Thursday, February 28, 2008

கற்றதும் பெற்றதும் ஏராளம்!

எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் காலமானார். வருத்தப் படவைக்கும் செய்தி. அவர் மிகவும் விரும்பிய அரங்கனின் பாதங்களை சேர்ந்திருப்பார் என்று நம்பலாம்.

என்னைப் போன்ற அல்லக்கைகளின் தமிழை சுஜாதா எவ்வளவு தூரம் செதுக்கியிருக்கிறார் என்பது வியக்கவைக்கும் ரகசியம். பல வருடங்களாக அவரின் எழுத்துகளை விகடனில் படித்துவருகிறேன். அவரது எழுத்து அறிமுகமாகும் முன்பே 'கொலையுதிர் காலம்', 'என் இனிய இயந்திரா' என்று தொலைக்காட்சி வழியாக அவரின் விசிறியாகிவிட்டேன். அவரது குறிப்புகளை வைத்து நான்கூட ஹைக்கூ எழுதலாமா என்று நப்பாசைப் பட்டதுண்டு!

சுஜாதாவின் நாவல்கள் அனைத்தையுமே படித்த நன்பன் ஒருத்தனை எனக்குத் தெரியும். விகடனில் வந்தவை தவிர்த்து நான் ஒரேயொரு நாவலை புத்தகமாகப் படித்திருக்கிறேன். சிப்பாய்க் கலகம் பற்றிய கதை. பெயர் நினைவில்லை. எனக்கு காகித ஓட்டே போடாத மின்னனு வாக்காளன் என்னும் பெருமையை (?) வாங்கித்தந்ததிலும் அவருக்கு பங்கிருக்கிறது. அம்பலத்துக்கும் அவ்வப்போது நான் போவதுண்டு.

அவரின் திரைப்பட பங்களிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும், 'கணேஷ் வசந்த்' மற்றும் 'சீரங்கத்து தேவதைகளை' அவர் இருக்கும்போது படமாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாகயிருந்திருக்கும்.
ழ கணினி முயற்சியும் கொஞ்சம் டல்லடிக்கிறது. யாரேனும் இந்த இரண்டையும் செய்து முடிக்கலாம். சென்னையில் நிகழ்கலைகளுக்கு (performing arts) பிரத்யேக அரங்கம் வேண்டும் என்று அவர் கேட்டது சிங்கப்பூர் Esplanade இல் நின்றபோது சரியென்று பட்டது.

கற்றதும் பெற்றதும் படிப்பதற்காகவே விகடன் சந்தா வைத்திருந்தேன். ஒரு பிறந்தநாள் பற்றிய அத்தியாயத்தில் "காலாற நடந்துசென்று திருவல்லிக்கேணியில் எனது குடும்ப வீட்டை பார்த்தேன்" என்று அவர் எழுதியது என்னை நெகிழவைத்தது நினைவிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் இளைஞர்களை இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து நாட்டுக்கு உழைக்கச் சொன்னார்!

பல வழிகளிலும் அவரிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். அதை வைத்தே இன்னும் பல காலத்துக்கு நான் ஜல்லியடிக்கமுடியம்! நன்றி.

மேலும்: எழுத்தாளர் சுஜாதா, சுஜாதாலஜி.

1 comment:

kannan said...

Hi,

It is really a loss to tamil.He pioneered simple science through tamil.His short story like 'Nagaram' will lve for ever.
His dramas are gifts.His intelligence is so amazing.
God bless his family.

Kannan
http://www.kannanviswagandhi.com
http://www.truemlmrockstar.com