உபாகர்மம் என்னும் பாரம்பரிய பழக்கத்தை கைவிடாது செய்துவருபவர்களுக்கு எனது பாராட்டுகள். வேத பாடசாலையில் வரும் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் செய்யப்படும் செயல்களுக்கு உபாகர்மம் என்று பெயர். மேலும் விவரங்கள் இங்கே.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரம்மனையும் (Brahman - Cosmic flow), கணபதியையும் (chance, luck) சூரியனையும், மற்றும் பிற இயற்கையின் அங்கங்களையும், வேதம் இயற்றிய, பகுத்தளித்த பெரியோர்களையும் வணங்கும் இந்தப் பழக்கம் மிகவும் சிறப்பானதே. இந்த வழக்கததை தமிழில் செய்ய விரும்புவர்களுக்கு தேவையான குறிப்புகள் கீழே.
கடந்த ஆண்டு காயத்ரி மந்திரம் குறித்து நான் எழுதிய இடுகை இங்கே.
உபாகர்மம் (ஆரம்ப செயல்கள்)
1. காமோகார்ஷீத் ஜபம் (காமன் மன்யு என்னும் தேவதைகளை வேண்டுதல்):
காமனே போற்றி! மன்யுவே போற்றி! (108 தடவை)
2. யஜ்ஞோபவீத தாரணம் (பூணூல் அணிதல்):
2.1. ஆசமனம் (குறியிடுதல்):
அச்சுதனுக்கு வணக்கம், அனந்தனுக்கு வணக்கம், கோவிந்தனுக்கு வணக்கம். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, சிறீதரா, ஹிருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.
உன்னைப் பன்னிரு திருநாமங்களால் போற்றி என் உடலைனைத்தும் குறி இடுகின்றேன்.
2.2. கணபதி-தியானம்:
எங்கும் நிறைந்தவரும், எனினும் அன்பர்க்குகந்த வடிவம் ஏற்பவரும், வெண்மையான ஆடை உடுத்தவரும். நிலவு போன்ற ஒளியுள்ளவரும், நான்கு கைகளுள்ளவரும், ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக தியானிக்கிறேன்.
2.3. பிராணாயாமம் (மூச்சின் ஆட்சி):
ஓங்காரமே பூலோகம், ஓங்காரமே புவர்லோகம், ஓங்காரமே ஸுவர்லோகம், ஓங்காரமே மஹர்லோகம், ஓங்காரமே ஜனலோகம், ஓங்காரமே தபலோகம், ஓங்காரமே சத்தியலோகம், ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி உருவத்தை தியானிப்போம்.
ஓங்காரமே நீரும், ஒளியும், ரசம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும், எங்கும் பரந்த ஆகாசமும் ஆகும்.
மனம், புத்தி, அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.
2.4. சங்கல்பம் (தெளிந்த தீர்மானம்):
பக்தியோகமும், கர்மயோகமும், ஞானயோகமும் இந்த பூணூலை அணிவதால் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
2.5. யஜ்ஞோபவீதம் (பூணூல் அணிதல்):
பரிசுத்தியளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும், ஆயுளையும், முதன்மையையும் அளிக்கவல்லதுமாகிய வெண்மையான பூணூலைத் தரிக்கிறேன். ஞான ஒளியும், பலமும் அதனால் நிலைபெற வேண்டும்.
2.6. உபவீதம் (பழைய பூணூலைக் கழட்டுதல்):
இழைகள் பின்னமானதும் பலங்குறைந்ததும், அழுக்கடைந்ததுமாகிய பூணூலை விலக்குகிறேன். பரம்பொருளே! மீண்டும் தொடர்ந்து எனக்கு ஞான ஒளியும் நீண்ட ஆயுளும் இருக்கும்படி அருளவேண்டும்.
3. காண்டரிஷி தர்ப்பணம் (வேத கண்ட ரிஷிகளை வணங்குதல்):
பிரஜாபதியின், ஸோமனின், அக்னியின், விச்வ தேவனின், ஸாஹிதீர் தேவனின் (உபநிசத), யாக்ஞீகீர் தேவனின் (உபநிசத), வாருணீர் தேவனின் (உபநிசத), ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவின், ஸ்தஸஸ்பதியின் வேதக் கண்டத்திற்கு உரியவர்களான ரிஷிகளுக்கு இந்த தர்பையை சமர்பிக்கிறேன்.
Saturday, August 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இறை நம்பிக்கை / இந்து இல்லை என்பவரின் பதிவின் ஏன் இந்த இடுகை ;) இல்லை, வழக்கம் போலவே இதற்கும் சமணர்களுக்கும் தொடர்பு உண்டா ;)
இறை நம்பிக்கை இல்லாததற்கும் மதத்தையும் பாரம்பரியத்தையும் காப்பாற்றுவதற்கும் எந்த முரண்பாடும் இல்லை. கடவுள் நம்பிக்கையில்லாதவன் காவடி எடுக்கக்கூடாதா? இல்லை தமிழில் கடவுள்வாழ்த்து படிக்கக்கூடாதா?
மேலே நான் தமிழில் கொடுத்திருக்கும் உபாகர்மா, பாட சாலையில் செய்யப்படும் ஒரு சடங்கு. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்பவரெல்லாம் கடவுள் நம்பிக்கையுடையவர் என்று அர்த்தமில்லை.
இடுகையில் நான் குறிப்பிட்டிருக்கும் பின்வரும் வாக்கியத்தை நீங்கள் படிக்கவில்லையா?
"ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரம்மனையும் (Brahman - Cosmic flow), கணபதியையும் (chance, luck) சூரியனையும், மற்றும் பிற இயற்கையின் அங்கங்களையும், வேதம் இயற்றிய, பகுத்தளித்த பெரியோர்களையும் வணங்கும் இந்தப் பழக்கம் மிகவும் சிறப்பானதே."
நான் இந்து இல்லை என்று சொல்லவில்லை. இந்து என்பது மதமேயில்லை என்றுதான் சொல்கிறேன்! இந்து என்பது இந்திய மக்களைக் குறிக்கும் அவ்வளவே. இந்தியர்கள் எல்லோருமே இந்துக்கள்தான். (india = indians and hence sind/hind = hindu)
மதத்துக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தேமேயில்லை. சமணம், பெளத்தம், ஆசிவகம் உள்ளிட்ட shramanic மதங்கள். சங்கரர் வழிவந்த அத்வைத்தம் உள்ளிட்ட எக்கச்சக்கமான மதங்கள் கடவுள் இல்லை என்று ஆணித்தரமாக கூறுகின்றன.
எனக்கு எல்லா மதங்களும் பிடிக்கும். கிறிஸ்து சபை, யூதக் கோயில், சமண, பெளத்த விகாரங்கள், சைவ, வைணவ, கிராமக் கோயில்கள் என்று அனைத்துக்குமே நான் போயிருக்கிறேன்.
சமணம், அத்வைதம், epicurianism ஆகியவை நான் பின்பற்றும் 'மதங்கள்'.
//கடவுள் நம்பிக்கையில்லாதவன் காவடி எடுக்கக்கூடாதா?//
//சரஸ்வதி பூஜை செய்பவரெல்லாம் கடவுள் நம்பிக்கையுடையவர் என்று அர்த்தமில்லை//
அப்படி யாரையும் கண்டதில்லையே !! இந்த வழக்கங்கள் என்ன நம்பிக்கையில் தோன்றினவோ, ஆனால் நடைமுறையில் சமூகத்தில் எல்லாம் இறை வழிபாட்டை நோக்கியே இருக்கின்றன.
சரி, சும்மா கேட்டு வைச்சேன். உரையாடலை முடித்துக் கொள்வோம் :)
தமிழ்ப்பதிவுலகில் இப்படி ஒரு பதிவா. பயங்கர தைரியம் தான் ;-))
சத்யாவை வழிமொழிகிறேன் ;)
Post a Comment