Monday, December 10, 2007

பருத்திவீரன், முத்தழகன்?

என்னப்பு பாக்கறீங்க? எப்பவவோ வந்த படத்தைப் பத்தி இப்ப எழுதறானேன்னு தானே? அட இப்பதானுங்கள நாங்க இதப் பாத்தோம்!

சரி, சரி, அந்த கிராமத்தின் பேச்சுநடை எனக்கு வரப்போவதில்லை! பருத்திவீரன் சிறந்த படைப்பு என்பதில் சந்தேகமில்லை. சாதாரணமாக நல்ல கதை, கருத்து இருந்தும் படத்தை மோசமாக எடுப்பதுதான் இத்தகைய கதையம்சமுள்ள படங்களில் வழக்கம். சேரனின் இயலாமை, தங்கர் பச்சானின் அபத்தக் களஞ்சியங்கள், பார்த்திபனின் நாடகங்கள் என்று நாம் அறிந்ததுதானே! அமீர் இயக்கிய ராம் திரைப்படம்கூட எழெட்டு முடிவுகள் (climax) வைத்து சொதப்பிய படம்தான்.

அவற்றோடு ஒப்பிடும்போது பருத்திவீரன் மிகவும் பாராட்டப்பட வேண்டிய படம். பல நிமிடங்கள் வருகிற திருவிழா தொடக்கக் காட்சியாக வருவது அருமை. எங்கள் ஊருக்கு அருகில் நடக்கும் கிராமத் திருவிழாக்கள் நினைவுக்கு வந்தன! நல்ல நகைச்சுவை, சிறப்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர் தேர்வு, காட்சியமைப்பு என்று படம் எடுத்தவிதத்தில் கலக்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்தப் படம் சொல்லவருகிற அல்லது சொல்லாமல் விட்டுவிடுகிற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை! Fatalism (விதிவசம்) நல்ல வேளையாக இந்தப்படத்தின் கரு இல்லை என்று நினைக்கிறேன். 'முற்பகல் செய்யின் பிற்பகல் (சுற்றத்தார்க்கும்!) விளையும்' என்பது ஓரளவு பொருந்துகிறது. ஆனால் முத்தழகுக்கு நேரும் கதியை என்னால் சீரணிக்க முடியவில்லை!

நந்தா என்கிற படத்தை விகடன் விமர்சித்தபோது, "சோகத்தை சனங்கள் ரசிப்பார்கள், படுசோகத்தை?" என்று கேட்டது நினைவிருக்கிறது. அதேபோல் இந்தப் படத்தில் ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கும் முயற்சி எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் வேதனை அடைந்தேன் என்பது இயக்குனர் அமீரின் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள்!

No comments: