Wednesday, January 30, 2008

போடுங்கம்மா ஓட்டு!

அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்தெடுக்க உட்கட்சித் தேர்தல்கள் நடந்துவருவது நீங்கள் அறிந்ததே. தேர்தல்கள் குறித்து லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த இருவர் நடத்திவரும் யூடூப் அலைவரிசை மிகவும் பிரபலமாகிவிட்டது. சும்மா சொல்லக்கூடாது...சிரித்து சிரித்து வயிரே புண்ணாகிவிடும் போலிருக்கிறது! நீங்களே பாருங்களேன் ...

Tuesday, January 29, 2008

யானைக்கும் அடிசறுக்கும்!

நான் மிகவும் மதிக்கும் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தினமணியில் எழுதிய கருத்து என்னை வியப்பில் ஆழ்த்தியது! முதலில் அவர் சொன்ன கருத்தை கீழே தருகிறேன்.

-------------- தினமணி 26.1.2008 ---------------
"சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது, இயற்கையான காலக் கணக்கீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறியிருப்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்பதற்கு இல்லை.
ஏனெனில், சித்திரை முதல் தேதியன்று (ஏப்ரல் 13 14) முற்காலத்தில் நிகழ்ந்த விசு (பகலும் இரவும் ஒரே கால அளவைக் கொண்ட நாள்) தற்காலத்தில் பங்குனி 8 9 தேதிகளிலேயே (மார்ச் 21 22) நிகழ்ந்து விடுகிறது.இது போன்றே, ஐப்பசி விசு, தட்சிண அயனம், உத்தர அயனம் ஆகிய வானவியல் இயற்கை நிகழ்வுகளும் இன்றையப் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு முன்னரே நிகழ்ந்து விடுகின்றன. "சித்திரை' விசு பங்குனியிலும், "அய்ப்பசி' விசு புரட்டாசியிலும் தற்காலத்தில் நிகழ்கின்றன. இவை அறிவியல் அடிப்படையிலான இன்றைய வானவியல் காட்டும் நிதர்சன உண்மைகளாகும். இக்குழப்பத்துக்கு நம் முன்னோர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவ்வப்பொழுது வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் யதார்த்த நிலைகளைக் கணக்கிட்டு பஞ்சாங்கங் களை காலத்துக்கு ஏற்ப அறிவியல் கண்ணோட்டத்தில் திருத்திக் கொள்ளாத நமது தலைமுறையினரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற் காலத்தில் அயனப் பிறப்பு நாட்கள் தலைகீழாக மாறி, உத் தராயணப் புண்ணிய காலத்தை தட்சிணியானப் பிறப்பு நாளான்று கொண்டாட நேரிடும்.இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்க ளின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு?
வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதை காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டு விடலாம்."

அய்ராவதம் மகாதேவன்,
சென்னை88.
----------------------------------------------------

நன்றி: தினமணி.

1. வரலாற்று ரீதியிலும், தமிழ் மரபின் படியும் சித்திரைதான் தமிழர் புத்தாண்டு என்பதை மகாதேவன் உறுதிப்படுத்தியது குறித்து மகிழ்ச்சியே!
2. Equinox Correction செய்யாததால் பஞ்சாங்கங்களும், தமிழர் நாட்காட்டிகளும் அறிவியல் துல்லியத்தை இழந்துவிட்டன என்று மாநாடுகளில் அவர் தெரிவித்து வருவது குறித்தும் மகிழ்ச்சியே!
3. Equinox Correction செய்யாத பட்சத்தில் சித்திரையில் வரும் புத்தாண்டின் தேதி (Date) தவறு என்று குறிப்பிட்டது குறித்தும் மகிழ்ச்சியே!

இப்போ கேள்விகள்:

1. பஞ்சாங்கத்தை மாற்ற நமக்குத் துணிவில்லை என்று கடிந்துகொள்ளும் இவருக்கு பொங்கலும் தவறான தேதியிலேயே கொண்டாடப் படுகிறது என்று தெளிவாகச் சொல்லத் துணிவில்லாமல் போனது ஏன்? Winter Solstice என்ற உத்தராயணம் அன்றுதான் பொங்கல் என்னும் உழவர் திருநாள் என்றால், அது December 21 அன்றுதானே கொண்டாடப் படவேண்டும்?
2. எல்லா தமிழ் நாட்களுமே (விதைக்கும் நாள், அறுவடை நாள்) தப்பு என்றால் January 14, 15 என்று ஆங்கில நாட்காட்டி வைத்து பொங்கலைக் கொண்டாடலாம் என்று வெட்கமில்லாமல் சொல்கிறாரா?
3. பொங்கல் மற்றும் சித்திரைப் புத்தாண்டு இரண்டுமே தப்பான தேதியில் கொண்டாடப் படுவது தெரிந்தும், இரண்டில் ஒன்றை அழித்து ஒரே 'தவறான' நாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமென்ன?
4. எகிப்தில் கி.மு. 300 மற்றும் கி.மு. 200 வாக்கில் தமிழ் பிராமியில் எழுதப்பட்ட இரண்டு ஓட்டுத் துண்டுகள் இடைக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். என்னதான் carbon dating செய்தாலும் அந்த ஓட்டுத் துண்டுகள் சரியாக எந்தத் தேதியில் உருவானது என்று கணிக்கமுடியாதுதானே? அதனால் இரண்டு ஓட்டுத்துண்டுகளில் பெரியதாய் தெரியும் ஓட்டுத்துண்டையோ, பழையது என்று கருதப்படும் ஓட்டுத்துண்டையோ வைத்துக்கொண்டு மற்றதைத் தூக்கி எறிந்துவிடாலாம் என்று இவர் சொல்வாரா?

ஐராவதம் என்ற யானைக்கும் அடிசறுக்கும் போலிருக்கிறது.

உங்கள் யாருக்கேனும் ஐராவதம் மகாதேவன் அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியுமென்றால், அவரிடம் இதுகுறித்து வினவி எனக்கும் சொல்லுங்களேன்!

Sunday, January 27, 2008

கிழங்கட்டைகள் மாநாடு - 1921 - பகுதி 2

முதல் பகுதி இங்கே.

மறைமலை அடிகள்: அதுல என்ன பிரச்சனைன்னா, தமிழுல சமசுகிரத வார்த்தைகளோட கலப்புனால தமிழே அழிஞ்சுண்டு வருது. நான் வடமொழி எழுத்துக்களைத் தவிர்த்து முடிந்தவரை தமிழ் எழுத்துக்களையும், முக்கியமா தமிழ் வார்த்தைங்களையும் பயன்படுத்தனும்னு ரொம்ப நாளா சொல்லிண்டுவரேன்.

வீரமாமுனிவர் (Fr. Beschi) என்கிற பாதிரியார், எப்பவோ ஆரம்பிச்ச பணி இன்னும் முடியவேயில்ல. இது முடியற வேலையும் இல்ல. பிற மொழிகள்லேர்ந்து புதுசு புதுசா சொற்கள் வந்துட்டேதான் இருக்கும். நாமலும் விடாம அதையெல்லாம் தமிழ் ஆக்கிட்டேதான் இருக்கனும்.

கிழடு 1: (மனதுக்குள்) ஐய்யய்யோ! இன்னிக்கு நம்மை ஆத்துக்கு அனுப்புவாளா மாட்டாளா? வார்த்தைகள் வந்துண்டேயிருக்கும்னா என்ன ... குமாஸ்தா கொண்டுவருவாரா? நான் மூக்குக்கண்ணாடி கூட கொண்டுவரலியே! எப்படி படிக்கிறது. எப்படி மாத்தறது?

மறைமலை அடிகள்: (சலசலப்புகளை கவனிக்காமல்...) இன்னிக்கு நாம கூடியிருக்கறது தமிழ் மாதப் பெயர்கள், ஆண்டுப் பெயர்கள், ஓரைப் பெயர்கள்... இவையெல்லாத்துலயும் இருக்குற வடமொழிப் பெயர்களுக்கு மாற்றா நல்ல தமிழ்ப்பெயர் கண்டுபிடிக்கத்தான். அதோட இயேசு கிருசுதவர் பெயரில் ஆங்கிலேயர்கள் வைத்திருக்கும் ஆண்டுக் கணக்குபோல நாமும் தமிழுக்காக திருவள்ளுவர் ஆண்டு உருவாக்கலாமான்னு ஆலோசித்து முடிவுசெய்யலாம். இப்ப நீங்க உங்களோட கருத்துகள சொல்லுங்க.

கிழடு 2: அட என்ன அடிகளாரே இப்படி சொல்லீட்டிங்க? நாம பயன்படுத்தற நட்ஷத்திரம், வருஷம், மாசப் பேரெல்லாம் ஆரியர்கள் நம்ம மேலத் திணிச்சதுதானே?! இந்த காலண்டர் எல்லாத்தையுமே தூக்கிக் கடாசிட்டு நாம புதுசா எதாவது கண்டுபிடிக்கனும். பல ஆயிரம் ஆண்டுகளாய் மணி, நாள் பார்க்கக்கூட இன்னொருத்தனுக்கு கைக்கட்டி நின்ன நிலைமை ஒழியனும்.

கிழடு 1: (மனதுக்குள்) பகவானே! காலண்டர் கண்டுபிடிக்கனுமா?!! (வாய்விட்டு) அட என்ன ஓய் சொல்றீர்? இதெல்லாம் எங்களவா கொண்டுவந்ததுன்னா, இங்கே இருந்தவா யூஸ் பண்ணின காலண்டரெல்லாம் எங்கப் போச்சு? அதைக் கண்டுபிடிச்சு மாத்திட்டா போறது. என்னமோ தமிழா காலண்டரெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுங்கற மாதிரி அபசகுனமா பேசுறீரே?

கிழடு 2: யோவ்! நீயென்னய்யா வெளக்கென்ன மாதிரி பேசிகிட்டு? ஆதிதமிழன் எப்படியா காலண்டரெல்லாம் கண்டுபிடிச்சிருப்பான்? அவனே வேட்டையாடினோமா, மீன் பிடிச்சோமா, விவசாயம் செஞ்சோமா, கல்லு நட்டு கும்மிட்டோமான்னு இருந்தான். இந்த காலண்டர் கீலண்டரெல்லாம் கண்டுபிடிக்க அவனுக்கென்ன உம்மமாதிரி உட்காந்த எடத்துல மாட்டுக்கறி தட்சனையா கிடைச்சது?

கிழடு 1: அபச்சாரம் அபச்சாரம்! நாங்கல்லாம் மாமிசம் சாப்பிடறவாயில்ல. பசு காமதேணு! தப்பா பேசாதேள். அதை விடும். காலண்டரேயில்லன்னா எப்படி ஓய் உங்களவா அறுவடை நாளெல்லாம் எண்ணியிருப்பா?

கிழடு 2: (யோசிக்கிறார்...) ம்... அது எவனாவது நல்ல பையனா புடிச்சு ஒரு மரத்துல வவ்வாலு மாதிரி தொங்க விட்டுடுவாங்கப்பா. அவன் வேலையே பொழுது விடிஞ்சா மரத்துல பிராண்டி கோடு போடறதுதான். அப்படியே நாள எண்ணிடலாமில்ல?

கிழடு 1: நீங்க சொல்றது வாஸ்தவம்தான்! ஆனா இந்தகாலத்துல அப்படி பொறுப்பா கோடு போட மனுஷா கிடைப்பாளா ஓய்?

கிழடு 2: (மீண்டும் யோசிக்கிறார் ...) பாண்டிச்சேரில சுப்புன்னு ஒரு பையன் இருக்கான். தமிழ்ன்னா அவனுக்கு வெறி. பாரதிதாசன்னு பேரெல்லாம் மாத்திக்கிட்டான். தை மாசந்தான் தமிழ்ப் புத்தாண்டுன்னு பாட்டெல்லாம் பாடியிருக்கான். அவன வேணும்னா கேட்டுப்பாக்கலாம், தொங்கறியாடான்னு...

மறைமலை அடிகள்: யோவ்! உங்களையெல்லாம் எவன்ய்யா தமிழறஞருன்னு அறிவிச்சான்? அசிங்கமா அரசியல் பேசிட்டு இருக்கீங்க. விவரம் தெரியலன்னா ஒரு ஓரமா உட்காந்து கதை கேளுங்க. கன்னாபின்னான்னு உளறி இங்க வந்திருக்கிற பெரிய மனுசங்க பேரைக் கெடுக்காதிங்க.

தொடரும் ...

Saturday, January 26, 2008

கிழங்கட்டைகள் மாநாடு - 1921

இது தமிழன் புத்தாண்டு எப்போது ஆரம்பிக்கிறது என்றுகூடத் தெரியாமல் குழம்பி, அவன் நிலைமை சந்தி சிரிப்பதற்குக் காரணமாயிருந்த "தமிழறிஞர் மாநாடு" எப்படி நடந்திருக்கும் என்பதை சித்தரிக்கும் நையாண்டி நாடகம். இதில் சில வரலாற்றுச் செய்திகள் தப்பித்தவறி இடம்பெறலாம்!

இடம்: சென்னை பச்சையப்பன் கல்லூரி.

நாள்: 1921 இல் எதோவொரு ஞாயிற்றுக்கிழமை.

பங்குபெறுவோர்: மறைமலை அடிகள், திரு.வி.கல்யாணசுந்தரம், கி. ஆ. பெ. விசுவநாதன் மற்றும் சிலபல கிழடுகள்.

வரவேற்புக் காண்டம்:

கா. நமச்சிவாயம்: நாம இன்னிக்கு எதுக்கு இங்க கூடியிருக்கிறோமுன்னு எனக்கு சரியா தெரியல! காலையில் எங்க வீட்டுக்காரம்மா ஆ(பசு)வின் பால் வாங்கிட்டு வாங்கன்னு கடைத்தெருவுக்கு அனுப்பினாங்க. பச்சையப்பன் கல்லூரி வாசல்ல மறைமலை அடிகளார் நின்னுட்டு ஆள்பிடித்துக் கொண்டிருந்தாரு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும். எதுன்னாலும் அவரையே கேளுங்க. நான் இங்க வந்தேன்னு தெரிஞ்சாலே வெள்ளைக்காரத் துரை என்னை பேராசிரியர் பதவியிலிருந்து தூக்கிடுவான். என்னை விட்டுடுங்க! நான் கிளம்பறேன்!

மறைமலை அடிகள்: யோவ்! ஓடாத நில்லுய்யா ... சரி போகட்டும். அதெனய்யா "மறைமலை அடிகளார்"? நான் என்ன போலிச் சாமியாரா? எங்க அப்பனாத்தா அழகா வேதாசலம்ன்னு பேரு வச்சாங்க. சரி பேருலயே வேதம் இருக்கே அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வேதம் படிக்கலாமுன்னு ஆரம்பிச்சேன்.

அதுல பாத்தீங்கன்னா எனக்கு சமசுகிரதம் ஒரளவு நல்லாவே தெரியும். ஆனா அது பணினிங்கறவர் (Panini) காலத்துலயிருந்து இருக்கிற செம்மையான (Classical) சமசுகிரதம். ரிக்வேதமெல்லாம் எழுதினது அதுக்கும் முன்னாடி இருந்த பழம் சமசுகிரதம் (Old Sanskrit). அந்த சமசுகிரதம் பாரசீகத்துல (Iran/Afghanistan) புழங்கினதா சொல்றாங்க. அது கிட்டத்தட்ட சோராசுதிரர் பேசுன அவசுதா (Old Avestan) மாதிரி இருக்கும்.

யோவ்! சோமசுந்தரம் இல்லைய்யா... சோராசுதிரர் (Zoroaster)! பம்பாயிலிருந்து கஞ்சா ஏற்றுமதி (Opium Export) செஞ்சு வந்த பணத்துல உருக்காலை (TISCO) ஆரம்பிச்சிருக்காங்கலே டாடா (Tata) குடும்பம், அவங்களோட மதகுருதான் சோராசுதிரர். அவங்க மதத்துக்காரங்கள பாரசின்னு (Parsis) அழைப்பாங்க.

சரி அத விடுங்க. அந்த கடினமான சமசுகிரதத்துல எழுதின அத்துனை வேதப் பாட்டுங்களையும் என்னோடு சமசுகிரத அறிவ வச்சிண்டு புரிஞ்சுக்க முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டேன். அதனால வேதம் (மறை) மலை மாதிரி. நான் அந்தமலையோட அடியில் நின்னு படிச்சுகிட்டிருக்கேன்னு அடக்கமா ஒரு பேரு வச்சிக்கிட்டேன். நீங்க என்னடான்னா அடிகளார் கிடிகளார்ன்னு சொல்லி என்னை செயிலுக்கு அனுப்பிடுவீங்க போலயிருக்கே?!

சே! நாம எதுக்கு கூடியிருக்கோங்கறதே மறந்துடப்போவுது. நாம தமிழ் பத்தி பேசவந்திருக்கோம். அதுல என்ன பிரச்சனைன்னா...

கிழடு 1: (மனதுக்குள்) நாசமாப் போச்சு! இப்பதான் இவரு பேசவே ஆரம்பிக்கிறாரா? நான் சீக்கிரம் முடிஞ்சிடும். மத்தியாணம் ஆத்துக்கு போய், கெளசல்யா பண்ணின சாத்துமது சாதத்துல வாழைக்காய் கர்னமது போட்டு ஒரு பிடி பிடிக்கலாமுன்னு நினைச்சனே!

தொடரும் ...

Friday, January 25, 2008

கட்டற்ற மென்பொருள் மாநாடு!

சென்னையில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் மாநாடு பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆமாச்சு எழுதிய பின்வரும் மடலைவிட சிறப்பாக என்னால் எழுதமுடியாது. நீங்களே படித்துக்கொள்ளுங்கள்!

----- ஆமாச்சுவின் மடல் -----

நல்ல சேதி! நல்ல சேதி! இத்தனை நாளா நம்மைப் பிடித்திருக்கும் அடிமை மோகச் சங்கிலியிலிருந்து விடுதலையடைய மகத்தானதொரு வாய்ப்பு! என்ன? எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கும் மென்பொருளை எட்டிப் பிடிக்க விழைவோருக்கானது இது! தப்பென தெரிந்தும் காப்பியடிக்கும் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய ஒரு சந்தர்ப்பம்!

குட்டிக் குழந்தைகள், அன்புத் தோழர்கள் ஆற்றல் மிக்க தொழில் முனைவோர் என அனைவருக்கும் அரியதொரு வாய்ப்பு! விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் விண்டோஸை விரட்டி தைப் பிறந்தக் கையுடன் வழிக் காட்ட நாங்கள் செய்திருக்கும் இவ்வேற்பாடு!

என்ன? கட்டற்ற மென்பொருள் மாநாடு

அப்டீன்னா? குனு/ லினக்ஸ் இயங்குதள ஆற்றல்களின் அணிவகுப்பு

எங்கே? எம்.ஐ.டி வளாகம், குரோம் பேட்டை, சென்னை

எப்போ? பிப்ரவரி 01, 02, 03

விசேஷம்? இது உங்களுக்கானது

விவரங்களுக்கு? http://fossconf.in

வேறென்ன? அடடே! வல வலன்னு பேசாம! வந்து தான் பாருங்களேன்!

-----------------------------

இவ்வளவு அழகா கூப்பிடறாரில்ல? போய்தான் பாருங்களேன்! மாநாட்டை நடத்தும் Chennai LUG மற்றும் NRCFOSS ஆகியோருக்கு ஒரு ஓ! போடுங்க. அவர்களோடு சேர்ந்து நீங்களும் பங்களிக்கலாம்.

Thursday, January 24, 2008

சித்திரையைக் காப்பாற்றுங்கள்!

தமிழரின் புத்தாண்டு தினம் (சித்திரை முதல் நாள்) அழிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கலாசாரத்தை சீரழித்த தாலிபான்களே கண்டுவியக்கும் அளவுக்கு இன்று தமிழ்க் கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சி நடந்துவருகிறது. மா சே துங் கலாசாரப் புரட்சி என்ற பெயரால் சீனர்களை வீணர்கள் ஆக்கியதுபோல் இன்று தமிழரின் பண்பாட்டு வேர்களைப் பிடிங்கி முட்டாள்களாக்கும் முயற்சி நடக்கிறது. தமிழ்த்தாயின் கண்ணீர் துடைக்க வாரீர்!

1. சூரியன் (solar), சந்திரன் (lunar) அல்லது இரண்டும் சேர்த்து (lunisolar) நாட்களைக் கணக்கிடுவது எல்லா சமுதாயங்களிலும், எல்லா மக்களிடத்தேயும் இருக்கும் வழக்கமே. ஆங்கில Calendar சூரிய நாட்காட்டிதானே? இந்தமுறையை மூடப்பழக்கமாகவும், மத நம்பிக்கையாகவும் சித்தரிப்பது எதற்காக?
2. திருவள்ளுவர் கி.மு. 31 இல் அதுவும் தைத்திங்கள் இரண்டாம் நாளில் பிறந்தார் என்னும் படுகேவலமான மூடநம்பிக்கையை மக்களிடையே பரப்பும் முயற்சி நடக்கிறது. வாழ்க பகுத்தறிவு!
3. இந்தியாவில் தமிழகமும், கேரளம், அசாம், வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சூரிய (solar) நாட்காட்டியை பயன்படுத்துகின்றன. மற்ற மாநிலங்களின் கலாசார நாட்காட்டிகள் lunisolar முறையைப் பயன்படுத்துகின்றன. கேரளம் மகர சங்கராந்தி (January), விஷு (April), உழவர் திருநாளாக ஓணம் (August) என்று படுஆர்வமாக தனது கலாசாரத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் தமிழன் சித்திரை முதல் நாளைக் கொண்டாடுவது இங்கு சிலருக்குப் பிடிக்கவில்லை!
4. பஞ்சாபில் பொங்கலை லோரியாகவும், வைகாசி (நம் கணக்கில் சித்திரை) முதல் நாளைப் புத்தாண்டாகவும் (பைசாக்கி) வெகு விமர்சியாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழும் தெரிந்த பஞ்சாபி ஆளுனர் பர்னாலாவின் உரையைக் கொண்டே தமிழ்ப் புத்தாண்டுக்கு வேட்டுவைத்துவிட்டார்களே?
5. இன்று சீனப் புத்தாண்டைக் கொண்டாடாதவரே உலகில் இல்லை! கூகுள் தனது முதல்பக்கத்திலேயே சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறது. எனது Blogger Profile பக்கத்தில் நான் 'நாய்' வருடத்தில் (1982) பிறந்தது குறிப்பிடப்படுகிறது. அந்த நாய் எங்கிருந்து வந்தது? சீனர்கள் சூரிய 60 ஆண்டுக்கணக்கை அசிங்கமாகக் கருதவில்லையே?
6. தமிழன் அந்த அறுபது ஆண்டுகளுக்கு ஆரிய அறிஞர்களின் பெயர்கள் வழங்கிய ஒரே காரணத்துக்காக அம்முறையை அழித்தது எதற்காக? பாலாஜி என்ற என் பெயரை பாலாசி என்று மாற்றக் கோரிய மறைமலை அடிகள் உள்ளிட்ட கிழங்கட்டைகள் அந்த அறுபது ஆண்டுகளுக்கும் திருவள்ளுவன், கம்பன், அவ்வை, இளங்கோ என்று பெயரிட்டு அவர்களுக்கு இறவா புகழ் வாங்கித்தந்திருக்கலாமே?
7. சந்திர நாட்காட்டி பயன்படுத்தப்படும் அரபு நாட்டில், நபிகள் நாயகம் அவர்கள் மக்கா நகரிலிருந்து மெதினா நகருக்குச் சென்ற ஆண்டை முதல் ஆண்டாக வைத்துக்கொண்டாலும், அவர் சென்ற ரபி மாதத்தை முதல்மாதமாக வைக்க அடம்பிடிக்கவில்லையே? முஹரம் மாதத்தைத்தானே முதல்மாதமாக அனுசரிக்கிறார்கள். ரமலான், மிலாது நபி போன்ற நாட்கள் வரும் மாதங்களை அவர்கள் கோலாகலமாகக் கொண்டாடுவது அதனால் நின்றுவிட்டதா? தமிழன் பொங்கலன்று புத்தாண்டாக இல்லாவிட்டால் பொங்கல் கொண்டாடுவதை நிறுத்திவிடுவானா?
8. பொங்கல் மதச்சார்பற்ற நாளாம். உண்மைதான். ஆனால் சித்திரை முதல்நாள் எப்படி மதச்சார்புள்ள நாளாயிற்று? வருடப் பிறப்பைக் கொண்டாட நம் வீடுகளில் செய்யப்படும் மாம்பழ-வேப்பம்பூ பச்சடியில் இருக்கும் வேப்பம்பூ, மாரியாத்தா என்கிற இந்துக் கடவுள் என்று இவர்களுக்கு பயம் வந்துவிட்டதா?
9. பொங்கல் அன்று எல்லா மதத்தாரும், சாதியினரும் சமுதாயப் பொங்கலிட்டு (சூரியனை வழிபட்டோ, வழிபடாமலோ?) இனி புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமாம். இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இவ்வாறு பொங்கலிட்டு புத்தாண்டைக் கொண்டாடப் போகிறார்களா? சித்திரை முதல் நாளேன்றால் தாரளமாகக் கொண்டாடுவார்களே?
10. சூரியனை வழிபடுவது, கோலமிடுவதெல்லாம் ஒருவகையில் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரானவை. அதனால்தான் தேசப்பற்றிலும், இந்தியாவின் பாரம்பரியத்திலும் எவருக்கும் குறையாத இஸ்லாமியரில் சிலர் வந்தே மாதரம் பாடுவதிலும், (மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் செய்யப்படும்) சூரிய நமஸ்காரத்திலும் பங்குபெறுவதா, கூடாதா என்று குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். இப்போது பொங்கலன்று புத்தாண்டு கொண்டாடச் சொன்னால் அவர்கள் என்ன செய்து கொண்டாடுவது? "சூரியனை வணங்காவிட்டால் நீ தமிழனே அல்ல" என்று நம் இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லப் போகிறோமா? அவர்களுக்கு ஏன் இந்த தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டும்?
11. நான் இளங்கலைப் படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்தபோது என்னை ragging செய்வதற்காக தமிழ்த்தாய் வாழ்த்து பாடச்சொன்னார்கள்! தமிழரில் 99.99 சதவிதத்தினருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்தெரியாது என்று அவர்களுக்கு நம்பிக்கை! தமிழ் மாதப் பெயர்களை வரிசையாகச் சொல்லக் கேட்டால் பையன்கள் அழுதுவிடுவார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ? இன்று தைப் பொங்கல் என்றும் சித்திரை வருடப் பிறப்பு என்றும் இருப்பதால்தான், இரண்டு தமிழ்மாதங்களின் பெயர்களாவது குழந்தைகளுக்குத் தெரிகிறது. திருவள்ளுவர் பிறந்தநாள் என்னும் மூடநம்பிக்கையைக் கொண்டுவந்தால் பொங்கலே திருவள்ளுவருக்காக படைக்கப்படுகிறது என்று பிற்காலத்தில் ஆக்கிவிடுவார்கள் நம் பகுத்தறிவுவாதிகள்!
12. தேசம், மதம் என்று எந்தச் சாயமுமின்றி, தமிழரின் புத்தாண்டாய், அரசு விடுமுறையாய் இருந்த சித்திரை முதல் நாளில், சூப்பர் ஸ்டாரின் படம்பார்த்து, மாம்பழப் பச்சடி சாப்பிட்டுக் கொண்டாடிய தமிழன் நேற்றோடு செத்தான். வாழ்க தமிழ்!

இது பற்றிய எனது முந்தைய இடுகை -> தைப்புத்தாண்டு என்னும் மடத்தனம்!

Wednesday, January 23, 2008

தைப்புத்தாண்டு என்னும் மடத்தனம்!

இனி தைத்திங்கள் முதல்நாள்தான் ஆண்டின் முதல்நாளாம்! இதனை தமிழறிஞர்கள் கண்டுபிடித்து சொல்லிட்டாங்களாம். கருணாநிதியின் தான்தோன்றித்தனத்துக்கு மறுபெயர்தான் தமிழறிஞரா? சரி என்ன காரணத்துக்குக்காக ஆண்டின் முதல்தேதியே மாற்றப்பட்டது என்று தமிழனுக்காவது சொல்லவேண்டாம்? தமிழே தெரியாத தமிழனுக்கு பூகோளமும் வானிலை அறிவியலும் எங்கு தெரியப்போகிறது என்கிற இளக்காரமா?

பொங்கல் தமிழர் திருநாளாம்?! ஏன் சித்திரை முதல்நாளும் தமிழர் திருநாளாக இருக்கக்கூடாதா? எந்தவித ஆதாரமுமில்லாமல் திருவள்ளுவர் கி.மு.31 இல் பிறந்தார் என்று ஒரு ஆண்டுவரிசை வைத்திருக்கும் தமிழரின் மடத்தனத்தைப் போன்று இப்போது தைப்புத்தாண்டு! [இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டை (1947) முதல் ஆண்டாக ஏற்றுக்கொண்டிருக்கலாம்!] அறுபது ஆண்டுகளுக்கு தமிழ்ப்பெயர் கண்டுபிடிக்க வக்கில்லாமல் அந்தமுறையை வழக்கொழியச்செய்த மறைமலையடிகள் போன்றோரின் முட்டாள் சீடர்கள் இப்போது சித்திரையோடு விளையாடுகிறார்கள்!

சரி, தைப்புத்தாண்டு என்பது மடத்தனம் என்று நான் கருதுவதற்கான காரணங்கள் கீழே. முதலில் பொங்கல் மற்றும் சித்திரையின் முதல்நாள் ஆகியவற்றை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். (எதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்!)

1. தமிழகம் பூமத்திய ரேகையின் (Equator) வடக்கேயிருக்கிறது! மகரரேகை (Tropic of Capricorn) பூமத்திய ரேகையின் தெற்கே இந்தியப்பெருங்கடலில் இருக்கிறது. கடகரேகை (Tropic of Cancer) இந்தியாவை இட்டத்தட்ட இரண்டாகப் பிரிக்கிறது.
2. பூமியின் 23.44 அலகு சாய்மானத்தாலும் அதன் நீள்வட்டப்பாதையாலும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு வேறுபடுகிறது. [இதனால்தான் Spring, Summer, Autumn, Winter போன்ற பருவங்கள் உருவாகின்றன.] இந்த வேறுபாடு பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தப்பகுதி உருண்டையில் எங்கிருக்கிறதோ அதையொற்றி அமைகிறது. [அதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் வெட்பநிலையும், பருவநிலையும் மாறுபடுகின்றன. இந்தியாவின் குளிரும், கனடாவின் குளிரும் ஒன்றல்ல! இப்பொது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடும்போது அங்கு வெட்பகாலம். நமக்கு குளிர்காலம்.]
3. சூரியன் பூமத்திய ரேகையின்மேல் வரும்போது பகலும் இரவும் ஓரளவு சரிசமமாக இருக்கும். இருப்பதிலேயே மிகவும் சரிசமமாக இருக்கும் நாளின் பெயர் Equinox. மார்ச் மாதம் ஒருமுறையும் (Spring Equinox) செப்டம்பர் மாதம் ஒருமுறையும் (Autumn Equinox) இத்தகைய தினங்கள் வருகின்றன.
4. மார்ச் மாதத்தில் வரும் Equinoxஐ புத்தாண்டாகக் கொண்டாடுவது இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் வழக்கமாக இருந்தது. இந்தியாவில் இப்போதும் இருக்கிறது. ஆங்கில ஆண்டு March மாதத்தில் தொடங்கியதால்தான் September (7 - septa), October (8 - octal), November (9 - novem), December (10 - deci) போன்ற பெயர்கள் வந்தன. இந்தியாவில் பிறமாநிலங்களில் பயன்படுத்தப்படும் lunisolar நாட்காட்டிகளிலும் மார்ச் மாதத்தில் வரும் Eqninox-ஐ ஒட்டியே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. (எ.கா: தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி.)
5. செப்டம்பர் மாதம் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் சூரியன் டிசம்பர் மாதம் மகரரேகைக்கு அருகில் (Indian Ocean) இருக்கிறது. அங்கிருந்து மீண்டும் வடக்குநோக்கி திரும்பும்நாள் தான் Winter Solstice. இனி அடுத்த ஆறுமாதங்களுக்கு வடக்குநோக்கியே சூரியன் நகரும். இதைத்தான் உத்தராயன் (Uttaraayan, uttar - north), மகர (Capricorn) சங்கராந்தி, பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். சூரியன் நம்மை நோக்கிவருவதால் குளிர்காலம் போய் வெட்பம் மீண்டுவந்து உயிர்களும், பயிர்களும் செழிப்பது கொண்டாடப்பட வேண்டியதுதானே?
6. அதேபோல ஜூன் மாதம் வரும் Summer Solstice அன்று சூரியன் கடக (Cancer) ரேகை மீது இருக்கிறது. இந்தியாவில் சூடு கொளுத்துவது அதனால்தான்.
7. இந்த Eqninox, Solstice போன்றவை எப்போதும் ஒரே நாளில் நடக்காது. April 14 மற்றும் Jan 14 ஆகிய தேதிகளில் நாம் கொண்டாடினாலும் அவை தற்காலத்தில் March 21, December 21 வாக்கிலேயே நடந்துவிடுகின்றன. நாள்காட்டிகள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாற்றப்படுவதுண்டு. உரோம நாட்டினார் Julian நாள்காட்டியிலிருந்து Gregorian நாள்காட்டிக்கு மாறியதற்கு கிறிஸ்தவர்களின் பண்டிகை தினங்கள் நகர்ந்துகொண்டே சென்றதனால் வந்த பிரச்சனைகளும் ஒரு காரணம்.
8. இந்தியாவிலும் தமிழ் நாள்காட்டி தவிர்த்த பிற நாள்காட்டிகள் ஒரு மாதம் முன்பாக இருப்பது அதனால்தான். நமது சித்திரை (April-May)யில் வந்தால் அவர்களது சித்தரா மாதம் (March-April)இல் வருகிறது. எல்லா மாதங்களும் அப்படித்தான். தைப் பொங்கலை அவர்கள் மாசி மாததில்தான் கொண்டாடுகிறார்கள்.

சரி இப்போ கேள்விகள்.

1. Equinox correction என்று எதுவுமில்லாதபோது வெறுமனே தைமாத முதல்நாளை புத்தாண்டு என்று கொண்டாடவேண்டிய அவசியமென்ன?
2. பருவங்கள், இராசிகள், 60 கணக்கு (விநாழிகை, நாழிகை ... வருடம்), Equinox, Solstice என்று இயற்கையின் அளவிலா அற்புதங்களை நினைவுபடுத்த இரண்டுநாட்கள் கொண்டாடினால் என்ன? பொங்கல் தமிழர் திருநாள். அதனால் அது புத்தாண்டு என்று தமிழனை மேலும் மடையனாக்கும் இந்த வீண்வேலை எதற்கு?
3. தனது உழவு வசதிக்காக பொங்கலை Equinoxஓடு இழுத்துச்செல்லாமல் Januaryயிலேயே நிற்கவைத்த தமிழனின் Street Smartness எங்கே போயிற்று?
4. தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி என்று மனிதர்களின் பிறந்த, இறந்த நாட்களையும், பிற மதம்சார்ந்த தினங்களையுமே ஏன் கொண்டாடவேண்டும்? சுதந்திர தினம், குடியரசு தினம், படைவீரர் நாள் உள்ளிட்ட தேசிய நாட்களையும், பொங்கல், சித்திரை முதல்நாள் என்று மதச்சார்பற்ற, ஒருசிலர் என்றில்லாமல் எல்லோரும் கொண்டாடும் தினங்களையும் ஊக்குவிக்கலாமே?

இது பற்றிய என்னுடைய இன்னொரு இடுகை -> சித்திரையைக் காப்பாற்றுங்கள்!

Tuesday, January 22, 2008

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் ...

இன்னும் இந்தியாவில் இல்லையாவன!


முதலில் நம் பிள்ளைகளில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை. செல்பவர்களாவது படிக்கிறார்களா என்பது பெரும் பிரச்சனையாயிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஒரு New York Times கட்டுரையைத் தொடர்ந்து இன்று சுருமுரியில் வெளியான பதிவு இங்கே.

பிரதம் என்னும் தன்னார்வு நிறுவனம் நடத்திய கல்விக் கருத்துக்கபிப்பின் முடிவுகள் இங்கே. மிகவும் வருத்தப்பட வைக்கும் விவரங்கள்தான். பிரதம், இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதரவோடு நடந்துவரும் எழுத்தறிவிக்கும் இயக்கும். இவர்களின் பணி செவ்வனே நடக்கவும், இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையானவர்களுக்கு இவர்களின் உதவி கிடைக்கவும் நீங்கள் உதவலாம். செய்வீர்கள்தானே?!

AidIndia நடத்தும் இதே மாதிரியான முயற்சிகள் பற்றி நான் முன்பு எழுதிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

Monday, January 21, 2008

மரணம் ஈன்ற ஜனனம்

Scaphandre et le papillon, Le (The Diving Bell and the Butterfly) - சமீபத்தில் வெளியாகி 'தங்க உலகம்' உள்ளிட்ட விருதுகளை வென்ற பிரஞ்சுத் திரைப்படம். Jean-Dominique Bauby அவர்களின் உண்மைக்கதை. உள்ளத்தால் ஆகாதது எதுவுமில்லை என்று பறைசாற்றும் வாழ்க்கை வரலாறு. பார்க்கலாம்.

Ostre sledovane vlaky (Closely Watched Trains) - ஆகா என்ன பொண்ணுங்க?! என்ன சங்கதி!! நாசிக்களை எதிர்த்து செக்கஸ்லோவாக்கியர்் எவ்வாறு மெதுவாக கிளர்த்தெழுந்தார்கள் என்றும் சொல்லும் படம். New Wave என்னும் செக்கஸ்லோவாக்கியப் படங்களில் மிகவும் பாராட்டப்பட்ட படம். நிச்சயம் பார்க்கலாம்.

Goodbye Lenin! - கிழக்கு ஜெர்மனியின் மறைவை வித்தியாசமாகச் சொல்லும் படம். டேனியல் புருயலுக்காகப் பார்க்கலாம்.

Tuesday, January 15, 2008

நட்சத்திரங்கள் - நிழலும் நிஜமும்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்று பொறுமையில்லை. கடந்த வாரம் நான் பார்த்த படங்களின் சிறுகுறிப்புகள் கீழே!

தாரே சமீன் பர் - நல்ல படம், பார்க்கலாம். டிஸ்லெக்சியா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக அமீர் கானைப் பாராட்டலாம்.

பால்சாக்கும் இளஞ்சீன தையல்காரியும்! - கலாசாரப் புரட்சி என்னும் சீனாவின் இருண்ட காலத்தில் பூத்த ஒரு காதல் கதை. இயக்குனரின் சொந்தக் கதை, புதினமாகவும், பின்பு திரைப்படமாகமும் வந்தது. சுமார்தான்.

கோப்பென்ஹேகன் - இரவா புகழ்பெற்ற நீல்ஸ் போர் - வெர்னர் ஹைசன்பர்க் ஆகியோரின் சந்திப்பு குறித்த விவரணப்படம். கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் படத்தில் இருக்கின்றன.

ஆனா ஃப்ராங்க் - அவரைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? கட்டாயம் பார்க்கவேண்டிய விவரணப்படம்.

Friday, January 11, 2008

கூவுகிறார்கள், வாங்க!

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தற்போது நடந்து வரும் இரண்டாம் சென்னை சங்கமத்தின் தெருவிழாவில் பங்கேற்க அழைக்கிறார்கள்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின், கிண்டி பொறியியல் கல்லூரி நடத்தும் குருக்சேத்ரா 2008 நுட்பத் திருவிழாவுக்கு அழைக்கிறார்கள்.

உத்தமத்தின் இணைத்தமிழ் அரட்டை அரங்கத்திற்கும் வருமாறு கோருகிறார்கள்.

செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்
நடத்தும் 'செம்மொழி தமிழ் சர்வதேச கருத்தரங்கம்் 2008'க்கும் நம்மை அழைக்கிறார்கள்.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்தும் சாரங் 2008 கலைவிழாவுக்கும் வருமாறு கூவுகிறார்கள்.

வாங்க, வாங்க!

Tuesday, January 08, 2008

ஓட்டை வாய் திறப்பினும் அவுட் அவுட்டுதான்!

படம் நன்றி: பணிக்கர், சவுரவ் வழியாக அனாமதேயப் புகைப்படக்காரர்.