Tuesday, January 29, 2008

யானைக்கும் அடிசறுக்கும்!

நான் மிகவும் மதிக்கும் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தினமணியில் எழுதிய கருத்து என்னை வியப்பில் ஆழ்த்தியது! முதலில் அவர் சொன்ன கருத்தை கீழே தருகிறேன்.

-------------- தினமணி 26.1.2008 ---------------
"சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது, இயற்கையான காலக் கணக்கீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறியிருப்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்பதற்கு இல்லை.
ஏனெனில், சித்திரை முதல் தேதியன்று (ஏப்ரல் 13 14) முற்காலத்தில் நிகழ்ந்த விசு (பகலும் இரவும் ஒரே கால அளவைக் கொண்ட நாள்) தற்காலத்தில் பங்குனி 8 9 தேதிகளிலேயே (மார்ச் 21 22) நிகழ்ந்து விடுகிறது.இது போன்றே, ஐப்பசி விசு, தட்சிண அயனம், உத்தர அயனம் ஆகிய வானவியல் இயற்கை நிகழ்வுகளும் இன்றையப் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு முன்னரே நிகழ்ந்து விடுகின்றன. "சித்திரை' விசு பங்குனியிலும், "அய்ப்பசி' விசு புரட்டாசியிலும் தற்காலத்தில் நிகழ்கின்றன. இவை அறிவியல் அடிப்படையிலான இன்றைய வானவியல் காட்டும் நிதர்சன உண்மைகளாகும். இக்குழப்பத்துக்கு நம் முன்னோர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவ்வப்பொழுது வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் யதார்த்த நிலைகளைக் கணக்கிட்டு பஞ்சாங்கங் களை காலத்துக்கு ஏற்ப அறிவியல் கண்ணோட்டத்தில் திருத்திக் கொள்ளாத நமது தலைமுறையினரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற் காலத்தில் அயனப் பிறப்பு நாட்கள் தலைகீழாக மாறி, உத் தராயணப் புண்ணிய காலத்தை தட்சிணியானப் பிறப்பு நாளான்று கொண்டாட நேரிடும்.இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்க ளின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு?
வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதை காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டு விடலாம்."

அய்ராவதம் மகாதேவன்,
சென்னை88.
----------------------------------------------------

நன்றி: தினமணி.

1. வரலாற்று ரீதியிலும், தமிழ் மரபின் படியும் சித்திரைதான் தமிழர் புத்தாண்டு என்பதை மகாதேவன் உறுதிப்படுத்தியது குறித்து மகிழ்ச்சியே!
2. Equinox Correction செய்யாததால் பஞ்சாங்கங்களும், தமிழர் நாட்காட்டிகளும் அறிவியல் துல்லியத்தை இழந்துவிட்டன என்று மாநாடுகளில் அவர் தெரிவித்து வருவது குறித்தும் மகிழ்ச்சியே!
3. Equinox Correction செய்யாத பட்சத்தில் சித்திரையில் வரும் புத்தாண்டின் தேதி (Date) தவறு என்று குறிப்பிட்டது குறித்தும் மகிழ்ச்சியே!

இப்போ கேள்விகள்:

1. பஞ்சாங்கத்தை மாற்ற நமக்குத் துணிவில்லை என்று கடிந்துகொள்ளும் இவருக்கு பொங்கலும் தவறான தேதியிலேயே கொண்டாடப் படுகிறது என்று தெளிவாகச் சொல்லத் துணிவில்லாமல் போனது ஏன்? Winter Solstice என்ற உத்தராயணம் அன்றுதான் பொங்கல் என்னும் உழவர் திருநாள் என்றால், அது December 21 அன்றுதானே கொண்டாடப் படவேண்டும்?
2. எல்லா தமிழ் நாட்களுமே (விதைக்கும் நாள், அறுவடை நாள்) தப்பு என்றால் January 14, 15 என்று ஆங்கில நாட்காட்டி வைத்து பொங்கலைக் கொண்டாடலாம் என்று வெட்கமில்லாமல் சொல்கிறாரா?
3. பொங்கல் மற்றும் சித்திரைப் புத்தாண்டு இரண்டுமே தப்பான தேதியில் கொண்டாடப் படுவது தெரிந்தும், இரண்டில் ஒன்றை அழித்து ஒரே 'தவறான' நாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன?
4. எகிப்தில் கி.மு. 300 மற்றும் கி.மு. 200 வாக்கில் தமிழ் பிராமியில் எழுதப்பட்ட இரண்டு ஓட்டுத் துண்டுகள் இடைக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். என்னதான் carbon dating செய்தாலும் அந்த ஓட்டுத் துண்டுகள் சரியாக எந்தத் தேதியில் உருவானது என்று கணிக்கமுடியாதுதானே? அதனால் இரண்டு ஓட்டுத்துண்டுகளில் பெரியதாய் தெரியும் ஓட்டுத்துண்டையோ, பழையது என்று கருதப்படும் ஓட்டுத்துண்டையோ வைத்துக்கொண்டு மற்றதைத் தூக்கி எறிந்துவிடாலாம் என்று இவர் சொல்வாரா?

ஐராவதம் என்ற யானைக்கும் அடிசறுக்கும் போலிருக்கிறது.

உங்கள் யாருக்கேனும் ஐராவதம் மகாதேவன் அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியுமென்றால், அவரிடம் இதுகுறித்து வினவி எனக்கும் சொல்லுங்களேன்!

4 comments:

மதுரையம்பதி said...

வரலாறு.காம் பக்கத்திற்கு சென்று உங்கள் கேள்விகளை பதிவிடுங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கலாம். வரலாறு.காம் ஆசிரியர் குழுவினருக்கு பரிச்சயமானவர் திரு. ஐராவதம். வரலாறு.காம் மின்னிதழில் திரு.ஐராவதம் ஒரு தொடர் எழுதுகிறார்.

தற்போதய சர்சை புத்தாண்டு பற்றி மட்டுமே என்பதால் அதை பற்றி மட்டும் சொல்லியிருக்காருன்னு நினைக்கிறேன். மற்றபடி, நீங்க நினைப்பது போல அவர் வேண்டுமென்றே பொங்கல் பற்றி பேசாது விட்டார் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. :-)

Balaji said...

திரு மதுரையம்பதி,

ஆலோசனைக்கு நன்றி! ஐராவதம் அவர்கள் தெளிவாகச் சொல்லவில்லை என்பதுதான் என் வருத்தமும். எனக்கே தெரிவது தொல்லியல் ஆராய்சியாளரான அவருக்குத் தெரிந்திருக்காதா என்ன?

அவர் சொல்லியிருக்க வேண்டியதாக நான் கருதுவது இவைதான்,

1. தையில் வருவது அறுவடை நாளான பொங்கல், சித்திரையில் வருவது புத்தாண்டு என்னும் தமிழர் வழக்கத்தை கேவலம் ஒரு (சர்வாதிகார) அரசானை கொண்டு மாற்றுவதை அனுமதிக்க முடியாது.
2. வான் அறிவியலாளர்கள், பஞ்சாங்க நிபுணர்கள், தமிழரிஞ்சர்கள், தொல்லியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைத்து தமிழர் நாட்காட்டி திருத்தப் படவேண்டும்.
3. அப்படி மாற்றியபின் தை முதல் நாளை (December 20 or 21) வட அயண நாளாக அறிவிக்கவேண்டும். சித்திரை முதல் நாளை (March 20 or 21)) தெற்கு அயண நாளாக அறிவிக்கவேண்டும்.
4. தைத்திங்கள் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையை பொங்கல் என்றும், சித்திரை மூன்றாம் ஞாயிறையையும் (சூரிய) திங்களை யும் (சந்திரன்), புத்தாண்டு என்றும் சித்திரைத் திருநாள் என்றும் அறிவிக்க வேண்டும்.
5. பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழின் ஆண்டுகளை (ours is a jupiter 60 year cycle which precedes the Aryan 60 cycle) திருவள்ளுவர், இளங்கோ, கம்பன் என்று தமிழரியர்களின் பெயர்கொண்டு அழைக்க ஆவண செய்யவேண்டும்.
6. சென்னை மாகாணம் பிரிக்கப் பட்டு, தமிழகப் பகுதிகள் மாநிலமாக அறிவிக்கப்பட்ட 1956ஆம் ஆண்டை 'தனித்தமிழ்' ஆண்டின் முதல் நாளாய் அறிவிக்கவேண்டும். அதற்கு முந்தைய ஆண்டுகள் த.மு ஆண்டுகள் என்றும் திராவிட ஆண்டுகள் என்றும் அழைக்கப்பெற ஆவண செய்யவேண்டும்.
7. திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் தினம் ஆகியவை ஒழிக்கப் பட்டு, மகாவீரர் இறந்த நாளான தீபாவளியை, அருகரின் வழிநடக்க அழைக்கும் திருக்குறள் நாளாக அறிவிக்கவேண்டும். அன்றே தமிழக அரசின் குறள்பீட விருதுகளும் வழங்கப்படவேண்டும்.

ஏன் சொல்லாமல் சும்மாயிருக்கிறார் என்று தெரியவில்லை.

தவறு நடக்கும் போது தட்டிக்கேட்காத அறிஞர்களால், தமிழுக்கும், அறிவியலுக்கும், தமிழினத்துக்கும் எதாவது பயனிருக்கிறதா?

1. எனக்கென்ன வந்தது என்று தள்ளி நின்ற பேடிகளால்தானே,ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம்மக்கள் சாதி, வர்ணக் கொடுமைகளுக்கு ஆளாயினர்?
2. விவாதத்தில் வெற்றிபெற்ற நாயன்மார்கள் தடுக்காததாலும், மாறாக ஊக்குவித்ததினாலும் தானே ஆயிரமாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். அவ்வாறு கழுவேற்றப்பட்ட சமணர்களில் திருவள்ளுவர் இருந்திருக்க மாட்டார் என்று என்ன நிச்சியம்?
3. எட்டப்பன்களினால் தானே கட்டபொம்மன்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர்?

வவ்வால் said...

பாலாஜி,
என்ன ஆச்சர்யம் இப்படி அநியாத்துக்கு "ப" திருப்பம் அடிச்சுட்டிங்க, ஆனாலும் ரொம்ப சறுக்கிடுச்சு போல உங்களுக்கு.
ஐராவதம் சொன்னதை தானே நானும் அப்போ சொன்னேன், நாம் காலண்டர்ல வானியலுக்கு ஏற்ப திருத்தம் செய்யலைனு.

மேலும் மற்ற உங்கள் கருத்துக்கள் வழக்கம் போல அரைவேக்காட்டுத்தன்மானவையே!

உதாரணம்,
//2. விவாதத்தில் வெற்றிபெற்ற நாயன்மார்கள் தடுக்காததாலும், மாறாக ஊக்குவித்ததினாலும் தானே ஆயிரமாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். அவ்வாறு கழுவேற்றப்பட்ட சமணர்களில் திருவள்ளுவர் இருந்திருக்க மாட்டார் என்று என்ன நிச்சியம்?//

வள்ளுவர் காலமும் , நாயன்மார்கள் காலமும், அதுவும் திருஞானசம்பந்தர் காலமும் ஒன்று என்ற நினைப்பில் நீங்கள் பேசுவது பெரிய காமெடி :-))

எல்லா நாயன்மார்களை விடவும் வள்ளுவர் காலத்தால் முற்ப்பட்டவர், அதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.

ஒரு பதிவு போட என்ன அவசரம் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்து தான் போடுவது!

Balaji said...

ஓ! Equinox Correction பற்றி நான் என்னுடைய முதல் பதிவில் எழுதவேயில்லை. அப்படித்தானே?

மேலும் ஜராவதம் அவர்கள் சொன்னதைத்தானே நான் விமர்சித்துக் கொண்டிருக்கிறேன்? Equinox Correction செய்யாமல் ஆங்கில நாட்கட்டி கொண்டு January 14. 15 அன்று புத்தாண்டு கொண்டாடவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு ஐராவதம் எப்படி சரிந்தார் என்றே எனக்கு விளங்கவில்லை.

வள்ளுவர் காலம் என்று எதனையும் அறிதியிட்டு சொல்லமுடியாது. கி.மு. 2500 லிருந்து கி.பி. 300 வரை (ஒருவேளை கி.பி. 700 வரைகூட) எப்போது வேண்டுமானாலும் அவர் வாழ்ந்திருக்கலாம். திருக்குறளை மேற்கோள் காட்டும் இன்னொரு காலம் தெளிவாகத் தெரிகிற புத்தகத்திலிருந்து அதை அறியவேண்டும். இந்த ஆராய்ச்சி அவ்வளவு சிரத்தையாக நடந்ததாகத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

நாயன்மார்கள் 63 பேரில் சிலர் செய்வித்த பெருங்கொலைகளில் (Mass Murder, that too as impalement!) வள்ளுவரும் கழுவேற்றப்பட்டிருப்பார் என்பதற்கு என்னிடம் ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் வள்ளுவர் கழுவேற்றப் பட்டிருக்கலாம் என்பது நிகழ்ந்திருக்கக்கூடியதே.

சமணரும் வேதமதத்தாரும் போட்டி போட ஆரம்பித்தபின்பு வள்ளுவர் வாழ்ந்திருந்தால், அவருக்கு என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்..." என்று அவர் சொல்வதால் அவர் வேதமத்ததாரை அரசியல் ரீதியாகவும் எதிர்த்திருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே சமணரும், வேதமதத்தாரும் நன்றாக அடித்துக்கொண்டது தெரிகிறது. அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில்கூட அவர்கள் ஆங்காங்கே அடித்துக் கொண்டிருந்திருக்கலாம்.