Monday, November 19, 2007

சோனார் கெல்லா - தங்கக் கோட்டை

பல வருடங்களுக்குப் பிறகு சத்யஜித் ரேயின் படம் பார்த்தேன். சோனார் கெல்லா (வங்காள மொழி) என்று ஒரு சிறுவன் தனது பூர்வ ஜென்ம நிகழ்ச்சிகளை நினைவுகொள்வதாகச் செல்லும் ஒரு துப்பறியும் கதை. சிறந்த படமெல்லாமில்லை. ஆனால் பல நல்ல விசயங்கள் தெரியவந்தன. தமிழில் இது போன்று (சமீபத்தில்) ஏன் செய்யவில்லை என்று கேட்கத்தூண்டுபவை.

1. ரேயின் புகழ்பெற்ற பெலூடா, தோப்ஷே மற்றும் லால் மோகன் என்னும் பாத்திரங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். பெலூ - துப்பறிவாளர், தோப்ஷே அவருக்கு உதவும் உறவுக்காரப் பையன், லால் மோகன் - ஜடாயு என்ற பெயரில் குழந்தைகளுக்கான கதைகள் எழுதுபவர். ரேயின் பல படங்களில் இந்த மூன்று பாத்திரங்களும் இடம்பெறுகிறார்கள்.

கேள்விகள்: தமிழில் ஏன் இத்தகைய பாத்திரங்கள் உருவாக்கப்படவில்லை? சாம்பு என்று அந்த காலத்தில் செய்திருந்தார்களே? ஆங்கிலத்தில் வவ்வால் மனிதன், சிலந்தி மனிதன், ஜேம்ஸ் பாண்ட், போர்ன் என்று பட்டை கிளப்புகிறார்களே? சுஜாதாவின் கணேஷ் வசந்தை வைத்து பல படங்கள் எடுத்திருக்கலாமே? ஒரே கதையை பல படங்களாக எடுத்த சங்கர் ஒரே நடிகர், பாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கலாமே?

2. இந்தப்படமே ஒரு கோட்டையைப் பற்றியது என்பதால் இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மேர் கோட்டைகளைக் காட்டுகிறார்கள். அவற்றின் வரலாறும் ஒரளவு தெரிகிறது.

கேள்வி: தமிழ் நாட்டிலுள்ள கோட்டைகளான சென்னை புனித ஜார்ஜ், வேலூர், செஞ்சி, தரங்கம்பாடி, தஞ்சை, மதுரை நாயக்கர் மகால், அறந்தாங்கி, பாஞ்சாலங் குறிச்சி, திண்டுக்கல், வட்டக்கோட்டை, உதயகிரி பற்றியயெல்லாம் தமிழர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு எதாவது தெரியுமா?

3. இந்தப்படத்தை மேற்கு வங்காள அரசு தயாரித்திருக்கிறது.

இடி அமீன் கதையான The Last King of Scotland படத்தை ஐக்கிய ராச்சிய அரசு சேர்ந்து தயாரித்து இருந்தது! தமிழர் வரலாறு சம்பந்தப்பட்ட படைப்புகளை அரசே படமாக எடுக்கலாமே? பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், இராவண காவியம் (?!), செஞ்சிக் கோட்டை பற்றிய கல்கியின் சிறுகதை போன்றவை உடனே நினைவுக்கு வருகின்றன.

பெரியார் படத்துக்கு அரசு பணம் கொடுத்ததென்று நினைக்கிறேன். ஆனால் அந்தப் படத்தை ஐந்து நிமிடங்கள்கூட என்னால் பார்க்கமுடியவில்லை. அவ்வளவு மட்டமாக பெரியார் படத்தை எடுத்திருக்கத் தேவையில்லை!

4 comments:

Anonymous said...

Periyar padaththai aindhu nimidam kooda paarkkamudiyavillai. en ippadi unmaiyai solli neengal paarppanar ...... thittu vaangikkolgireergal.
Ippavellam oorukku ilaththavan naamdhan

Balaji said...

சரியாப் போச்சு! பெரியார் படத்தை ஒழுங்கா எடுக்காம கெடுத்துட்டாங்கன்னு நான் புலம்பிட்டு இருக்கேன். நீங்க உல்டாவாக்கிட்டீங்களே! பெரியார் இல்லையென்றால் தமிழ்நாடு அடைந்திருக்கும் ஓரளவு சமூக நீதிகூட கிடைத்திருக்காது என்று நினைப்பவன் நான்.

>> Ippavellam oorukku ilaththavan naamdhan

ஐயா என்னை விட்டுடுங்க. எனக்கு ஒரு சாதியும் கிடையாது. நான் ஒரு Right wing, atheist, vegan (all by choice) who also happens be a Tamil, Hindu and Indian (all by birth)!

ரவிசங்கர் said...

படத்தை விமர்சிச்சா ஆள கட்சியில சேர்த்துடுறாங்களே :) படத்தைப் படமா பாருங்கப்பா :)

G.Ragavan said...

ஷோனோர் கெல்லா... புத்தகமாகவும் படித்திருக்கிறேன். படமாகவும் பார்த்திருக்கிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். சத்யஜித்ரேயின் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அப்படிப் படித்ததுதான். பெலூதாவின் கதைகள்...மொத்தம் மூன்று தொகுதிகள் என்னிடம். இதே போல ஜெய் பாபா பெலூ நாத் என்ற படமும் இதே கதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதே. அதில் ஜடாயுவாக நடித்தவர் சந்தோஷ் தத்தா. அவர் இறந்து போய் விட்டார். அத்தோடு பெலூதா கதைகளைப் படமாக எடுப்பதும் நிறுத்தப்பட்டது. தமிழில் இது போன்ற படங்கள்.....அதீத எதிர்பார்ப்புதான் என்று தோன்றுகிறது.