Saturday, January 26, 2008

கிழங்கட்டைகள் மாநாடு - 1921

இது தமிழன் புத்தாண்டு எப்போது ஆரம்பிக்கிறது என்றுகூடத் தெரியாமல் குழம்பி, அவன் நிலைமை சந்தி சிரிப்பதற்குக் காரணமாயிருந்த "தமிழறிஞர் மாநாடு" எப்படி நடந்திருக்கும் என்பதை சித்தரிக்கும் நையாண்டி நாடகம். இதில் சில வரலாற்றுச் செய்திகள் தப்பித்தவறி இடம்பெறலாம்!

இடம்: சென்னை பச்சையப்பன் கல்லூரி.

நாள்: 1921 இல் எதோவொரு ஞாயிற்றுக்கிழமை.

பங்குபெறுவோர்: மறைமலை அடிகள், திரு.வி.கல்யாணசுந்தரம், கி. ஆ. பெ. விசுவநாதன் மற்றும் சிலபல கிழடுகள்.

வரவேற்புக் காண்டம்:

கா. நமச்சிவாயம்: நாம இன்னிக்கு எதுக்கு இங்க கூடியிருக்கிறோமுன்னு எனக்கு சரியா தெரியல! காலையில் எங்க வீட்டுக்காரம்மா ஆ(பசு)வின் பால் வாங்கிட்டு வாங்கன்னு கடைத்தெருவுக்கு அனுப்பினாங்க. பச்சையப்பன் கல்லூரி வாசல்ல மறைமலை அடிகளார் நின்னுட்டு ஆள்பிடித்துக் கொண்டிருந்தாரு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும். எதுன்னாலும் அவரையே கேளுங்க. நான் இங்க வந்தேன்னு தெரிஞ்சாலே வெள்ளைக்காரத் துரை என்னை பேராசிரியர் பதவியிலிருந்து தூக்கிடுவான். என்னை விட்டுடுங்க! நான் கிளம்பறேன்!

மறைமலை அடிகள்: யோவ்! ஓடாத நில்லுய்யா ... சரி போகட்டும். அதெனய்யா "மறைமலை அடிகளார்"? நான் என்ன போலிச் சாமியாரா? எங்க அப்பனாத்தா அழகா வேதாசலம்ன்னு பேரு வச்சாங்க. சரி பேருலயே வேதம் இருக்கே அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வேதம் படிக்கலாமுன்னு ஆரம்பிச்சேன்.

அதுல பாத்தீங்கன்னா எனக்கு சமசுகிரதம் ஒரளவு நல்லாவே தெரியும். ஆனா அது பணினிங்கறவர் (Panini) காலத்துலயிருந்து இருக்கிற செம்மையான (Classical) சமசுகிரதம். ரிக்வேதமெல்லாம் எழுதினது அதுக்கும் முன்னாடி இருந்த பழம் சமசுகிரதம் (Old Sanskrit). அந்த சமசுகிரதம் பாரசீகத்துல (Iran/Afghanistan) புழங்கினதா சொல்றாங்க. அது கிட்டத்தட்ட சோராசுதிரர் பேசுன அவசுதா (Old Avestan) மாதிரி இருக்கும்.

யோவ்! சோமசுந்தரம் இல்லைய்யா... சோராசுதிரர் (Zoroaster)! பம்பாயிலிருந்து கஞ்சா ஏற்றுமதி (Opium Export) செஞ்சு வந்த பணத்துல உருக்காலை (TISCO) ஆரம்பிச்சிருக்காங்கலே டாடா (Tata) குடும்பம், அவங்களோட மதகுருதான் சோராசுதிரர். அவங்க மதத்துக்காரங்கள பாரசின்னு (Parsis) அழைப்பாங்க.

சரி அத விடுங்க. அந்த கடினமான சமசுகிரதத்துல எழுதின அத்துனை வேதப் பாட்டுங்களையும் என்னோடு சமசுகிரத அறிவ வச்சிண்டு புரிஞ்சுக்க முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டேன். அதனால வேதம் (மறை) மலை மாதிரி. நான் அந்தமலையோட அடியில் நின்னு படிச்சுகிட்டிருக்கேன்னு அடக்கமா ஒரு பேரு வச்சிக்கிட்டேன். நீங்க என்னடான்னா அடிகளார் கிடிகளார்ன்னு சொல்லி என்னை செயிலுக்கு அனுப்பிடுவீங்க போலயிருக்கே?!

சே! நாம எதுக்கு கூடியிருக்கோங்கறதே மறந்துடப்போவுது. நாம தமிழ் பத்தி பேசவந்திருக்கோம். அதுல என்ன பிரச்சனைன்னா...

கிழடு 1: (மனதுக்குள்) நாசமாப் போச்சு! இப்பதான் இவரு பேசவே ஆரம்பிக்கிறாரா? நான் சீக்கிரம் முடிஞ்சிடும். மத்தியாணம் ஆத்துக்கு போய், கெளசல்யா பண்ணின சாத்துமது சாதத்துல வாழைக்காய் கர்னமது போட்டு ஒரு பிடி பிடிக்கலாமுன்னு நினைச்சனே!

தொடரும் ...

No comments: