Friday, January 30, 2009

சிங்களவரைவிட தமிழர் நமக்கு நெருங்கியவர்களா? எப்படி?

இந்தியன் எக்ஸ்பிரஸில் இன்று வெளியாகியிருக்கும் ஃபிரான்சுவா காதியரின் கட்டுரை வாசிக்கத்தகுந்தது. ஒரளவுக்கு நேர்மையாக இலங்கைப் பிரச்சனையை அலசியிருக்கிறார். இதே கருவோடு சில மாதங்களுக்குமுன் நான் எழுதிய பதிவு இங்கே.

"காட்டுமிராண்டி இலங்கைத்தமிழர்கள் சிங்களவரின் சிறிய தவறுகளை பூதாகாரமாக்கி, ஏற்றுக்கொள்ளமுடியாத கோரிக்கைகளை வைத்து, அதற்கு இனத்தை மட்டுமே காரணமாகக் காட்டி தமிழகத்தவரின் ஆதரவையும் பெற்றுவிட்டார்கள்" என்பது இலங்கைப் பிரச்சனைக்கான ஒரு வரி விளக்கம்.

ஆனால் இந்தியர்களுக்கு சிங்களவர்களைவிட தமிழர் நெருங்கியவர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மொழி, இனம், மதம் என்று அனைத்து வகையிலும் சிங்களவர் இந்தியரோடு ஒன்றுபட்டவர்களே. தமிழர், சிங்களவர் என்னும் இரு சகோதரர்களில், கடந்த இருபது ஆண்டுகளில், குறிப்பாக இன்று, ஒரளவு நியாயமாக நடந்துகொள்ளும் சிங்களவரையே இந்தியர் ஆதரிக்கவேண்டும்.

Thursday, January 22, 2009

பெங்களூர் திரைப்பட விழா - விமர்சனங்கள்

கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா இன்றோடு நிறைவடைந்தது. இதில் நான் பார்த்த 9 படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே. எனக்கு பிடித்த வரிசையில்.

1. Obsluhoval jsem anglickeho krale (I served the King of England). செக் நாடு.

Closely Watched Trains மூலம் செக் திரைப்பட வரலாற்றில் புதிய அலையை (Czech New Wave) ஏற்படுத்திய ஜிரி மென்செல் அவர்களின் படம். அருமை. படத்தில் வரும் அனைத்து பெண்களும் ஆடையைக் கலைகின்றனர்! இது இரண்டாம் உலகப்போர், செக் நாட்டின் மீது நாசிக்களின் படையெடுப்பு ஆகியன பற்றிய படம் என்று படம் முடிந்தபின்கூட நம்புவது கடினம்தான். பெண்கள், பணம், பல்சுவை உணவு. படம் முழுக்க இதுதான். ஆனால் போரின் கொடுமையை விவரிக்கவும், நாசிக்களை சாடவும் படம் சிறிதும் தவறவில்லை.

2. Avaze gonjeshk-ha (The Song of Sparrows). இரான்.

மஜீத் மஜீதி அவர்களின் படம். ஒளிப்பதிவில் கலக்கியிறுக்கிறார்கள். இரானிய படங்களில் எதிர்பார்க்கக்கூடிய குழந்தைகள், நேர்மை, மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய படம். ஒரே ஒரு குறை நான் Children of Heavenஐ எக்கச்சக்கமான தடவை பார்த்திருப்பதுதான். அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. வான் கோழிகளைத் தவிர்த்து!

3. Iza Stakla (Behind the Glass). குரேஷியா.

ஒரு படம் எப்படி இருக்கவேண்டும் என்று நான் வகுத்திருக்கும் அனைத்து விதிகளையும் பின்பற்றும் படம். 100 நிமிடங்களுக்குள் இருத்தல், கதை எப்படி இருந்தாலும் குழம்பம் இல்லாத நல்ல திரைக்கதை, நடிகர்களையும், இயக்குனரையும் குறையே சொல்லமுடியாத நேர்த்தி, படம் பார்ப்பவர்கள் புத்திசாலிகள் என்று பாவிக்கும் யதார்த்தமான வசனம், அழகான பெண்கள் என்று அனைத்திலும் சோபித்திருக்கிறார்கள்.

4. Katyn. போலந்து.

கெஸ்லாவ்ஸ்கி தெய்வம் என்றால், ஆந்திரே வாஜ்டா இன்றும் வாழும் போலந்து நாட்டு திரைப்பட இமயம். இரண்டாம் உலகப்போரில் போலந்தில் நிகழ்ந்த கதீன் படுகொலை பற்றிய படம். சுவாரசியமான வரலாற்றுச் சோகம் என்பது தவிர படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. அந்த வரலாறு படித்துவிட்டு படம் பார்க்கப் போகாதீர்கள்!

5. L’Orchestra di Piazza Vittorio. (The Orchestra of Piazza Vittorio). இத்தாலி.

சுவாரசியமான விவரணப்படம். ரோம் நகரில் குடியேறிய பல்வேறு நாட்டு இசைக் கலைஞர்களை சேர்த்துக்கொண்டு உருவாக்கப்பட்ட ஆர்கஸ்ட்ராவின் தோற்றக் கதை. சிரித்துக்கொண்டே பார்க்கலாம்.

6. Varjoja Paratiisissa (Shadow in Paradise). ஃபின்லாந்து.

மேலே நான் சொன்ன திரைப்பட விதிகளைக் கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். படம் வெறும் 70 நிமிடம்தான். இயக்குனர் ஆக்கி கெளரிஸ்மாகி மிகவும் பேசப்படுபவர். இவரின் மற்ற படங்களையும் பார்க்க ஆசை.

7. Hadduta Misrija (Egyptian story) எகிப்து.

ஒரு இயக்குனரின் சொந்தக்கதையை எகிப்தின் வரலாறு மற்றும் மனித உறவுகள் பற்றிய சிந்தனைகளோடு சொல்ல நினைத்திருக்கிறார்கள். போர் அடித்தது.

8. Ben X பெல்ஜியம்.

குறைந்த செலவில், கைக்கேமராவுடன் கல்லூரி படம் போல எடுக்கும் பழக்கத்தை மேற்கு ஐரோப்பாவினர் நிறுத்தவேண்டும். Edukators போன்று சில நல்ல படங்கள் இவ்வதத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும்,
திரைப்படங்களை ஒரு கலையாக இவர்கள் கருதாதது வருத்தமளிக்கிறது. Ben X லில் நல்ல கருத்திருந்தாலும், திரைப்படத்தை மதிப்பிடுகையில் கதை, கருத்தெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது விதிகளில் ஒன்று.

9. Hae anseon (Coast Guard). கொரியா.

லூசுத்தனமாக படமெடுப்பதையே தனது சிறப்பம்சமாக ஆக்கியிருக்கும் கி-டுக்-கிம் இன் மற்றொரு படம்.

Monday, January 19, 2009

தேசியம் போற்றும் இலங்கைத் தமிழர்!

இனவெறி காரணமாக புலிகளை ஆதரிக்கும் இந்தியத் தமிழர்கள், தேசியம் போற்றும் இலங்கைத் தமிழரின் கருத்துகளையும் கேட்டறிவது நல்லது. அதற்கு பின்வரும் இணையதளங்கள் உதவியாகயிருக்கும்.

1. தேனீ.
2. அதிரடி.
3. நெருப்பு.
4. இலங்கை.நெட்
5. மீன்மகள்.
6. இலக்கு.
7. நிதர்சனம்.
8. முழக்கம்.

Sunday, January 18, 2009

பிரபாகரனின் பொந்து

பிரபாகரன் என்கிற பெருச்சாலி தர்மாபுரத்தில் பயன்படுத்தி வந்த 'பதுங்கு குழி'யின் படங்களை இராணுவம் வெளியிட்டுள்ளது. இங்கே.

Saturday, January 17, 2009

ஈழம் என்ற ஒரு நாடே இல்லை! -- ஜெயலலிதா.

"ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்." -- ஜெயலலிதா.

வாவ்! இதுவல்லவா பேட்டி. ஓட்டுக்காகவும், புலிகளிடமிருந்து கிடைக்கும் பணத்துக்காகவும் உண்மையை விலைபேசும், இனவெறி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மையாகப் பேசும் ஜெயலலிதா பாராட்டப்பட வேண்டியவர்.

பி.கு: 1996 தேர்தலில் அதிமுக அரசை வெளியேற்ற நான் திமுகவிற்கு தேர்தல் வேலை செய்திருக்கிறேன். மற்றபடி தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது. திமுக, அதிமுக இரண்டுக்குமே நான் வெவ்வேறு தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன்.

Friday, January 16, 2009

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா

சுசித்ரா அகாதமியும் கர்நாடக அரசும் சேர்ந்து நடத்தும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா வியாழனன்று (ஜனவரி 15) துவங்கியது. இதில் திரையிடப்படும் படங்களின் அட்டவனை இங்கே.

இன்றிரவு (வெள்ளி) ஆந்த்ரே வாஜ்டாவின் கடீன் என்ற போலந்து நாட்டுப் படத்தைப் பார்த்தேன். பார்க்கலாம். அடுத்த வாரம் விழா முடிந்தவுடன் நான் பார்த்த படங்களின் விமர்சனம் எழுதுகிறேன்.

குறிப்பு: இவ்விழாவில் படங்களைப் பார்ப்பதற்கு ஒட்டுமொத்த அனுமதிச்சீட்டு வேண்டும். திரையரங்க வாசலில் பெற்றுக்கொள்ளலாம். விலை ரூ 500. திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ரூ 300. மாணவர்களுக்கும் சலுகை விலையில் கிடைக்கும்.

Thursday, January 15, 2009

உலகுக்கே வழிகாட்டும் ராஜபக்ஸே!

ஒபாமா வந்து இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான போரை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறது ஒரு கூட்டம். ஆனால் தீவிரவாதிகளை எப்படி ஒழிக்கவேண்டுமென்று அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ராஜபக்ஸேவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறது வால் ஸ்டிரீட் ஜர்னல்!

"Colombo's military strategy against Tamil terrorists has worked. Negotiations haven't. That's an important reminder as Israel faces its own terrorism problem and as the U.S. works to foster stability and political progress in Iraq. Take note, Barack Obama."

நன்றி: WSJ.

Wednesday, January 14, 2009

இந்தியத் திருநாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளிலும், ஒரே காரணத்துக்காக, கிட்டத்தட்ட ஒரே விதமாக திருநாளாய் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான இந்நாள் தவிர்த்து ஒரே நாளில், ஒரே காரணத்துக்காகக் கொண்டாடப்படும் வேறு பண்பாட்டுத் திருநாள் இருப்பதாகத் தெரியவில்லை.

தீபாவளி இந்தியா முழுக்கக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் விதமும், காரணமும் பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. புத்தாண்டும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் அவரவர் பயன்படுத்தும் நாட்காட்டி கொண்டு வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி கொண்டாடப் படுவதன் காரணமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முற்றும் வேறுபட்டிருக்கிறது.

இந்தியாவில் சங்கராந்தி எந்த பகுதியில், என்ன பெயரில், எவ்வாறு கொண்டாப் படுகிறது என்கிற பட்டியல் கீழே! எல்லா பகுதிகளிலுமே சூரியன் மகரரேகையிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பும் நாள்தான் திருநாள். உழவர்கள் அறுவடை முடிந்த சந்தோஷத்தில் கொண்டாடுவதே காரணம்.

தெற்கு:

1. தமிழகம் - பொங்கல் - முதல் நாள் போகியன்று நெர்களைந்த கதிர்களை தீயிட்டு கொளுத்தி சுத்தம் செய்து, அடுத்த தினம் பொங்கலிட்டு சூரியனை வழிபடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் மாட்டுப்பொங்கலாகவும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகின்றன.
2. ஆந்திரா - பெத்த பண்டுகா - தமிழகத்தை போன்றே போகி, சங்கராந்தி, கணுமா, முக்கணுமா என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள். பட்டம் விடுதலும் உண்டு.
3. கர்நாடகம் - சங்கராந்தி - எள்ளும், வெல்லமும் கலந்த 'எள்ளு-பெல்லா' என்ற திண்பண்டம் இங்கே சிறப்பு.
4. கேரளா - சங்கராந்தி - இங்கு சூரியனின் உத்தராயணம் கொண்டாடப்பட்டாலும் அது உழவர் திருநாளாக இல்லை. ஓணமே அவர்களது உழவர் திருநாள்.

வடக்கு:

1. பஞ்சாப் - லோஹிரி/மகி - லோகிரியன்று தீயில் கறும்பு, அரிசி ஆகியவற்றை கொளுத்தி, சுற்றி வந்து பாட்டுப்பாடி நடனமாடுகிறார்கள். அடுத்த நாள் மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
2. உத்தராஞ்சல் - கூகுடியா - அரிசியும், பருப்பும் கலந்த கிச்சிடியை சூரியனுக்கு படைக்கின்றனர். 'காலே கவ்வா' (கருப்புக் காகம்) என்று குழந்தைகள் பாடி காகங்களை கிச்சிடி சாப்பிட அழைக்கின்றனர்.
3. உத்திர பிரதேசம் - கிச்சிடி - கங்கையில் குளித்து சூரியனைக் குறிக்கும் காயத்ரி மந்திரம் சொல்லி கிச்சிடி படைக்கிறார்கள்.
4. மத்திய பிரதேசம் - சுக்ராத் - இனிப்பு பலகாரங்கள் இங்கு சிறப்பு.

கிழக்கு:

1. அசாம் - உருகா/போகாலி பீகு - முதல் நாள் உருகாவில் 'பேலாகர்' என்ற சக்கைகளிலான வீடு கட்டப்பட்டு மேஜி என்ற பெயரில் தீ கொளுத்தப்படுகிறது. அடுத்த நாள் போகாலி பீகு அன்று சூரியனை வழிபடுகிறார்கள். படங்கள் இங்கே.
2. ஒரிசா - சங்கராந்தி - போகி எரித்தலும், மறுநாள் சூரிய வழிபாடும் இங்கும் உண்டு.
3. வங்காளம் - 'கங்கா சாகர்' என்று கங்கை கடலில் கலக்குமிடத்தில் வழிபடுவது இங்கு சிறப்பு.

மேற்கு:

1. மகாராஷ்டிரம் - சங்கராந்தி - எள்ளில் செய்யப்படும் 'தில்குல்' என்ற பண்டம் இங்கே சிறப்பு.
2. குஜராத் - உத்தராயன் - பட்டம் விடுதல் இங்கு விழாவின் முக்கிய அங்கம்.

படங்களுடன் இந்தியா முழுதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் விதங்களை விளக்கும் கட்டுரைகள் கீழே!

1. நிருபமா சிறீராம் என்பவரின் வலைப்பதிவில் இந்த இடுகை.
2. றீடிஃப் தளத்தில் புகைப்படங்கள் இங்கே.
3. இந்து யங் வேர்ல்டில் இந்த கட்டுரை.

பொங்கலோ பொங்கல்!

கொசுறு: பொங்கல் என்பதை ஆங்கிலத்தில் Pongkal என்று எழுதுவதுதான் சரியோ?

Monday, January 12, 2009

சென்னை புத்தக விழா 2009

சென்னை புத்தக விழாவுக்கு இது 32 ஆவது வருடமாம். நான் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றுவந்தேன். ரொம்ப சுமார்தான்!

தமிழில் இத்தனை பதிப்பகங்கள் எதற்கு இருக்கின்றன என்று விளங்கவில்லை. ஒரே வகையான புத்தகங்களை (பெரும்பாலும் தரமில்லாதவை) பதிப்பித்து இவர்களுக்கு எவ்வாறு போனியாகிறது என்று புரியவில்லை.

விழா அரங்கில் காற்றோட்டமேயில்லாமல் மூச்சு முட்டுகிறது. புத்தகங்களைப் புரட்டிப் படித்து வாங்கிச்செல்பவர்கள் இந்தப் புத்தக விழாவுக்கு வரவேண்டாம்.

பெரும்பாலான கடைகளில் வெகு சில புத்தகங்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கழிவு கேட்பார்களே என்ற பயமா என்று தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தில் பத்தே புத்தகங்களின் பிரதிகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். அந்தப் பத்தும் 'டாலர் மில்லியனர் ஆவது எப்படி' மாதிரியான லூசுகள் படிக்கும் புத்தகங்களே!

கடைகளில் கிடைக்கும் புத்தகங்களில் கணிசமானவை 'ஆன்மீகப் புத்தகங்கள்' என்ற பெயர்கொண்ட மூடநம்பிக்கைத் திரட்டிகள். பாட்டு பாடினால் சனங்களின் குறைபோக்க 'கடவுள்' என்ன பசு மாடா?

தமிழிலிருந்து கன்னடம் கற்றுக்கொள்ள எதாவது புத்தகம் கிடைக்குமா என்று அலைந்து திரிந்து ஓய்துவிட்டேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கடையில் தொல்காப்பியத்தின் எழுத்து மற்றும் சொல்லதிகாரப் புத்த்கங்களை வாங்கினேன். நல்ல பதிப்பு. வாங்கலாம்.

Friday, January 02, 2009

ஈழம் கொண்டான்!

தீவிரவாதிகளிடமிருந்து கிளிநொச்சி மீட்கபட்ட செய்தி இனிய புத்தாண்டுப் பரிசாய் வந்திருக்கிறது! மகிழ்ச்சி.

இந்த வெற்றியை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது குறித்து மேலும் மகிழ்ச்சி. ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னிப் பகுதிகள் அனைத்துமென்று படிப்படியாய் மேலும் பல வெற்றிகள் குவிக்க இலங்கைக்கு எனது வாழ்த்துகள்.

மகிந்தா ராஜபக்சே போன்று சொன்னதை செய்து காட்டும் திடமான தலைவர்கள் கிடைத்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உலகம் வெற்றிபெறமுடியும். ராஜபக்சே தலைமையில் இலங்கை உன்னத நிலையை அடையுமென்று நம்பலாம்.

புலிகளின் தமிழக இனவெறி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உங்களுக்குக் கிடைத்திருக்கும் சமீபத்திய செறுப்படியின் வலி மறைவதற்குள் இலங்கைத் தமிழர்கள் குறித்த உங்களுடைய நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிரையும் நல்வாழ்வையும்விட உங்களின் இனவெறிக் கனவு முக்கியமானதா?