Tuesday, July 22, 2008

ஆத்தா, நான் ஜெயிச்சுட்டேன்!!

மன்மோகன் சிங் நமக்கு செய்யும் சேவைக்கான கட்டணம் (ஒரு எம்.பி.) தலைக்கு 3 கோடியாம்!

Saturday, July 12, 2008

நீரேற்றம்!

குவாண்டானமோ பே உள்ளிட்ட இடங்களில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளை (மற்றும் சும்மா மாட்டிக்கொண்டவர்களை) அமெரிக்க ராணுவத்தினர் waterboarding என்னும் சித்ரவதைக்கு ஆளாக்குவது நாம் அறிந்ததே. ஆனால் இந்த 'நீரேற்ற' முறை சித்ரவதை இல்லை என்று அமெரிக்கா கூறி வருகிறது.

புகழ்பெற்ற (ஆப்ராமிய) நாத்திக பேச்சாளர் கிறிஸ்தபர் ஹிட்சன்ஸ், தானே இந்த கொடுமையை அனுபவித்து, அது பற்றி Vanity Fair பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். கீழுள்ள ஒளித்துண்டையும் பார்க்கவும்.

Tuesday, July 08, 2008

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ...

உலகத் தலைவர்கள் எல்லோரும் வயிறு முட்ட சாப்பிடுவோம்! ஜப்பானில் கூடியிருக்கும் ஜி-8 நாடுகளின் தலைவர்கள், மன்மோகன் சிங் உள்ளிட்ட வேறு ஐந்து நாடுகளின் தலைவர்கள் ஆகியோர், உலக உணவுப் பற்றாக்குறை, உலக வெம்மை போன்ற விசயங்களை விவாதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நேற்றைய உணவுப் பட்டியல் கீழே!


18 வகையான பண்டங்களை, அதுவும் அசைவ உணவு. பால் உள்ளிட்ட இயற்கைக்குப் புறம்பான, ஈவிறக்கமற்ற உணவுகளை பதம் பார்த்துவிட்டு இவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள்? இந்த தலைவர்களின் வீண் ஆடம்பரம் எதற்காக? இவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகளாகத்தானே இங்கு கூடியிருக்கிறார்கள்?

மரக்கறி (உருளை, வெங்காயம், கேரட்...) தவிர்த்த காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட தாணியங்கள் ஆகியவை கொண்டே மனிதன் திடமாக, ஆரோக்கியமாக வாழமுடியும். ஒரு ஆடோ, கோழியோ தன் வாழ்நாள் முழுதும் சாப்பிட்ட உணவுக்கு ஈடானதை ஒவ்வொரு உணவு வேலையிலும் மனிதன் சாப்பிட்டால், இந்த பூமி தாங்குமா?

படம், செயதி நன்றி: டெய்லி மெயில். ஹஃப்பிங்டன் போஸ்ட்.

Sunday, July 06, 2008

தமிழில் பழுப்புப் புதினங்கள் (Pulp Fiction)

இந்து நாளிதழில் இன்று வெளியான பழுப்புப் புதினங்கள் பற்றிய கட்டுரை படிக்கத்தகுந்தது. முதலில் Pulp Fiction என்பது மட்டரக தாளில் பிரசுரிக்கப்பட்டு மலிவுவிலையில் விற்கப்படும் மசாலா புதினங்களைக் குறிக்கும் என்பதே இதைப் படித்துதான் எனக்குத் தெரிந்தது.

தமிழ் நாட்டுப் பொட்டிக்கடைகளில் சக்கைப்போடு போடும் ராஜேஷ் குமார் போன்றோரின் புதினங்கள் இவ்வகையைச் சார்ந்தவை. தமிழில் இவைகளுக்கு ஏற்கனவே எதாவது பெயரிருக்கிறதா என்று தெரியவில்லை. சாணித் தாள் புதினம் என்று அழைக்கலாமா? அந்தத் தாள்கள் பழுப்பாக இருப்பதாலும், பழுப்பு என்பது pulp என்பதோடு ஒத்தொலிப்பதாலும் 'பழுப்புப் புதினம்' நல்ல தமிழாக்கமாக இருக்குமென்று நினைக்கிறேன்.


நிற்க. தமிழ் பழுப்புப் புதினங்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டிக்கிறது. இதை தொகுத்து வெளியிட்ட ப்ரீதம் சக்ரவர்த்தி, ராகேஷ் கன்னா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அட்டைப்படத்துக்கு தனியாக ஒரு பாராட்டு :)

Saturday, July 05, 2008

ஊருக்கு நூறு பேர்

பழைய படம் தான். மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையில் இன்றிரவு ஊருக்கு நூறு பேர் திரையிட்டார்கள். சுமாரான படம். பார்க்கலாம்.

மரண தண்டனை எதிர்ப்பு, கம்யூனிசம் உள்ளிட்ட கருத்துகளை பற்றிய ஜெயகாந்தன் அவர்களின் கதை. தேசிய விருது வாங்கிய படம். கொஞ்சம் பிரசார நெடியடித்தாலும், நல்ல நடிப்பு, பாத்திரத்தேர்வு, வசனம் என்று சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அந்த (?!) காலத்தில் தூர்தர்ஷன் மாநில மொழித்திரைப் படங்களைப் பார்த்ததை பலபேர் என்னிடம் சிலாகித்திருக்கிறார்கள். இப்போது மக்களவை தொலைக்காட்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு விருது பெற்ற படங்களை திரையிடுவதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட உலக திரைப்படங்கள் என்னும் அலைவரிசையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் பாருங்கள்.

நீங்கள் தில்லியில் வசிப்பவராயின் ஓசியான் அமைப்பின் ஆசிய மற்றும் அரபு திரைப்படவிழாவில் (ஜுலை 10-20) கலந்துகொள்ளலாமே!