Monday, November 26, 2007

பொல்லாதவன், ஆமாம்!

அப்பாடா! கடைசியா ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாச்சு. 'பொல்லாதவன்' - கலக்கிட்டீங்க வெற்றிமாறன்! தமிழ் சினிமா முன்னேறிட்டு வருது என்று பலரும் சொல்லும்போது, நிஜமா? என்று தோன்றும்.

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்த்த தமிழ்ப்படம் 6-7 தான் (?!) இருக்கும். 'சிவாஜி', 'வேட்டையாடு' - கேவலம். 'மொழி', 'வெயில்', 'பச்சைக்கிளி' - சுமார். 'இம்சை', 'பட்டியல்' - நன்று! மற்றபடி ஊடகங்களிலும், பதிவுகளிலும் பேசப்பட்ட படங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.

கூகுள் வீடியோவில் பார்த்தாலும் திருட்டுதானே என்கிற வருத்தத்தோடுதான் 'பொல்லாதவன்' பார்த்தேன். நல்ல நகைச்சுவை, கச்சிதமான பாத்திரங்கள், பிசிரில்லாத நடிப்பு, வசனங்கள், நம்பும்படியான காட்சிகள். இவற்றிற்காகவே இந்தப்படத்தைப் பாராட்டலாம்.

ஆனால் அதற்கும் மேலாக விருவிருப்பான திரைக்கதை, நாயகன், வில்லன் இருவர் பார்வையிலும் வர்ணனை மாறும் உத்தி, செல்வம், அவுட் மாதிரியான பாத்திரங்களையே நமக்குப் பிடித்துவிடும்படியான காட்சிகள், நாயகன் தங்கச்சியை வில்லன் கடத்துவான் என்று நினைக்கும் நம்மை கேலிசெய்யும் இயக்கம்!, ஒரு அடியாளை 'அடிச்சுடு பிரபு' என்று நாயகி சொல்லும் ஹைக்கூ! கலக்கியிருக்கிறார்கள்!

பாடல்கள் எல்லாமே தேவையில்லாதவை. அதுவும் வில்லன்கள் ஆடும் ஒரு குத்துப்பாட்டு திருஷ்டிப் பொட்டு. மற்றபடி நான் மிகவும் ரசித்த படம்.

No comments: