Tuesday, October 30, 2007

மக்கள் தீர்ப்பே...

ஜனாதேஷ் (மக்கள் தீர்ப்பு) என்னும் இயக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது! சமீபத்தில் சுமார் 25000 நிலமற்ற விவசாயிகள் (தலித்துகள்?) மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரிலிருந்து தில்லிக்கு நடந்தே வரும் சத்தியாகிரகம் செய்து அசத்தியிருக்கிறார்கள். இன்று இந்தியாவெங்கும் நிலமே பெரும் பிரச்சனையாகி வருவது நாம் அறிந்ததே.

தூத்துக்குடியிலிருந்து நந்திகிராம் வரை வெடித்துக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கும், நாடேங்கும் பரவிவிட்டிருக்கும் நக்ஸல்வாதத்திற்கும் அடிப்படைக் காரணம் விவசாயிகளின் நில உரிமைப் பிரச்சனைகளே. ஆனால் நம்மில் பலருக்கு விசயத்தின் தீவிரம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஏக்தா பரிஷ்த் என்னும் அமைப்பு இந்தியாவின் ஏழை விவசாயிகள், தன்னார்வளர்கள் துணையோடு இந்த ஜனாதேஷ் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பாராட்டவேண்டிய, சிந்திக்கவேண்டிய விசயம்.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் இங்கே. நிதின் சுட்டிக்காட்டிய 'தேசிய நிலக் கொள்கை' இங்கே.

Friday, October 26, 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே...

... இந்த இந்துமத வெறிபிடித்தக் கயவர்களை நினைத்துவிட்டால்... தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ள குஜராத் 2002 கலவரங்கள் பற்றிய விவரங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. ஒரு தாயின் வயிற்றிலிருந்த கருவைக்கூட விட்டுவைக்கவில்லை இவர்கள். இந்தப்பாவிகளில் பலர் அதற்கான தண்டனையை அனுபவிக்கப் போவதில்லை என்பது இன்றும் நடந்துவரும் கலவரம்தான்.

Thursday, October 25, 2007

மௌனம்...கொடூரம்!


சரி, சிங்கள ராணுவத்தைத் தாக்க வந்த தமிழ் தீவிரவாதிகள் என்றே இருக்கட்டும். ஆனால் இறந்தவர்களை நிர்வாண ஊர்வலம் நடத்தி, அதைப் படம்பிடிக்க, பார்க்க அனுமதித்து என்ன சாதித்துவிட்டார்கள் இவர்கள்? சுற்றியிருப்பவர்களின் மௌனத்துக் காரணம் சோகமா? ஆத்திரமா? இனவெறியா? படம் பிடித்து காசு பார்க்கும் ஆசையா? எதிர்த்து ஒரு சொல் சொன்னால் ராணுவம் கொன்றுவிடும் என்று பயமா? என்னப்பா நடக்குது...

ஆபத்துக்குதவும் தொழில்நுட்பம்...

சான்டியாகோவில் எந்தெந்த பகுதிகளில் காட்டுத்தீயினால் ஆபத்து, யாரெல்லாம் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும், எங்கெல்லாம் நிவாரண முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளன போன்ற விசயங்களை கூகுள் படச்சேவை தெரிவிக்கிறது! ஆபத்துக்கு உதவுவதற்குத்தானே தொழில்நுட்பம்...

சான்டியாகோவில் ஆணிபுடுங்கும் எனது நண்பர்கள் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் போரடிக்கும் வேலையில் கொஞ்சம் excitement என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

பி.கு: 1. சத்தியமா சொல்றேன், நான் போனப்ப மலீபு பெருமாள் கோயில் மூடியிருந்தது. அங்க தசரா கொண்டாடுறோம் பேர்வழி என்று நாங்க ஒன்னும் நெருப்பு வைத்து இந்தக் காட்டுத்தீயை ஆரம்பிக்கவில்லை.

பி.கு: 2. நான் நிறைய பாவம் செஞ்சிருக்கிறது உண்மைதான். ஆனா அதுக்காக போன வருடம் நான் லாஸ் ஏஞ்சலீஸ் வந்ததிலிருந்துதான் மழையே பெய்யாமல் பூமி வரண்டு காட்டுத்தீ வந்துட்டதா சொல்றது அபாண்டம்.

Monday, October 22, 2007

வாராய்...நீ வாராய்...

UTV நிறுவனம் உலகத் திரைப்படங்களுக்கான தொலைக்காட்சியை ஆரம்பிக்க இருக்கிறதாம். அருமையான செய்தி! நான் இந்தியாவுக்கு நிரந்திரமாகத் திரும்பும்போது எனக்கு ஏற்படும் மிகப்பெரும் 'இழப்பாக' நான் கருதுவது, இவை போன்ற அசாத்தியத் திரைப்படங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம் என்பதுதான். புதிய அலைவரிசையில், நான் ரசிக்கும் அளவுக்கு நல்ல படங்களைக் காட்டுவார்களா அல்லது அகிரா குரோசோவாவின் குப்பைகளையும், புரூஸ் லீயின் கோனாங்கிச் சண்டைகளையும் உலக சினிமா என்று அடித்துவிடுவார்களா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

கனிமொழியும் நானும் ஒரே கடவுளைத்தான் வழிபடுகிறோம் என்று தெரிந்துகொண்டேன். மகிழ்ச்சி!

Sunday, October 21, 2007

திரைகடலோடியும் ...

... திருந்தமாட்டோம்! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜின்டால், அமெரிக்க மாகானமான லூசியானாவின் ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்டதை, இந்திய பத்திரிக்கைகள் அடுத்த சில தினங்களில் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டாடும்!

ஆனால் அவரது "கடவுள் உலகைப் படைத்தார்", "கருக்கலைப்பு கூடாது", "இனவெறி எதிர்ப்புச் சட்டங்களின் கடுமையை குறைக்கவேண்டும்" போன்ற வாதங்கள் அசிங்கமாயிருக்கின்றன.

Friday, October 19, 2007

நான் கட்ஸிக்கு மாறிட்டேன்!

எனது மடிக்கணினியில் உபுண்டுவை Fiesty யிலிருந்து கட்ஸி கிப்பனுக்கு (7.10) உயர்த்துவது சுபமாய் முடிந்தது. அது நடந்த வேகம் மற்றும் சுலபம், ஒரு வேளை ஒன்றுமே நடக்கவில்லையோ என்று திகைக்கவைத்தது! இத்தனைக்கும் நான் எழுத்துரு, பொதிகள் ஆகியவற்றில் நிறைய குடைந்து வைத்திருந்தேன். நான் செய்திருந்த எல்லா மாற்றங்களும் அப்படியே இருக்கின்றன! உபுண்டு குழுவினர் 'upgrade'இல் பழம் தின்று கொட்டை போட்டுவிட்டார்கள். பாராட்டுக்கள்!

ICANN தளத்தில் தமிழ் url (http://தமிழ்.idn.icann.org/) பரிட்சிக்கப்படுவது குறித்து மடலாடர் குழுவிலிருந்து தெரிந்துகொண்டேன். நன்று!

Thursday, October 18, 2007

ஆதலினால் காதல் செய்வீர்...வாழ்த்துக்கள்!

Monday, October 15, 2007

ஆழ்மனதின் கோலங்கள்...


ஒரு திரைப்படத்தை வைத்துக்கொண்டு பிரஞ்சுக்காரர்களால் என்னவெல்லாம் செய்யமுடியுமென்று வியப்பாகயிருக்கிறது. Un coeur en hiver (A heart in Winter) என்றொரு படம். அருமையான வயலின், சொக்கவைக்கும் Emmanuelle Beart, எல்லோருடைய சிறந்த நடிப்பு. இவைகளுக்கே இப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.

ஆனால் அதற்கும் மேலாக பாத்திரப் படைப்பு மற்றும் வசனத்தில் அதகளம் பண்ணியிருக்கிறார்கள்! காதல் மரத்தை சுற்றி விளையாடும் சாதரண விசயமில்லை. ஆழ்மனதில் வேரெடுக்கும் வலி, பொறுப்பு என்று ஒரு பொருந்தாக் காதலில் காட்டியிருக்கிறார்கள். படம் முழுக்க எண்ணங்களை வசனமாகப் பேசுகிறார்கள்!

நிற்க. இந்தப்படம் பார்த்தேயாக வேண்டியதுதான்! ஆனால் இதை ஓரளவுக்கு மேல் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது ரசிக்க முடியவில்லை என்றால் நீங்கள் சாதரணமாக இருக்கிறீர்கள்! மனங்களையும், மனிதர்களையும் எடைபோடும் வேண்டாத வேலையில் இன்னும் இறங்கவில்லை என்று அர்த்தம்!

நான் சமீபத்தில் பார்த்து இன்னும் விமர்சனம் எழுதாமல் இருந்த Paradise Now, இந்த வார விகடன் வெளிச்சம் பகுதியில் வந்திருக்கிறது. நல்ல படம். பார்க்கலாம்!

Thursday, October 11, 2007

இந்தியர் என்னும் குரங்குகள்...

ஆயிரமாயிரம் ஆண்டுகள்
தம்மில் சிலரை சூத்திரராக்கினர்!
ஆபத்துக்குதவிய அனுமனை,
இராமாயணத்தில் வானரனாக்கினர்!
சிறிசந்தின் குரங்கு நடனத்தை,
யூடூபில் பார்த்து ரசித்தனர்!
நேற்று சைமண்ட்சு மீது இனவெறி காட்டி,
தாம் குரங்கென நிரூபித்தனர் இந்தியர்!

விக்கிபீடியா நிலவரம்

/. இல் விக்கிபீடியா குறித்து எதோ பேசிக்கொள்கிறார்கள். நான்கூட போன வருடம் சில மாதங்களுக்கு தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதாக பேர் பண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றுமே கிழிக்கவில்லை! விக்கிக்கு பங்களிப்பதற்கு அசாத்திய பொறுமையும், நல்ல மனசும் வேண்டுமென்று நினைக்கிறேன். இல்லை நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தாங்களே தங்களைப்பற்றி எழுதலாம். பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாகக் கொடுக்கலாம்.

சரி, சரி, என்னுடைய சோம்பேறித்தனத்துக்கு சப்பை கட்டிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்!

Wednesday, October 10, 2007

காரவாஜியோ - என்றும் மரணமில்லை!


Damn you,
Imprisoned souls,
Love survives us,
But Art is Immortal.

காரவாஜியோவின் கதை. காராவாஜியோ 2007 என்று தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட படம். அருமை!! மைக்கேலையும், அவர் படங்களையும் சொல்லவில்லை. அது தெரிந்ததுதான். படத்தில் வரும் பெண்களை எங்கப்பா புடிச்சீங்க? தூக்கமே வரவில்லை!! கூகுள் படத்தேடலில் அந்த அழகிகள் சரியாக அகப்படாதது கொடுமை!

படத்தை நேற்றிரவு UCLA திரைப்படக் கல்லூரியில் பார்த்தேன். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் Vittorio Storaro, இப்படத்தில் தான் கையாண்ட ஒளிப்பதிவு எது, ஏன், எப்படிகளை விளக்கினார். காரவாஜியோ படங்களையே படம் பிடிப்பதென்றால் சும்மாவா? கலக்கியிருக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில், 'இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார்', 'இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது' போன்ற அண்டப்புளுகுகளை எற்றுக்கொள்ளாத ஒருவரை, கம்பத்தில் வைத்து கொளுத்துகிறார்கள்! (Burnt at the stake). 400 வருடங்களுக்கு முன்பு உரோம சாம்ராஜ்சியத்தில் நான் இருந்திருந்தால்? ஆ! வாழ்க சனநாயகம், வாழ்க பேச்சுரிமை!!

Tuesday, October 09, 2007

வேதனை வென்ற கணம்..

...விவசாயி உயிரை மாய்த்த கணம், நம் இந்தியா தோற்கும் அதே கணம். 8 மணி நேரத்துக்கு ஒருமுறை இந்தியா தோற்பதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களில் நான் காபிக்கு செலவழித்த பணம் சிலரின் கடன்களை அடைக்கப் போதுமாயிருந்திருக்கும்...

காந்தி ஜெயந்தியன்று AID India அமைப்பு நடத்திய தீபாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது திரையிடப்பட்ட 'The Dying Fields' விவரணப்படத்தை பார்த்தேன்.

இந்திய விவசாயப் பேரழிவு குறித்து இங்கு படிக்கலாம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமருக்கு இங்கு வேண்டுகோள் விடுக்கலாம். விவசாயிகள் மாண்டுகொண்டிருக்க யுவராஜ் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த விவசாய அமைச்சர்/கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷரத் பவார் குறித்து சோசிக்கலாம்...

Monday, October 08, 2007

சாமியார்களுக்கு சாமியடிக்கும் சயின்ஸ்!

எத்தனை நாளைக்குதான் சாமியார்களும் பூசாரிகளும் கஷ்டப்பட்டு மக்களை மப்பில் வைத்திருப்பார்கள். பாவம் அவர்கள் ஓய்வு எடுக்கட்டும். அதேமாதிரி வெளிமாநிலத்தில் போய் 'ஜருகண்டி' கோஷத்தில் நாலே-கால்-அடி உருவத்தை பார்த்தால்தான் அந்த மப்பு கிடைக்கும் என்கிற அவல நிலையும் ஒழியட்டும். இவர்கள் சொல்வது போல் தெருக்கு தெரு 'கடவுள் பார்கள்' வந்து இவ்வயகம் திளைக்கட்டும்!

ஆமாம் இதே சேவையை வழங்கிவரும் கஞ்சா கருப்புசாமியும், மஜா மாதவியும் இனி என்ன செய்வார்கள்? உலகமயமாக்கலை எதிர்ப்போம்!!

சந்தி சிரிக்குது!

ம்...நான் சொன்னா கேட்கல... இங்க இவங்க சொல்றாங்க பாருங்க...

Monday, October 01, 2007

மெல்ல இனி எல்லாம் சாகும்...

வேடிக்கையாக இருக்கிறது. உலகில் இன்று பேசப்படும் 7000 மொழிகளில் பாதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் காணாமல் போய்விடுமாம்! ஆறு பேர் பேசும் மொழிகளைக்கூடக் காப்பாற்ற ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறதாம். இன்னொரு கூட்டம் இதைப் பற்றியெல்லாம் இங்கு அரட்டையடித்துக் கொண்டிருக்கிறதாம்.

ஹாஹா! ஆறு கோடி பேர் பேசும் தமிழே சாகப்போகிறது. தமிழானாகிய நான் (!!!!?) பேசும் தமிழில் சுமார் 80 சதவீதம் வார்த்தைகள் தமிழே கிடையாது. இந்த அழகில் மொழிகளைக் காப்பாற்றுவதாவது வெங்காயமாவது. போங்கடா, போய் (ஆங்கிலத்தில்) வேலையைப் பாருங்கடா...