Thursday, January 22, 2009

பெங்களூர் திரைப்பட விழா - விமர்சனங்கள்

கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா இன்றோடு நிறைவடைந்தது. இதில் நான் பார்த்த 9 படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே. எனக்கு பிடித்த வரிசையில்.

1. Obsluhoval jsem anglickeho krale (I served the King of England). செக் நாடு.

Closely Watched Trains மூலம் செக் திரைப்பட வரலாற்றில் புதிய அலையை (Czech New Wave) ஏற்படுத்திய ஜிரி மென்செல் அவர்களின் படம். அருமை. படத்தில் வரும் அனைத்து பெண்களும் ஆடையைக் கலைகின்றனர்! இது இரண்டாம் உலகப்போர், செக் நாட்டின் மீது நாசிக்களின் படையெடுப்பு ஆகியன பற்றிய படம் என்று படம் முடிந்தபின்கூட நம்புவது கடினம்தான். பெண்கள், பணம், பல்சுவை உணவு. படம் முழுக்க இதுதான். ஆனால் போரின் கொடுமையை விவரிக்கவும், நாசிக்களை சாடவும் படம் சிறிதும் தவறவில்லை.

2. Avaze gonjeshk-ha (The Song of Sparrows). இரான்.

மஜீத் மஜீதி அவர்களின் படம். ஒளிப்பதிவில் கலக்கியிறுக்கிறார்கள். இரானிய படங்களில் எதிர்பார்க்கக்கூடிய குழந்தைகள், நேர்மை, மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய படம். ஒரே ஒரு குறை நான் Children of Heavenஐ எக்கச்சக்கமான தடவை பார்த்திருப்பதுதான். அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. வான் கோழிகளைத் தவிர்த்து!

3. Iza Stakla (Behind the Glass). குரேஷியா.

ஒரு படம் எப்படி இருக்கவேண்டும் என்று நான் வகுத்திருக்கும் அனைத்து விதிகளையும் பின்பற்றும் படம். 100 நிமிடங்களுக்குள் இருத்தல், கதை எப்படி இருந்தாலும் குழம்பம் இல்லாத நல்ல திரைக்கதை, நடிகர்களையும், இயக்குனரையும் குறையே சொல்லமுடியாத நேர்த்தி, படம் பார்ப்பவர்கள் புத்திசாலிகள் என்று பாவிக்கும் யதார்த்தமான வசனம், அழகான பெண்கள் என்று அனைத்திலும் சோபித்திருக்கிறார்கள்.

4. Katyn. போலந்து.

கெஸ்லாவ்ஸ்கி தெய்வம் என்றால், ஆந்திரே வாஜ்டா இன்றும் வாழும் போலந்து நாட்டு திரைப்பட இமயம். இரண்டாம் உலகப்போரில் போலந்தில் நிகழ்ந்த கதீன் படுகொலை பற்றிய படம். சுவாரசியமான வரலாற்றுச் சோகம் என்பது தவிர படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. அந்த வரலாறு படித்துவிட்டு படம் பார்க்கப் போகாதீர்கள்!

5. L’Orchestra di Piazza Vittorio. (The Orchestra of Piazza Vittorio). இத்தாலி.

சுவாரசியமான விவரணப்படம். ரோம் நகரில் குடியேறிய பல்வேறு நாட்டு இசைக் கலைஞர்களை சேர்த்துக்கொண்டு உருவாக்கப்பட்ட ஆர்கஸ்ட்ராவின் தோற்றக் கதை. சிரித்துக்கொண்டே பார்க்கலாம்.

6. Varjoja Paratiisissa (Shadow in Paradise). ஃபின்லாந்து.

மேலே நான் சொன்ன திரைப்பட விதிகளைக் கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். படம் வெறும் 70 நிமிடம்தான். இயக்குனர் ஆக்கி கெளரிஸ்மாகி மிகவும் பேசப்படுபவர். இவரின் மற்ற படங்களையும் பார்க்க ஆசை.

7. Hadduta Misrija (Egyptian story) எகிப்து.

ஒரு இயக்குனரின் சொந்தக்கதையை எகிப்தின் வரலாறு மற்றும் மனித உறவுகள் பற்றிய சிந்தனைகளோடு சொல்ல நினைத்திருக்கிறார்கள். போர் அடித்தது.

8. Ben X பெல்ஜியம்.

குறைந்த செலவில், கைக்கேமராவுடன் கல்லூரி படம் போல எடுக்கும் பழக்கத்தை மேற்கு ஐரோப்பாவினர் நிறுத்தவேண்டும். Edukators போன்று சில நல்ல படங்கள் இவ்வதத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும்,
திரைப்படங்களை ஒரு கலையாக இவர்கள் கருதாதது வருத்தமளிக்கிறது. Ben X லில் நல்ல கருத்திருந்தாலும், திரைப்படத்தை மதிப்பிடுகையில் கதை, கருத்தெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது விதிகளில் ஒன்று.

9. Hae anseon (Coast Guard). கொரியா.

லூசுத்தனமாக படமெடுப்பதையே தனது சிறப்பம்சமாக ஆக்கியிருக்கும் கி-டுக்-கிம் இன் மற்றொரு படம்.

No comments: