Tuesday, February 20, 2007

ஜூஸ்ட் (ரசப்படுத்தல்?!)

ஸ்கைபை உருவாக்கிய சென்ஸ்டிராம் மற்றும் ஃப்ரைஸ் ஆகியோர், ஜூஸ்ட் என்னும் இணைய தொலைக்காட்சித் தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது நேசவலை மற்றும் சூல்ரன்னர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இங்கு யூடியுப் போன்று எல்லோரும் பதிவேற்ற முடியாதென்பதால் காப்புரிமைகளுக்கு வேட்டு வைக்க முடியாது! சென்ற வாரம் யூடியுபிலிருந்து தங்களின் படங்களை அகற்றச்சொன்ன வயோகாம் நிறுவனம் அவற்றை ஜூஸ்டில் வெளியிட முடிவு செய்துள்ளது. தமிழக தயாரிப்பாளர்களும் விழித்துக்கொண்டால் நல்லது!

சூல்ரன்னர் தொழில்நுட்பம் மொசில்லவுடையாதாகும். இதனை பயன்படித்தும் சாங்பேர்டு முயற்சி வெற்றிபெற்றால் ஐடியூன்ஸை லினக்ஸுக்குத் தராமல் அழிச்சட்டியம் செய்யும் ஆப்பில் நிறுவனத்துக்கு பாடம் புகட்டலாம்!

Saturday, February 17, 2007

ரெய்ல்ஸில் விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள்!

பணி நிமித்தமாக ரூபி ஆன் ரெய்ல்ஸ் என்னும் வலை கட்டமைப்பு மென்பொருளை படித்துக்கொண்டிருக்கிறேன். சி, சி++, மைசீக்வல் என்று இணையத்தின் புறங்கடையிலிருந்த என்னை ரெய்ல்ஸில் விளையாடுடா என்று வராண்தாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். நான் பயன்படுத்தும் சில சுட்டிகளைத் தருகிறேன். யான் பெற்ற இன்பம் (துன்பம்?) பெறுக இவ்வையகம்!

1. ரூபி ஆன் ரெய்ல்ஸோடு உருளுங்கள்!
2. புத்தகங்கள். (தூக்கத்திற்கு முன்)
3. விக்கி. (தூக்கத்திற்கு பின்)

Friday, February 16, 2007

மாற்று! - உரக்க சிந்தித்தல்!

சில நாட்களாக, மாற்று! புண்ணியத்தில் தமிழ் வலைப்பதிவுகளைப் படித்ததில் எனக்குத் தோன்றியவை:

1. தமிழில் எக்கச்சக்கமான பதிவுகள் வருகின்றன என்று நினைத்திருந்தேன். ஆனால் மாற்று! தினசரி சேகரிக்கும் (150 பதிவர்கள் எழுதும்) சுமார் 20 பதிவுகளில் நல்ல பதிவுகள் ஐந்துக்கு மேல் தேறுவதில்லை! தமிழில் எழுதுபவர்கள் தரமாக எழுதுவதில்லை என்று தோன்றுகிறது.
2. மாற்றுக்கு பங்களிப்போரின் சொந்தப் பதிவுகள் நன்றாக இருக்கின்றன.
3. தமிழ்மணத்தில் மானாவாரியாக அடித்துக்கொள்கிறார்கள் என்று ரவி சொல்லக்கேட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை என்பது தெரிகிறது. (எரிகிற நெருப்பில் நானும் கொஞ்சம் என்ணெய் ஊற்றிவிட்டுவந்தேன் என்பது வேறு விஷயம்!) மாற்று போன்ற முயற்சிகள் வெற்றிபெறுவது தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு நல்லது.

Tuesday, February 13, 2007

பாவம் மணிப்பூர்

பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலத் தேர்தல்கள்்் பற்றி இந்தியாவின் தமாஷா (செய்தி!) ஊடகங்களில் அடித்துக் கொள்கிறார்கள். பிற்பாடு வரப்போகும் உத்தர பிரதேசம், குஜராத் தேர்தல்கள் பற்றி கூட செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால் மணிப்பூர் தேர்தல் பற்றிய செய்திகளை சீந்துவாரில்லை. நாமாவது மணிப்பூர் பத்திரிககை் இ-பாவ் படித்து மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம்!

பசுமை விகடன்

விகடன் குழுமம் ஆரம்பித்திருக்கும் 'பசுமை விகடன்' பத்திரிக்கை மிகவும் வரவேற்கத்தகுந்த முயற்சியாகும். விவசாயத்திற்கும் எனக்கும் மிகவும் தூரமென்றாலும் விரும்பிப்படிக்கிறேன். சுற்றுலா, விவசாய வரலாறு மற்றும் துணுக்குகள் பகுதிகள் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கின்றன.

"சினிமாக்காரி படம் போட்டு ஆனந்த விகடன் குட்டிச்சுவராப் போச்சு!" என்று என் பாட்டி அங்கலாய்த்தாலும் விகடனை வாரம் தவறாமல் படிக்கிறேன். சில காலமாக வரும் 'வெளிச்சம்: உலக சினிமா' பகுதி சிறப்பாகவுள்ளது. நேரமிருந்தால் நான் சமீபத்தில் ரசித்த பின்வரும் படங்களை நீங்களும் பாருங்களேன்!

1. சில்ரன் ஆப் ஹெவன்.
2. தி ரிடர்ன்.
3. தி குக்கூ.
4. மூன்று நிறங்கள்: நீலம்.

Tuesday, February 06, 2007

விபிளே!

சில மாணவர்கள் சேர்ந்து ஆரம்பித்திருக்கும் விபிளே! என்னும் இணைய வானொலி ஒரு அருமையான தொடக்கமாகும். சிறப்பான இசைத்தொகுப்பு, நேயர் விருப்பம், முக்கியமாக காப்புரிமைகளை மீறாத தளமென்று கலக்குகிறார்கள். தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் அருமையான பாடல்களைக் கேட்கலாம்.