Thursday, October 23, 2008

தமிழ் இனவெறிவாதம் ஒழிக!

தமிழக அரசியல் கட்சிகளின் இனவெறிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இப்போது தனித்தமிழ்நாடும் வேண்டுமாம் (?!) ஆமாம். பிராமணர்களுக்கு தனிதமிழ்நாடு (சென்னை மட்டும்?) கொடுப்பது எவ்வளவு நியாயமாக இருக்குமோ அவ்வளவு நியாயமானது ஈழத்தமிழர் போராட்டம்.

தமிழகத்தில் ஈழத்தமிழர்களை, அதுவும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுக்கு இனவெறி தவிர்த்த வேறு எந்த காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கை எதையாவது இவர்களை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! எதற்கெடுத்தாலும் 1983 ஜூலைப் படுகொலைகளை வைத்தே தங்களது இனவெறிக்கு நியாயம் கற்பிப்பவர்கள் இவர்கள்.

இந்தியா சுதந்திரமடைந்த போது தமிழக அரசு மற்றும் இன்னபிற துறைகளில் எப்படி பிராமணர் அளவுக்கு அதிகமான இடங்களில் அமர்ந்திருந்தார்களோ, அதேபோல இலங்கையில் தமிழர்கள் அளவுக்கதிகமான பதவிகளை தங்களிடம் வைத்திருந்தார்கள். சுதந்திர இலங்கை இந்த ஏற்றுக்கொள்ள முடியாத சமூக நிலையை மாற்றி, சிங்களவரின் உரிமைகளை நிலைநாட்ட படிப்படியாக பல செயல்களைச் செய்தது.

அந்த செயல்களில் பல நியாயமில்லதவை. இந்தியாவில் இந்தியை தேசிய மொழியாக்க நினைத்ததுபோல அங்கு சிங்களத்தை ஆக்க முயற்சித்தார்கள். தமிழகத்தில் பிராமணரின் பங்களிப்புகள் (கிரந்தம், நாட்காட்டிமுறை, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு. செய்தித்தாள்கள் ...) சிறுமைப்படுத்தப்படுதல், அவர்களின் குடுமி அறுத்தல் போன்றவற்றிற்கு நிகரான செயல்கள் இலங்கையிலும் சிங்களவரால் செய்யப்பட்டன.

இந்தகைய செயல்கள் தமிழர், சிங்களர் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது இயல்பே. அது இனக்கலவரத்தில் முடிந்ததும் எதிர்பார்க்கக்கூடியதே. இனக்கலவரத்தில் அரசுப்படைகள் எவ்வளவு நடுநிலையோடு செயல்படும் என்பதை சொல்லவும் வேண்டுமா? குஜராத், பம்பாய் கலவரங்களில் நாம் பார்க்காத 'நடுநிலைமையா'? தமிழகத்திலேகூட காவல்துறையினர் "முஸ்லீம்களை போய் அடியுங்கள், நாங்கள் வந்தவுடன் ஓடிவிடுங்கள்" என்று சொன்னதை அடித்தவர் மூலமாகவே நான் கேட்டிருக்கிறேன்!

அதே போல 1983இல் நடந்த இனப்படுகொலைகளில் இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்கேற்றது உண்மையே. அதற்காக இலங்கைத் தமிழருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் அளவுக்கெல்லாம் சென்று இந்தியா உதவி செய்தது. எதிராளியை பலமாக்கி இன்னொரு கட்சியை பேச்சுவார்த்தைக்கு வரவைப்பது எங்கும் நடப்பதே. அவ்வாறு 1987இல் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனாய் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களே தாம் அதிக வாழும் இடங்களை ஆளும் வகையில் மாகாண அரசுகள் ஏற்படுத்த இலங்கை ஒப்புக்கொண்டது.

ஆனால் ஆயுத பலமும், தமிழ்நாட்டு இனவெறியர்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்ற புலிகள் என்னும் பாசிச, இனவாத, பயங்கரவாத அமைப்பு, 'நம் கை ஓங்கியிருக்கும் போது எதற்காக அமைதி வழியில் செல்லவேண்டும்' என்று 1987 உடன்படிக்கையை செல்லாக்காசாக்க முயற்சித்தது. ஈழத்தமிழரின் பாதுகாப்புக்கு சென்ற இந்திய இராணுவத்தை (ஜெயவர்த்தனே உதவியுடன்) போரில் சிக்கவைத்தது.

அவ்வாறு சிக்கிக்கொண்ட இந்திய இராணுவம் புலிகளை நேரடியாக எதிர்கொண்டு, அவர்களை பூண்டோடு அழிக்காததையும், இந்திய இராணுவ வீரர்கள் ஈழத்தமிழர்பால் செய்த அத்துமீரல்களையும், நான் ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகள் என்று முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 1987-88 இல் ஒழுங்காகச் செய்து முடிக்காத புலிகள் அழிப்பை, இன்று ராஜபக்சே அரசும், இந்திய அரசும் செய்து முடிப்பது மிகவும் வரவேற்கத் தகுந்ததே.

தமிழகத்தில் புலிகளை ஆதரிக்காதவர்கள் தமிழ்த்துரோகிகள் என்றால், ஆதரிப்பவர்கள் (இந்திய) தேசத்துரோகிகள் என்று ஜெயலலிதா சொல்வது சரியே. மேலும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் (இலங்கை) தேசத்துரோகிகள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

ஈழத்தமிழரிடம் தற்போது நியாயமான கோரிக்கைகள் ஒன்றுமேயில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்கள் போல் இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல. (இந்திய வம்சாவளித் தமிழரில் பலர் சிறிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்தியா திரும்பினர். முத்தையா முரளிதரனின் குடும்பமும் திரும்பியிருந்தால் நமக்கு நல்ல சுழற்பந்துவீச்சாக்ளர் இடைத்திருப்பார்!).

தாங்கள் ஆரம்பித்த இனவெறி அரசியல் மற்றும் ஆயுதப்போராட்டத்தின் பலன்களை ஈழத்தமிழர் இன்று அனுபவிக்கிறார்கள். இவர்களை அடக்க இலங்கை இராணுவம் நியாயமாகவோ, அத்துமீறியோ நடவடிக்கை எடுத்தால் 'இனப்படுகொலை' என்று அந்தர்பல்டி அடிக்கிறார்கள். உலகின் பிறநாடுகளில் அண்டிப்பிழைத்தும்கூட தங்கள் நாட்டில் தீவிரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இவர்களுக்கு தமிழக மக்கள் வேறு உதவவேண்டுமாம்! நல்ல கதை!

நிற்க. இலங்கை அரசும், இராணுவமும் எப்போதும் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் 25 ஆண்டு தொடர் சண்டையில் சிங்களர் மட்டும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. 13வது சட்டத்திருத்தில் சில ஷரத்துகளை மாற்றவோ, சேர்க்கவோ வேண்டுமானால், அதை தமிழ் அரசியல் கட்சிகள்தான் முயன்று செய்யவேண்டும். புலிகள் என்னும் தீவிரவாத அமைப்பும், அவர்களின் தமிழ்நாட்டு இனவெறி நண்பர்களும் அல்ல.

மேலும் ஈழத்தமிழர் இலங்கையின் நல்ல குடிமக்களாய், அமைதியாய் வாழவிரும்பினாலும் புலிகள் அதை அனுமதிக்கப்போவதில்லை. புலிகளை அழித்தொழிப்பதுதான் ஈழத்தமிழருக்கு சிங்களவரும், இந்தியரும் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி. அந்த உதவியை தடுக்க நினைக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டுவங்கி அரசியல் மிகவும் கண்டிக்கத்தது.

3 comments:

Anonymous said...

என்னத்தை சொல்ல. நல்லா இருங்க.

Anonymous said...

எப்படி இப்படி அடி முட்டாளாக சிந்திக்க முடிகிறது! இலங்கை இனவெறியர்களின் ஊதுகுழலாக நன்றாக ஊதுகிறீர்!! கண்டிப்பாக நீர் தமிழராக இருக்கவே முடியாது!!!

67ygjg said...

தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்!!!