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்தது. சும்மா ஒரு மூன்று நாடுகள் போட்டியில் நேற்று வென்றதற்கே பத்து கோடி உரூபாய் பரிசு அறிவித்திருப்பது. பத்து காசு கேட்டு குழந்தையுடன் பிச்சை எடுக்கும் சிறுமிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்படும் மும்பை நகரின் மற்றொரு பகுதியில் பல கோடி உருபாய்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஏலமிடப்படுவது, அது பெருமையாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் யாராவது இன்னும் இருந்தால், இந்த capitalist கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தலாம். ஒரு சின்ன யோசனை. வருகிற ஏப்ரல் மே மாதங்களில் நடக்கவிருக்கும் IPL என்னும் அசிங்கத்தை புறக்கணிப்போம்! அதன் மூலம் நாம் சேமிக்கும் மின்சாரம், மைதான சீட்டு பணம், நமது நேரம் ஆகியவற்றுக்கு ஈடான ஒரு தொகையை, ஸ்டீவ் வாவ் பிரபலப்படுத்திய உதயன் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவோம்.

இந்து சமவெளியினர் திராவிடரா?

ஆ! சும்மா கவணத்தை கவர்வத்றகாக வைத்த தலைப்புதான்! ஃபின்லாந்து நாட்டு இந்திய ஆய்வாளர் (Indologist) அஸ்கோ பார்போலாவின் பேட்டி இந்து நாளிதழில் வந்திருக்கிறது. இங்கே.

இந்து சமவெளி எழுத்துகள் ஒரு திராவிட மொழியை எழுதப் பயன்பட்டிருக்கலாம் என்றும், தமிழகத்தில் ஜைமினி சாம வேதம் காப்பாற்றப்படுவது குறித்தும், தமிழக பழங்குடியின மக்களின் மொழி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை பதிவு செய்து, அதிலிருந்து இந்தியாவின் மிகத்தொன்மையான வரலாற்றை அறிய முயலவேண்டுமென்றும் பேராசிரியர் பார்போலோ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 28, 2008

கற்றதும் பெற்றதும் ஏராளம்!

எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் காலமானார். வருத்தப் படவைக்கும் செய்தி. அவர் மிகவும் விரும்பிய அரங்கனின் பாதங்களை சேர்ந்திருப்பார் என்று நம்பலாம்.

என்னைப் போன்ற அல்லக்கைகளின் தமிழை சுஜாதா எவ்வளவு தூரம் செதுக்கியிருக்கிறார் என்பது வியக்கவைக்கும் ரகசியம். பல வருடங்களாக அவரின் எழுத்துகளை விகடனில் படித்துவருகிறேன். அவரது எழுத்து அறிமுகமாகும் முன்பே 'கொலையுதிர் காலம்', 'என் இனிய இயந்திரா' என்று தொலைக்காட்சி வழியாக அவரின் விசிறியாகிவிட்டேன். அவரது குறிப்புகளை வைத்து நான்கூட ஹைக்கூ எழுதலாமா என்று நப்பாசைப் பட்டதுண்டு!

சுஜாதாவின் நாவல்கள் அனைத்தையுமே படித்த நன்பன் ஒருத்தனை எனக்குத் தெரியும். விகடனில் வந்தவை தவிர்த்து நான் ஒரேயொரு நாவலை புத்தகமாகப் படித்திருக்கிறேன். சிப்பாய்க் கலகம் பற்றிய கதை. பெயர் நினைவில்லை. எனக்கு காகித ஓட்டே போடாத மின்னனு வாக்காளன் என்னும் பெருமையை (?) வாங்கித்தந்ததிலும் அவருக்கு பங்கிருக்கிறது. அம்பலத்துக்கும் அவ்வப்போது நான் போவதுண்டு.

அவரின் திரைப்பட பங்களிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும், 'கணேஷ் வசந்த்' மற்றும் 'சீரங்கத்து தேவதைகளை' அவர் இருக்கும்போது படமாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாகயிருந்திருக்கும்.
ழ கணினி முயற்சியும் கொஞ்சம் டல்லடிக்கிறது. யாரேனும் இந்த இரண்டையும் செய்து முடிக்கலாம். சென்னையில் நிகழ்கலைகளுக்கு (performing arts) பிரத்யேக அரங்கம் வேண்டும் என்று அவர் கேட்டது சிங்கப்பூர் Esplanade இல் நின்றபோது சரியென்று பட்டது.

கற்றதும் பெற்றதும் படிப்பதற்காகவே விகடன் சந்தா வைத்திருந்தேன். ஒரு பிறந்தநாள் பற்றிய அத்தியாயத்தில் "காலாற நடந்துசென்று திருவல்லிக்கேணியில் எனது குடும்ப வீட்டை பார்த்தேன்" என்று அவர் எழுதியது என்னை நெகிழவைத்தது நினைவிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் இளைஞர்களை இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து நாட்டுக்கு உழைக்கச் சொன்னார்!

பல வழிகளிலும் அவரிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். அதை வைத்தே இன்னும் பல காலத்துக்கு நான் ஜல்லியடிக்கமுடியம்! நன்றி.

மேலும்: எழுத்தாளர் சுஜாதா, சுஜாதாலஜி.

Tuesday, February 26, 2008

கலக்கியது திரிபுரா!

திரிபுரா மாநிலத்தில் சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் 92 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்து கலக்கியிருக்கிறார்கள். இது பற்றிய பத்திரிக்கை செய்தி இங்கே. திரிபுரா செய்தித்தளம் ஒன்று் இங்கே. இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மூன்று மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே. மாணிக் சர்க்கார் ஆட்சி தப்புமா என்று மார்ச் 8 அன்று தெரியும்!

Monday, February 25, 2008

குப்பை படத்துக்கு ஆஸ்கரா?

நேற்றிரவு The Counterfeiters என்னும் ஆஸ்திரிய நாட்டுப் படம் பார்த்தேன். படு கேவலம். அதற்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. கொடுமைடா சாமி!

படு கேவலம்னா பி.வாசு படம் அளவுக்குக் கேவலம். சும்மா holocaust பற்றி தலைப்பு வச்சுட்டு ஒரு கருப்பு திரையைக் காட்டினாகூட ஆஸ்கர் கொடுத்திடுவாங்க போலயிருக்கு. Manufactured Emotions கொண்ட ் அழுகாச்சிப் படம். அதைக்கூட ஒழுங்கா எடுக்கத்தெரியல.

ஆஸ்விட்சு மூகாமிலிருக்கும் யூத நாயகன் எவ்வளவோ சிரமத்துக்கு அப்புறம் மருந்து வாங்கிட்டு வருவாரு, ஆனா இழுத்துகிட்டு இருந்தவரு, நாயகன் வருகிற நேரத்துல சாவாரு. வில்லன் நாயகன் மேலே சிறுநீர் கழிப்பாரு. ஒருத்தரு மணிக்கட்டில வெட்டிக்கிட்டு சாவாரு. நாசிக்கள் தோற்று ஓடினப்புறம் முகாம்வாசிகள் ஒரு நல்ல படுக்கையைப் பார்த்து கண்ணீர் வடிப்பாங்க. இந்த மாதிரியான, ஒரு பதினையாயிரம் படங்களில் பார்த்த காமெடி காட்சிகளை வைத்து ஆஸ்கர் வாங்கிட்டாங்க. அசிங்கம்.

இந்த படத்துக்கு விருதாம். ஆனா திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான 4,3,2 க்கு nomination கூட கிடையாதாம்! அரசியல் காரணங்களுக்காக 4,3,2 சேர்க்கப் படவில்லை என்பது தெரிந்ததுதான். (கருக்கலைப்பு பற்றிய படம் குடியரசுக் கட்சிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும்.) இது ஒரு மோசடின்னு சில விமர்சகர்கள் கூட எழுதியிருக்காங்க. ஆனா 4,3,2 வந்த ஆண்டில் ஒரு கேவலமான படத்துக்கு விருது கிடைத்தது பெரும் அவமானம்.

Thursday, February 21, 2008

இப்படிக்கு ரோஸ்!

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ..." என்னும் எரிச்சலூட்டும் விளம்பரம் இந்த முறை உண்மையாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒரு திருநங்கை நடத்தும் 'இப்படிக்கு ரோஸ்' என்னும் நிகழ்ச்சி வரப்போகிறதாம். பாராட்டுகள்!

Monday, February 11, 2008

4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள்

பயம்... நடுக்கம்... திரையரங்கிலிருந்து எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம்.

4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள். (ரோமானிய மொழி) இந்தப் படத்தைப் பார்த்து நடுங்காதவன் ஆண்மகனேயில்லை. ஆமாம்! ஏனென்றால் பெண்கள், குறிப்பாக அம்மாக்கள் இந்தப் படத்தை நடுங்காமல் பார்ப்பார்களாயிருக்கும். ஆண்களால் முடியுமாயென்று தெரியவில்லை. என்னால் முடியவில்லை.

நான் பார்த்த படங்களிலேயே தாங்க முடியாத படங்களென நான் கருதுவது Cries and Whispers மற்றும் The Return. முதலாவது பர்க்மனின் தேவையில்லாத (ஆனால் புகழ்பெற்ற) சித்தரவதை. இரண்டாவதை எடுத்து குலை நடுங்க வைத்தவர் அடுத்து படமெடுக்கலாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்!

சரி 4,3,2. இதோட கதை பற்றியெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் பாருங்கள். பெண்களுடன் சேர்ந்து பார்ப்பது நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இது பெண்களைப் பற்றி ஒரு ஆண் இயக்குனர் (Cristian Mungiu) ஆண்களுக்காக எடுத்த படம்... பாடம்.

ஹாயல்லாஹ்!!



ஆஹா, நதீன் லபாக்கியை எப்படிய்யா இத்தனை நாளா எங்ககிட்டேர்ந்து மறச்சீங்க? லெபனான் பெண்களும் இத்தாலிய ஆண்களும் இருப்பதிலேயே அழகானவர்கள் என்று சில வேலையத்த ஆராய்ச்சிகள் தெரிவிப்பது வழக்கமே. அதுக்காக இப்படியா? ஆயிரக் கணக்கான வருடங்களின் வரலாறு தாங்கி. பல மதங்களைத் தழுவி, அரபிக், பிரஞ்சு என்று கொஞ்சி, மேற்கும் கிழக்கும் கலந்தடிக்கும் பெண்களுக்கு 'அழகிகள்' என்னும் பட்டம் மிகவும் சாதாரணமாகப் படுகிறது!

ம்... நான் நேற்று பார்த்த Caramel இன் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை போலிருக்கிறது!

Saturday, February 09, 2008

சென்னையில் பிரஞ்சுத் திரைப்பட விழா

சென்னை சத்யம் திரையரங்கில் Alliance Francaise ஆதரவுடன் நடைபெறும் பிரஞ்சுத் திரைப்பட விழா துவங்கியிருக்கிறது. இது பற்றிய செய்தி இங்கே.

நீங்கள் சென்னையில் இருந்தும் Caramel (Sukkar banat) உள்ளிட்ட படங்களில் எதையாவது ஒன்றையேனும் பார்க்க உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை 'கோவிந்தா' ஆகிக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம்! ஆ!!!

சரி அப்படியே, போன வாரம் நான் பார்த்த படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே.

Mar adentro
(Sea Inside) - மனிதாபிமானக் கொலை (Euthanasia) பற்றிய ஸ்பானியப் படம். பார்க்கலாம்.

Argent de poche, L'
(Small Change or Pocket Money) - சுட்டிகளின் லூட்டி! பார்க்கலாம். சொர்கத்தின் குழந்தைகள், நாய் பிழைப்பு போன்ற படங்களை ரசித்தவர்கள் இதையும் ரசிப்பார்கள்.

Domicile Conjugal (Bed and Board) - Francois Truffat எடுத்த பிரஞ்சு new wave படங்களில் ஒன்று. Antoine Doinel என்ற புனை பாத்திரம் வரும் ஐந்து படங்களில் நான்காவது. Claude Jade இன் கொள்ளை அழகுக்காகப் பார்க்கலாம்!

Thursday, February 07, 2008

அகிம்சை பட்டு

பட்டுப் புடவைகள்/வேட்டிகள் எவ்வளவு கொடூரமானவை என்று என்னுடைய இந்த ஆங்கில இடுகையில் எழுதியிருந்தேன். ஒரு பட்டுப்புடவை தயாரிக்க சுமார் 1500 பட்டுப் புழுக்கள் கொதிக்கின்ற வெந்நீரில் வேகவைக்கப்படும் அநியாயத்தை என்னவென்று சொல்வது? கடவுள் சிலைகளும் கன்னிப் பெண்களும் பட்டுத்துணி உடுத்தி வந்தால், ரசிப்பதா?! வெறுப்பதா?

இந்தக் கொடூரத்துக்கு சிறந்த மாற்று, பட்டுத் துணிகளையே அணியாமல் இருப்பதுதான்! மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கஷ்டப்படும் மக்களிருக்க பட்டு என்னும் ஆடம்பரம் எதற்கு? அப்படியே அணிந்துதான் ஆகவேண்டுமென்றால் 'அகிம்சை பட்டு' என்னும் துணிகளை அணியலாம். பட்டுப் புழுக்கள் தாமே துறக்கும் கூடுகளிலிருந்து இந்தப் பட்டுத்துணிகள் தயாரிக்கப் படுகின்றனவாம்.

இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி இங்கே. சென்னை பூம்புகார் அங்காடியில் அகிம்சை பட்டு விற்கப்படுவது குறித்து போன வருடம் வந்த இந்து நாளிதழ் செய்தி இங்கே.

Wednesday, January 30, 2008

போடுங்கம்மா ஓட்டு!

அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்தெடுக்க உட்கட்சித் தேர்தல்கள் நடந்துவருவது நீங்கள் அறிந்ததே. தேர்தல்கள் குறித்து லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த இருவர் நடத்திவரும் யூடூப் அலைவரிசை மிகவும் பிரபலமாகிவிட்டது. சும்மா சொல்லக்கூடாது...சிரித்து சிரித்து வயிரே புண்ணாகிவிடும் போலிருக்கிறது! நீங்களே பாருங்களேன் ...

Tuesday, January 29, 2008

யானைக்கும் அடிசறுக்கும்!

நான் மிகவும் மதிக்கும் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தினமணியில் எழுதிய கருத்து என்னை வியப்பில் ஆழ்த்தியது! முதலில் அவர் சொன்ன கருத்தை கீழே தருகிறேன்.

-------------- தினமணி 26.1.2008 ---------------
"சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது, இயற்கையான காலக் கணக்கீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறியிருப்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்பதற்கு இல்லை.
ஏனெனில், சித்திரை முதல் தேதியன்று (ஏப்ரல் 13 14) முற்காலத்தில் நிகழ்ந்த விசு (பகலும் இரவும் ஒரே கால அளவைக் கொண்ட நாள்) தற்காலத்தில் பங்குனி 8 9 தேதிகளிலேயே (மார்ச் 21 22) நிகழ்ந்து விடுகிறது.இது போன்றே, ஐப்பசி விசு, தட்சிண அயனம், உத்தர அயனம் ஆகிய வானவியல் இயற்கை நிகழ்வுகளும் இன்றையப் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு முன்னரே நிகழ்ந்து விடுகின்றன. "சித்திரை' விசு பங்குனியிலும், "அய்ப்பசி' விசு புரட்டாசியிலும் தற்காலத்தில் நிகழ்கின்றன. இவை அறிவியல் அடிப்படையிலான இன்றைய வானவியல் காட்டும் நிதர்சன உண்மைகளாகும். இக்குழப்பத்துக்கு நம் முன்னோர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவ்வப்பொழுது வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் யதார்த்த நிலைகளைக் கணக்கிட்டு பஞ்சாங்கங் களை காலத்துக்கு ஏற்ப அறிவியல் கண்ணோட்டத்தில் திருத்திக் கொள்ளாத நமது தலைமுறையினரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற் காலத்தில் அயனப் பிறப்பு நாட்கள் தலைகீழாக மாறி, உத் தராயணப் புண்ணிய காலத்தை தட்சிணியானப் பிறப்பு நாளான்று கொண்டாட நேரிடும்.இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்க ளின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு?
வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதை காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டு விடலாம்."

அய்ராவதம் மகாதேவன்,
சென்னை88.
----------------------------------------------------

நன்றி: தினமணி.

1. வரலாற்று ரீதியிலும், தமிழ் மரபின் படியும் சித்திரைதான் தமிழர் புத்தாண்டு என்பதை மகாதேவன் உறுதிப்படுத்தியது குறித்து மகிழ்ச்சியே!
2. Equinox Correction செய்யாததால் பஞ்சாங்கங்களும், தமிழர் நாட்காட்டிகளும் அறிவியல் துல்லியத்தை இழந்துவிட்டன என்று மாநாடுகளில் அவர் தெரிவித்து வருவது குறித்தும் மகிழ்ச்சியே!
3. Equinox Correction செய்யாத பட்சத்தில் சித்திரையில் வரும் புத்தாண்டின் தேதி (Date) தவறு என்று குறிப்பிட்டது குறித்தும் மகிழ்ச்சியே!

இப்போ கேள்விகள்:

1. பஞ்சாங்கத்தை மாற்ற நமக்குத் துணிவில்லை என்று கடிந்துகொள்ளும் இவருக்கு பொங்கலும் தவறான தேதியிலேயே கொண்டாடப் படுகிறது என்று தெளிவாகச் சொல்லத் துணிவில்லாமல் போனது ஏன்? Winter Solstice என்ற உத்தராயணம் அன்றுதான் பொங்கல் என்னும் உழவர் திருநாள் என்றால், அது December 21 அன்றுதானே கொண்டாடப் படவேண்டும்?
2. எல்லா தமிழ் நாட்களுமே (விதைக்கும் நாள், அறுவடை நாள்) தப்பு என்றால் January 14, 15 என்று ஆங்கில நாட்காட்டி வைத்து பொங்கலைக் கொண்டாடலாம் என்று வெட்கமில்லாமல் சொல்கிறாரா?
3. பொங்கல் மற்றும் சித்திரைப் புத்தாண்டு இரண்டுமே தப்பான தேதியில் கொண்டாடப் படுவது தெரிந்தும், இரண்டில் ஒன்றை அழித்து ஒரே 'தவறான' நாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன?
4. எகிப்தில் கி.மு. 300 மற்றும் கி.மு. 200 வாக்கில் தமிழ் பிராமியில் எழுதப்பட்ட இரண்டு ஓட்டுத் துண்டுகள் இடைக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். என்னதான் carbon dating செய்தாலும் அந்த ஓட்டுத் துண்டுகள் சரியாக எந்தத் தேதியில் உருவானது என்று கணிக்கமுடியாதுதானே? அதனால் இரண்டு ஓட்டுத்துண்டுகளில் பெரியதாய் தெரியும் ஓட்டுத்துண்டையோ, பழையது என்று கருதப்படும் ஓட்டுத்துண்டையோ வைத்துக்கொண்டு மற்றதைத் தூக்கி எறிந்துவிடாலாம் என்று இவர் சொல்வாரா?

ஐராவதம் என்ற யானைக்கும் அடிசறுக்கும் போலிருக்கிறது.

உங்கள் யாருக்கேனும் ஐராவதம் மகாதேவன் அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியுமென்றால், அவரிடம் இதுகுறித்து வினவி எனக்கும் சொல்லுங்களேன்!

Sunday, January 27, 2008

கிழங்கட்டைகள் மாநாடு - 1921 - பகுதி 2

முதல் பகுதி இங்கே.

மறைமலை அடிகள்: அதுல என்ன பிரச்சனைன்னா, தமிழுல சமசுகிரத வார்த்தைகளோட கலப்புனால தமிழே அழிஞ்சுண்டு வருது. நான் வடமொழி எழுத்துக்களைத் தவிர்த்து முடிந்தவரை தமிழ் எழுத்துக்களையும், முக்கியமா தமிழ் வார்த்தைங்களையும் பயன்படுத்தனும்னு ரொம்ப நாளா சொல்லிண்டுவரேன்.

வீரமாமுனிவர் (Fr. Beschi) என்கிற பாதிரியார், எப்பவோ ஆரம்பிச்ச பணி இன்னும் முடியவேயில்ல. இது முடியற வேலையும் இல்ல. பிற மொழிகள்லேர்ந்து புதுசு புதுசா சொற்கள் வந்துட்டேதான் இருக்கும். நாமலும் விடாம அதையெல்லாம் தமிழ் ஆக்கிட்டேதான் இருக்கனும்.

கிழடு 1: (மனதுக்குள்) ஐய்யய்யோ! இன்னிக்கு நம்மை ஆத்துக்கு அனுப்புவாளா மாட்டாளா? வார்த்தைகள் வந்துண்டேயிருக்கும்னா என்ன ... குமாஸ்தா கொண்டுவருவாரா? நான் மூக்குக்கண்ணாடி கூட கொண்டுவரலியே! எப்படி படிக்கிறது. எப்படி மாத்தறது?

மறைமலை அடிகள்: (சலசலப்புகளை கவனிக்காமல்...) இன்னிக்கு நாம கூடியிருக்கறது தமிழ் மாதப் பெயர்கள், ஆண்டுப் பெயர்கள், ஓரைப் பெயர்கள்... இவையெல்லாத்துலயும் இருக்குற வடமொழிப் பெயர்களுக்கு மாற்றா நல்ல தமிழ்ப்பெயர் கண்டுபிடிக்கத்தான். அதோட இயேசு கிருசுதவர் பெயரில் ஆங்கிலேயர்கள் வைத்திருக்கும் ஆண்டுக் கணக்குபோல நாமும் தமிழுக்காக திருவள்ளுவர் ஆண்டு உருவாக்கலாமான்னு ஆலோசித்து முடிவுசெய்யலாம். இப்ப நீங்க உங்களோட கருத்துகள சொல்லுங்க.

கிழடு 2: அட என்ன அடிகளாரே இப்படி சொல்லீட்டிங்க? நாம பயன்படுத்தற நட்ஷத்திரம், வருஷம், மாசப் பேரெல்லாம் ஆரியர்கள் நம்ம மேலத் திணிச்சதுதானே?! இந்த காலண்டர் எல்லாத்தையுமே தூக்கிக் கடாசிட்டு நாம புதுசா எதாவது கண்டுபிடிக்கனும். பல ஆயிரம் ஆண்டுகளாய் மணி, நாள் பார்க்கக்கூட இன்னொருத்தனுக்கு கைக்கட்டி நின்ன நிலைமை ஒழியனும்.

கிழடு 1: (மனதுக்குள்) பகவானே! காலண்டர் கண்டுபிடிக்கனுமா?!! (வாய்விட்டு) அட என்ன ஓய் சொல்றீர்? இதெல்லாம் எங்களவா கொண்டுவந்ததுன்னா, இங்கே இருந்தவா யூஸ் பண்ணின காலண்டரெல்லாம் எங்கப் போச்சு? அதைக் கண்டுபிடிச்சு மாத்திட்டா போறது. என்னமோ தமிழா காலண்டரெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுங்கற மாதிரி அபசகுனமா பேசுறீரே?

கிழடு 2: யோவ்! நீயென்னய்யா வெளக்கென்ன மாதிரி பேசிகிட்டு? ஆதிதமிழன் எப்படியா காலண்டரெல்லாம் கண்டுபிடிச்சிருப்பான்? அவனே வேட்டையாடினோமா, மீன் பிடிச்சோமா, விவசாயம் செஞ்சோமா, கல்லு நட்டு கும்மிட்டோமான்னு இருந்தான். இந்த காலண்டர் கீலண்டரெல்லாம் கண்டுபிடிக்க அவனுக்கென்ன உம்மமாதிரி உட்காந்த எடத்துல மாட்டுக்கறி தட்சனையா கிடைச்சது?

கிழடு 1: அபச்சாரம் அபச்சாரம்! நாங்கல்லாம் மாமிசம் சாப்பிடறவாயில்ல. பசு காமதேணு! தப்பா பேசாதேள். அதை விடும். காலண்டரேயில்லன்னா எப்படி ஓய் உங்களவா அறுவடை நாளெல்லாம் எண்ணியிருப்பா?

கிழடு 2: (யோசிக்கிறார்...) ம்... அது எவனாவது நல்ல பையனா புடிச்சு ஒரு மரத்துல வவ்வாலு மாதிரி தொங்க விட்டுடுவாங்கப்பா. அவன் வேலையே பொழுது விடிஞ்சா மரத்துல பிராண்டி கோடு போடறதுதான். அப்படியே நாள எண்ணிடலாமில்ல?

கிழடு 1: நீங்க சொல்றது வாஸ்தவம்தான்! ஆனா இந்தகாலத்துல அப்படி பொறுப்பா கோடு போட மனுஷா கிடைப்பாளா ஓய்?

கிழடு 2: (மீண்டும் யோசிக்கிறார் ...) பாண்டிச்சேரில சுப்புன்னு ஒரு பையன் இருக்கான். தமிழ்ன்னா அவனுக்கு வெறி. பாரதிதாசன்னு பேரெல்லாம் மாத்திக்கிட்டான். தை மாசந்தான் தமிழ்ப் புத்தாண்டுன்னு பாட்டெல்லாம் பாடியிருக்கான். அவன வேணும்னா கேட்டுப்பாக்கலாம், தொங்கறியாடான்னு...

மறைமலை அடிகள்: யோவ்! உங்களையெல்லாம் எவன்ய்யா தமிழறஞருன்னு அறிவிச்சான்? அசிங்கமா அரசியல் பேசிட்டு இருக்கீங்க. விவரம் தெரியலன்னா ஒரு ஓரமா உட்காந்து கதை கேளுங்க. கன்னாபின்னான்னு உளறி இங்க வந்திருக்கிற பெரிய மனுசங்க பேரைக் கெடுக்காதிங்க.

தொடரும் ...

Saturday, January 26, 2008

கிழங்கட்டைகள் மாநாடு - 1921

இது தமிழன் புத்தாண்டு எப்போது ஆரம்பிக்கிறது என்றுகூடத் தெரியாமல் குழம்பி, அவன் நிலைமை சந்தி சிரிப்பதற்குக் காரணமாயிருந்த "தமிழறிஞர் மாநாடு" எப்படி நடந்திருக்கும் என்பதை சித்தரிக்கும் நையாண்டி நாடகம். இதில் சில வரலாற்றுச் செய்திகள் தப்பித்தவறி இடம்பெறலாம்!

இடம்: சென்னை பச்சையப்பன் கல்லூரி.

நாள்: 1921 இல் எதோவொரு ஞாயிற்றுக்கிழமை.

பங்குபெறுவோர்: மறைமலை அடிகள், திரு.வி.கல்யாணசுந்தரம், கி. ஆ. பெ. விசுவநாதன் மற்றும் சிலபல கிழடுகள்.

வரவேற்புக் காண்டம்:

கா. நமச்சிவாயம்: நாம இன்னிக்கு எதுக்கு இங்க கூடியிருக்கிறோமுன்னு எனக்கு சரியா தெரியல! காலையில் எங்க வீட்டுக்காரம்மா ஆ(பசு)வின் பால் வாங்கிட்டு வாங்கன்னு கடைத்தெருவுக்கு அனுப்பினாங்க. பச்சையப்பன் கல்லூரி வாசல்ல மறைமலை அடிகளார் நின்னுட்டு ஆள்பிடித்துக் கொண்டிருந்தாரு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும். எதுன்னாலும் அவரையே கேளுங்க. நான் இங்க வந்தேன்னு தெரிஞ்சாலே வெள்ளைக்காரத் துரை என்னை பேராசிரியர் பதவியிலிருந்து தூக்கிடுவான். என்னை விட்டுடுங்க! நான் கிளம்பறேன்!

மறைமலை அடிகள்: யோவ்! ஓடாத நில்லுய்யா ... சரி போகட்டும். அதெனய்யா "மறைமலை அடிகளார்"? நான் என்ன போலிச் சாமியாரா? எங்க அப்பனாத்தா அழகா வேதாசலம்ன்னு பேரு வச்சாங்க. சரி பேருலயே வேதம் இருக்கே அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வேதம் படிக்கலாமுன்னு ஆரம்பிச்சேன்.

அதுல பாத்தீங்கன்னா எனக்கு சமசுகிரதம் ஒரளவு நல்லாவே தெரியும். ஆனா அது பணினிங்கறவர் (Panini) காலத்துலயிருந்து இருக்கிற செம்மையான (Classical) சமசுகிரதம். ரிக்வேதமெல்லாம் எழுதினது அதுக்கும் முன்னாடி இருந்த பழம் சமசுகிரதம் (Old Sanskrit). அந்த சமசுகிரதம் பாரசீகத்துல (Iran/Afghanistan) புழங்கினதா சொல்றாங்க. அது கிட்டத்தட்ட சோராசுதிரர் பேசுன அவசுதா (Old Avestan) மாதிரி இருக்கும்.

யோவ்! சோமசுந்தரம் இல்லைய்யா... சோராசுதிரர் (Zoroaster)! பம்பாயிலிருந்து கஞ்சா ஏற்றுமதி (Opium Export) செஞ்சு வந்த பணத்துல உருக்காலை (TISCO) ஆரம்பிச்சிருக்காங்கலே டாடா (Tata) குடும்பம், அவங்களோட மதகுருதான் சோராசுதிரர். அவங்க மதத்துக்காரங்கள பாரசின்னு (Parsis) அழைப்பாங்க.

சரி அத விடுங்க. அந்த கடினமான சமசுகிரதத்துல எழுதின அத்துனை வேதப் பாட்டுங்களையும் என்னோடு சமசுகிரத அறிவ வச்சிண்டு புரிஞ்சுக்க முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டேன். அதனால வேதம் (மறை) மலை மாதிரி. நான் அந்தமலையோட அடியில் நின்னு படிச்சுகிட்டிருக்கேன்னு அடக்கமா ஒரு பேரு வச்சிக்கிட்டேன். நீங்க என்னடான்னா அடிகளார் கிடிகளார்ன்னு சொல்லி என்னை செயிலுக்கு அனுப்பிடுவீங்க போலயிருக்கே?!

சே! நாம எதுக்கு கூடியிருக்கோங்கறதே மறந்துடப்போவுது. நாம தமிழ் பத்தி பேசவந்திருக்கோம். அதுல என்ன பிரச்சனைன்னா...

கிழடு 1: (மனதுக்குள்) நாசமாப் போச்சு! இப்பதான் இவரு பேசவே ஆரம்பிக்கிறாரா? நான் சீக்கிரம் முடிஞ்சிடும். மத்தியாணம் ஆத்துக்கு போய், கெளசல்யா பண்ணின சாத்துமது சாதத்துல வாழைக்காய் கர்னமது போட்டு ஒரு பிடி பிடிக்கலாமுன்னு நினைச்சனே!

தொடரும் ...

Friday, January 25, 2008

கட்டற்ற மென்பொருள் மாநாடு!

சென்னையில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் மாநாடு பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆமாச்சு எழுதிய பின்வரும் மடலைவிட சிறப்பாக என்னால் எழுதமுடியாது. நீங்களே படித்துக்கொள்ளுங்கள்!

----- ஆமாச்சுவின் மடல் -----

நல்ல சேதி! நல்ல சேதி! இத்தனை நாளா நம்மைப் பிடித்திருக்கும் அடிமை மோகச் சங்கிலியிலிருந்து விடுதலையடைய மகத்தானதொரு வாய்ப்பு! என்ன? எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் மென்பொருளை எட்டிப் பிடிக்க விழைவோருக்கானது இது! தப்பென தெரிந்தும் காப்பியடிக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய ஒரு சந்தர்ப்பம்!

குட்டிக் குழந்தைகள், அன்புத் தோழர்கள் ஆற்றல் மிக்க தொழில் முனைவோர் என அனைவருக்கும் அரியதொரு வாய்ப்பு! விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் விண்டோஸை விரட்டி தைப் பிறந்தக் கையுடன் வழிக் காட்ட நாங்கள் செய்திருக்கும் இவ்வேற்பாடு!

என்ன? கட்டற்ற மென்பொருள் மாநாடு

அப்டீன்னா? குனு/ லினக்ஸ் இயங்குதள ஆற்றல்களின் அணிவகுப்பு

எங்கே? எம்.ஐ.டி வளாகம், குரோம் பேட்டை, சென்னை

எப்போ? பிப்ரவரி 01, 02, 03

விசேஷம்? இது உங்களுக்கானது

விவரங்களுக்கு? http://fossconf.in

வேறென்ன? அடடே! வல வலன்னு பேசாம! வந்து தான் பாருங்களேன்!

-----------------------------

இவ்வளவு அழகா கூப்பிடறாரில்ல? போய்தான் பாருங்களேன்! மாநாட்டை நடத்தும் Chennai LUG மற்றும் NRCFOSS ஆகியோருக்கு ஒரு ஓ! போடுங்க. அவர்களோடு சேர்ந்து நீங்களும் பங்களிக்கலாம்.

Thursday, January 24, 2008

சித்திரையைக் காப்பாற்றுங்கள்!

தமிழரின் புத்தாண்டு தினம் (சித்திரை முதல் நாள்) அழிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கலாசாரத்தை சீரழித்த தாலிபான்களே கண்டுவியக்கும் அளவுக்கு இன்று தமிழ்க் கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சி நடந்துவருகிறது. மா சே துங் கலாசாரப் புரட்சி என்ற பெயரால் சீனர்களை வீணர்கள் ஆக்கியதுபோல் இன்று தமிழரின் பண்பாட்டு வேர்களைப் பிடிங்கி முட்டாள்களாக்கும் முயற்சி நடக்கிறது. தமிழ்த்தாயின் கண்ணீர் துடைக்க வாரீர்!

1. சூரியன் (solar), சந்திரன் (lunar) அல்லது இரண்டும் சேர்த்து (lunisolar) நாட்களைக் கணக்கிடுவது எல்லா சமுதாயங்களிலும், எல்லா மக்களிடத்தேயும் இருக்கும் வழக்கமே. ஆங்கில Calendar சூரிய நாட்காட்டிதானே? இந்தமுறையை மூடப்பழக்கமாகவும், மத நம்பிக்கையாகவும் சித்தரிப்பது எதற்காக?
2. திருவள்ளுவர் கி.மு. 31 இல் அதுவும் தைத்திங்கள் இரண்டாம் நாளில் பிறந்தார் என்னும் படுகேவலமான மூடநம்பிக்கையை மக்களிடையே பரப்பும் முயற்சி நடக்கிறது. வாழ்க பகுத்தறிவு!
3. இந்தியாவில் தமிழகமும், கேரளம், அசாம், வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சூரிய (solar) நாட்காட்டியை பயன்படுத்துகின்றன. மற்ற மாநிலங்களின் கலாசார நாட்காட்டிகள் lunisolar முறையைப் பயன்படுத்துகின்றன. கேரளம் மகர சங்கராந்தி (January), விஷு (April), உழவர் திருநாளாக ஓணம் (August) என்று படுஆர்வமாக தனது கலாசாரத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் தமிழன் சித்திரை முதல் நாளைக் கொண்டாடுவது இங்கு சிலருக்குப் பிடிக்கவில்லை!
4. பஞ்சாபில் பொங்கலை லோரியாகவும், வைகாசி (நம் கணக்கில் சித்திரை) முதல் நாளைப் புத்தாண்டாகவும் (பைசாக்கி) வெகு விமர்சியாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழும் தெரிந்த பஞ்சாபி ஆளுனர் பர்னாலாவின் உரையைக் கொண்டே தமிழ்ப் புத்தாண்டுக்கு வேட்டுவைத்துவிட்டார்களே?
5. இன்று சீனப் புத்தாண்டைக் கொண்டாடாதவரே உலகில் இல்லை! கூகுள் தனது முதல்பக்கத்திலேயே சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறது. எனது Blogger Profile பக்கத்தில் நான் 'நாய்' வருடத்தில் (1982) பிறந்தது குறிப்பிடப்படுகிறது. அந்த நாய் எங்கிருந்து வந்தது? சீனர்கள் சூரிய 60 ஆண்டுக்கணக்கை அசிங்கமாகக் கருதவில்லையே?
6. தமிழன் அந்த அறுபது ஆண்டுகளுக்கு ஆரிய அறிஞர்களின் பெயர்கள் வழங்கிய ஒரே காரணத்துக்காக அம்முறையை அழித்தது எதற்காக? பாலாஜி என்ற என் பெயரை பாலாசி என்று மாற்றக் கோரிய மறைமலை அடிகள் உள்ளிட்ட கிழங்கட்டைகள் அந்த அறுபது ஆண்டுகளுக்கும் திருவள்ளுவன், கம்பன், அவ்வை, இளங்கோ என்று பெயரிட்டு அவர்களுக்கு இறவா புகழ் வாங்கித்தந்திருக்கலாமே?
7. சந்திர நாட்காட்டி பயன்படுத்தப்படும் அரபு நாட்டில், நபிகள் நாயகம் அவர்கள் மக்கா நகரிலிருந்து மெதினா நகருக்குச் சென்ற ஆண்டை முதல் ஆண்டாக வைத்துக்கொண்டாலும், அவர் சென்ற ரபி மாதத்தை முதல்மாதமாக வைக்க அடம்பிடிக்கவில்லையே? முஹரம் மாதத்தைத்தானே முதல்மாதமாக அனுசரிக்கிறார்கள். ரமலான், மிலாது நபி போன்ற நாட்கள் வரும் மாதங்களை அவர்கள் கோலாகலமாகக் கொண்டாடுவது அதனால் நின்றுவிட்டதா? தமிழன் பொங்கலன்று புத்தாண்டாக இல்லாவிட்டால் பொங்கல் கொண்டாடுவதை நிறுத்திவிடுவானா?
8. பொங்கல் மதச்சார்பற்ற நாளாம். உண்மைதான். ஆனால் சித்திரை முதல்நாள் எப்படி மதச்சார்புள்ள நாளாயிற்று? வருடப் பிறப்பைக் கொண்டாட நம் வீடுகளில் செய்யப்படும் மாம்பழ-வேப்பம்பூ பச்சடியில் இருக்கும் வேப்பம்பூ, மாரியாத்தா என்கிற இந்துக் கடவுள் என்று இவர்களுக்கு பயம் வந்துவிட்டதா?
9. பொங்கல் அன்று எல்லா மதத்தாரும், சாதியினரும் சமுதாயப் பொங்கலிட்டு (சூரியனை வழிபட்டோ, வழிபடாமலோ?) இனி புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமாம். இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இவ்வாறு பொங்கலிட்டு புத்தாண்டைக் கொண்டாடப் போகிறார்களா? சித்திரை முதல் நாளேன்றால் தாரளமாகக் கொண்டாடுவார்களே?
10. சூரியனை வழிபடுவது, கோலமிடுவதெல்லாம் ஒருவகையில் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரானவை. அதனால்தான் தேசப்பற்றிலும், இந்தியாவின் பாரம்பரியத்திலும் எவருக்கும் குறையாத இஸ்லாமியரில் சிலர் வந்தே மாதரம் பாடுவதிலும், (மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் செய்யப்படும்) சூரிய நமஸ்காரத்திலும் பங்குபெறுவதா, கூடாதா என்று குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். இப்போது பொங்கலன்று புத்தாண்டு கொண்டாடச் சொன்னால் அவர்கள் என்ன செய்து கொண்டாடுவது? "சூரியனை வணங்காவிட்டால் நீ தமிழனே அல்ல" என்று நம் இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லப் போகிறோமா? அவர்களுக்கு ஏன் இந்த தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டும்?
11. நான் இளங்கலைப் படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்தபோது என்னை ragging செய்வதற்காக தமிழ்த்தாய் வாழ்த்து பாடச்சொன்னார்கள்! தமிழரில் 99.99 சதவிதத்தினருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்தெரியாது என்று அவர்களுக்கு நம்பிக்கை! தமிழ் மாதப் பெயர்களை வரிசையாகச் சொல்லக் கேட்டால் பையன்கள் அழுதுவிடுவார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ? இன்று தைப் பொங்கல் என்றும் சித்திரை வருடப் பிறப்பு என்றும் இருப்பதால்தான், இரண்டு தமிழ்மாதங்களின் பெயர்களாவது குழந்தைகளுக்குத் தெரிகிறது. திருவள்ளுவர் பிறந்தநாள் என்னும் மூடநம்பிக்கையைக் கொண்டுவந்தால் பொங்கலே திருவள்ளுவருக்காக படைக்கப்படுகிறது என்று பிற்காலத்தில் ஆக்கிவிடுவார்கள் நம் பகுத்தறிவுவாதிகள்!
12. தேசம், மதம் என்று எந்தச் சாயமுமின்றி, தமிழரின் புத்தாண்டாய், அரசு விடுமுறையாய் இருந்த சித்திரை முதல் நாளில், சூப்பர் ஸ்டாரின் படம்பார்த்து, மாம்பழப் பச்சடி சாப்பிட்டுக் கொண்டாடிய தமிழன் நேற்றோடு செத்தான். வாழ்க தமிழ்!

இது பற்றிய எனது முந்தைய இடுகை -> தைப்புத்தாண்டு என்னும் மடத்தனம்!

Wednesday, January 23, 2008

தைப்புத்தாண்டு என்னும் மடத்தனம்!

இனி தைத்திங்கள் முதல்நாள்தான் ஆண்டின் முதல்நாளாம்! இதனை தமிழறிஞர்கள் கண்டுபிடித்து சொல்லிட்டாங்களாம். கருணாநிதியின் தான்தோன்றித்தனத்துக்கு மறுபெயர்தான் தமிழறிஞரா? சரி என்ன காரணத்துக்குக்காக ஆண்டின் முதல்தேதியே மாற்றப்பட்டது என்று தமிழனுக்காவது சொல்லவேண்டாம்? தமிழே தெரியாத தமிழனுக்கு பூகோளமும் வானிலை அறிவியலும் எங்கு தெரியப்போகிறது என்கிற இளக்காரமா?

பொங்கல் தமிழர் திருநாளாம்?! ஏன் சித்திரை முதல்நாளும் தமிழர் திருநாளாக இருக்கக்கூடாதா? எந்தவித ஆதாரமுமில்லாமல் திருவள்ளுவர் கி.மு.31 இல் பிறந்தார் என்று ஒரு ஆண்டுவரிசை வைத்திருக்கும் தமிழரின் மடத்தனத்தைப் போன்று இப்போது தைப்புத்தாண்டு! [இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டை (1947) முதல் ஆண்டாக ஏற்றுக்கொண்டிருக்கலாம்!] அறுபது ஆண்டுகளுக்கு தமிழ்ப்பெயர் கண்டுபிடிக்க வக்கில்லாமல் அந்தமுறையை வழக்கொழியச்செய்த மறைமலையடிகள் போன்றோரின் முட்டாள் சீடர்கள் இப்போது சித்திரையோடு விளையாடுகிறார்கள்!

சரி, தைப்புத்தாண்டு என்பது மடத்தனம் என்று நான் கருதுவதற்கான காரணங்கள் கீழே. முதலில் பொங்கல் மற்றும் சித்திரையின் முதல்நாள் ஆகியவற்றை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். (எதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்!)

1. தமிழகம் பூமத்திய ரேகையின் (Equator) வடக்கேயிருக்கிறது! மகரரேகை (Tropic of Capricorn) பூமத்திய ரேகையின் தெற்கே இந்தியப்பெருங்கடலில் இருக்கிறது. கடகரேகை (Tropic of Cancer) இந்தியாவை இட்டத்தட்ட இரண்டாகப் பிரிக்கிறது.
2. பூமியின் 23.44 அலகு சாய்மானத்தாலும் அதன் நீள்வட்டப்பாதையாலும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு வேறுபடுகிறது. [இதனால்தான் Spring, Summer, Autumn, Winter போன்ற பருவங்கள் உருவாகின்றன.] இந்த வேறுபாடு பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தப்பகுதி உருண்டையில் எங்கிருக்கிறதோ அதையொற்றி அமைகிறது. [அதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் வெட்பநிலையும், பருவநிலையும் மாறுபடுகின்றன. இந்தியாவின் குளிரும், கனடாவின் குளிரும் ஒன்றல்ல! இப்பொது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடும்போது அங்கு வெட்பகாலம். நமக்கு குளிர்காலம்.]
3. சூரியன் பூமத்திய ரேகையின்மேல் வரும்போது பகலும் இரவும் ஓரளவு சரிசமமாக இருக்கும். இருப்பதிலேயே மிகவும் சரிசமமாக இருக்கும் நாளின் பெயர் Equinox. மார்ச் மாதம் ஒருமுறையும் (Spring Equinox) செப்டம்பர் மாதம் ஒருமுறையும் (Autumn Equinox) இத்தகைய தினங்கள் வருகின்றன.
4. மார்ச் மாதத்தில் வரும் Equinoxஐ புத்தாண்டாகக் கொண்டாடுவது இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் வழக்கமாக இருந்தது. இந்தியாவில் இப்போதும் இருக்கிறது. ஆங்கில ஆண்டு March மாதத்தில் தொடங்கியதால்தான் September (7 - septa), October (8 - octal), November (9 - novem), December (10 - deci) போன்ற பெயர்கள் வந்தன. இந்தியாவில் பிறமாநிலங்களில் பயன்படுத்தப்படும் lunisolar நாட்காட்டிகளிலும் மார்ச் மாதத்தில் வரும் Eqninox-ஐ ஒட்டியே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. (எ.கா: தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி.)
5. செப்டம்பர் மாதம் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் சூரியன் டிசம்பர் மாதம் மகரரேகைக்கு அருகில் (Indian Ocean) இருக்கிறது. அங்கிருந்து மீண்டும் வடக்குநோக்கி திரும்பும்நாள் தான் Winter Solstice. இனி அடுத்த ஆறுமாதங்களுக்கு வடக்குநோக்கியே சூரியன் நகரும். இதைத்தான் உத்தராயன் (Uttaraayan, uttar - north), மகர (Capricorn) சங்கராந்தி, பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். சூரியன் நம்மை நோக்கிவருவதால் குளிர்காலம் போய் வெட்பம் மீண்டுவந்து உயிர்களும், பயிர்களும் செழிப்பது கொண்டாடப்பட வேண்டியதுதானே?
6. அதேபோல ஜூன் மாதம் வரும் Summer Solstice அன்று சூரியன் கடக (Cancer) ரேகை மீது இருக்கிறது. இந்தியாவில் சூடு கொளுத்துவது அதனால்தான்.
7. இந்த Eqninox, Solstice போன்றவை எப்போதும் ஒரே நாளில் நடக்காது. April 14 மற்றும் Jan 14 ஆகிய தேதிகளில் நாம் கொண்டாடினாலும் அவை தற்காலத்தில் March 21, December 21 வாக்கிலேயே நடந்துவிடுகின்றன. நாள்காட்டிகள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாற்றப்படுவதுண்டு. உரோம நாட்டினார் Julian நாள்காட்டியிலிருந்து Gregorian நாள்காட்டிக்கு மாறியதற்கு கிறிஸ்தவர்களின் பண்டிகை தினங்கள் நகர்ந்துகொண்டே சென்றதனால் வந்த பிரச்சனைகளும் ஒரு காரணம்.
8. இந்தியாவிலும் தமிழ் நாள்காட்டி தவிர்த்த பிற நாள்காட்டிகள் ஒரு மாதம் முன்பாக இருப்பது அதனால்தான். நமது சித்திரை (April-May)யில் வந்தால் அவர்களது சித்தரா மாதம் (March-April)இல் வருகிறது. எல்லா மாதங்களும் அப்படித்தான். தைப் பொங்கலை அவர்கள் மாசி மாததில்தான் கொண்டாடுகிறார்கள்.

சரி இப்போ கேள்விகள்.

1. Equinox correction என்று எதுவுமில்லாதபோது வெறுமனே தைமாத முதல்நாளை புத்தாண்டு என்று கொண்டாடவேண்டிய அவசியமென்ன?
2. பருவங்கள், இராசிகள், 60 கணக்கு (விநாழிகை, நாழிகை ... வருடம்), Equinox, Solstice என்று இயற்கையின் அளவிலா அற்புதங்களை நினைவுபடுத்த இரண்டுநாட்கள் கொண்டாடினால் என்ன? பொங்கல் தமிழர் திருநாள். அதனால் அது புத்தாண்டு என்று தமிழனை மேலும் மடையனாக்கும் இந்த வீண்வேலை எதற்கு?
3. தனது உழவு வசதிக்காக பொங்கலை Equinoxஓடு இழுத்துச்செல்லாமல் Januaryயிலேயே நிற்கவைத்த தமிழனின் Street Smartness எங்கே போயிற்று?
4. தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி என்று மனிதர்களின் பிறந்த, இறந்த நாட்களையும், பிற மதம்சார்ந்த தினங்களையுமே ஏன் கொண்டாடவேண்டும்? சுதந்திர தினம், குடியரசு தினம், படைவீரர் நாள் உள்ளிட்ட தேசிய நாட்களையும், பொங்கல், சித்திரை முதல்நாள் என்று மதச்சார்பற்ற, ஒருசிலர் என்றில்லாமல் எல்லோரும் கொண்டாடும் தினங்களையும் ஊக்குவிக்கலாமே?

இது பற்றிய என்னுடைய இன்னொரு இடுகை -> சித்திரையைக் காப்பாற்றுங்கள்!

Tuesday, January 22, 2008

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் ...

இன்னும் இந்தியாவில் இல்லையாவன!


முதலில் நம் பிள்ளைகளில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை. செல்பவர்களாவது படிக்கிறார்களா என்பது பெரும் பிரச்சனையாயிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஒரு New York Times கட்டுரையைத் தொடர்ந்து இன்று சுருமுரியில் வெளியான பதிவு இங்கே.

பிரதம் என்னும் தன்னார்வு நிறுவனம் நடத்திய கல்விக் கருத்துக்கபிப்பின் முடிவுகள் இங்கே. மிகவும் வருத்தப்பட வைக்கும் விவரங்கள்தான். பிரதம், இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவோடு நடந்துவரும் எழுத்தறிவிக்கும் இயக்கும். இவர்களின் பணி செவ்வனே நடக்கவும், இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையானவர்களுக்கு இவர்களின் உதவி கிடைக்கவும் நீங்கள் உதவலாம். செய்வீர்கள்தானே?!

AidIndia நடத்தும் இதே மாதிரியான முயற்சிகள் பற்றி நான் முன்பு எழுதிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

Monday, January 21, 2008

மரணம் ஈன்ற ஜனனம்

Scaphandre et le papillon, Le (The Diving Bell and the Butterfly) - சமீபத்தில் வெளியாகி 'தங்க உலகம்' உள்ளிட்ட விருதுகளை வென்ற பிரஞ்சுத் திரைப்படம். Jean-Dominique Bauby அவர்களின் உண்மைக்கதை. உள்ளத்தால் ஆகாதது எதுவுமில்லை என்று பறைசாற்றும் வாழ்க்கை வரலாறு. பார்க்கலாம்.

Ostre sledovane vlaky (Closely Watched Trains) - ஆகா என்ன பொண்ணுங்க?! என்ன சங்கதி!! நாசிக்களை எதிர்த்து செக்கஸ்லோவாக்கியர்் எவ்வாறு மெதுவாக கிளர்த்தெழுந்தார்கள் என்றும் சொல்லும் படம். New Wave என்னும் செக்கஸ்லோவாக்கியப் படங்களில் மிகவும் பாராட்டப்பட்ட படம். நிச்சயம் பார்க்கலாம்.

Goodbye Lenin! - கிழக்கு ஜெர்மனியின் மறைவை வித்தியாசமாகச் சொல்லும் படம். டேனியல் புருயலுக்காகப் பார்க்கலாம்.

Tuesday, January 15, 2008

நட்சத்திரங்கள் - நிழலும் நிஜமும்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்று பொறுமையில்லை. கடந்த வாரம் நான் பார்த்த படங்களின் சிறுகுறிப்புகள் கீழே!

தாரே சமீன் பர் - நல்ல படம், பார்க்கலாம். டிஸ்லெக்சியா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக அமீர் கானைப் பாராட்டலாம்.

பால்சாக்கும் இளஞ்சீன தையல்காரியும்! - கலாசாரப் புரட்சி என்னும் சீனாவின் இருண்ட காலத்தில் பூத்த ஒரு காதல் கதை. இயக்குனரின் சொந்தக் கதை, புதினமாகவும், பின்பு திரைப்படமாகமும் வந்தது. சுமார்தான்.

கோப்பென்ஹேகன் - இரவா புகழ்பெற்ற நீல்ஸ் போர் - வெர்னர் ஹைசன்பர்க் ஆகியோரின் சந்திப்பு குறித்த விவரணப்படம். கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் படத்தில் இருக்கின்றன.

ஆனா ஃப்ராங்க் - அவரைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? கட்டாயம் பார்க்கவேண்டிய விவரணப்படம்.

Friday, January 11, 2008

கூவுகிறார்கள், வாங்க!

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தற்போது நடந்து வரும் இரண்டாம் சென்னை சங்கமத்தின் தெருவிழாவில் பங்கேற்க அழைக்கிறார்கள்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின், கிண்டி பொறியியல் கல்லூரி நடத்தும் குருக்சேத்ரா 2008 நுட்பத் திருவிழாவுக்கு அழைக்கிறார்கள்.

உத்தமத்தின் இணைத்தமிழ் அரட்டை அரங்கத்திற்கும் வருமாறு கோருகிறார்கள்.

செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்
நடத்தும் 'செம்மொழி தமிழ் சர்வதேச கருத்தரங்கம்் 2008'க்கும் நம்மை அழைக்கிறார்கள்.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்தும் சாரங் 2008 கலைவிழாவுக்கும் வருமாறு கூவுகிறார்கள்.

வாங்க, வாங்க!

Tuesday, January 08, 2008

ஓட்டை வாய் திறப்பினும் அவுட் அவுட்டுதான்!

படம் நன்றி: பணிக்கர், சவுரவ் வழியாக அனாமதேயப் புகைப்படக்காரர்.