Sunday, August 24, 2008

மாத்தி மாய் (என் அம்மா)

பெங்களூரு திரைப்பட சமூகம் சார்பாக திரையிடப்பட்ட மாத்தி மாய் என்னும் மராத்தி மொழி படத்தை சனிக்கிழமையன்று பார்த்தேன். மகேஷ்வேத்தா தேவி வங்காள மொழியில் எழுதிய புதினத்தை சித்ரா பாலேகர் மராத்தியில் எடுத்திருக்கிறார். இறந்த குழந்தைகளை புதைக்கும் சோகமான வேலை செய்யும் ஒரு பெண் தாயாவதும், அதனால் நிகழும் விபரீதங்களும் படத்தின் கதை.

அதுல் குல்கர்னி, நந்திதா தாஸ் விளம்பரத்துக்கென நாயகர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் இயக்குனரைச் சொல்லி குற்றமில்லை. செத்துப்போன மராத்தி திரைப்பட உலகில் படமெடுத்ததற்கே அவரை பாராட்டவேண்டும்! படம் பார்க்க வந்திருந்த கிரீஷ் கர்னாட், படத்தின் இசை குறித்து இயக்குனரிடமே குறை சொன்னது மிகவும் ரசக்குறைவாக இருந்தது.

சித்ரா பாலேகர் பேசும்போது, "நாம் பிரஞ்சு மொழி திரைப்படங்களை திரையிட்டாலும் இந்தியாவின் பிறமாநில மொழிப் படங்களை திரையிடமாட்டோம்" என்றார். ம்... ஒரே நாளில் ஐந்தாறு மொழிப்படங்கள் திரையிடப்படும் பெங்களூருக்கு இந்த விமர்சனம் பொருந்தாதுதான். ஆனால் இன்றிரவு இருநூறு ருபாய் கொடுத்து Far North என்னும் படுசுமாரான படத்தை பார்த்தபோது, என்.டி.டிவி லூமியர் நிறுவனம் இந்திய மொழித் திரைப்படங்களையும் விநியோகிக்கலாம் என்று தோன்றியது.

'சாவதற்கு முன் பார்க்கவேண்டிய 50 படங்கள்' என்கிற சவடாலோடு (பிரதி வெள்ளி இரவு 11 மணிக்கு) யு.டிவி உலகத் திரைப்பட அலைவரிசையில் ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் வாரத்தில் ஹீரோ என்கிற ஹாங் காங் படத்தை திரைடயிட்டார்கள். இது நான் சாவதற்கு முன் பார்க்கவேண்டிய படமா? Crouching Tiger, Hidden Draganனை மீண்டுமெடுக்க செய்யப்பட்ட இந்த வீண் முயற்சியைப் பார்த்து எவனாவது சாகாமலிருந்தால் சரி!

No comments: