Friday, March 30, 2007

அய்யா சாமிகளே!, செய்தி படிக்க விடுங்கப்பா...

நான் தினமும் இணையத்தில் குறைந்தது பத்து செய்தித் தளங்களுக்காவது செல்கிறேன். ஆனால் உன்னை படிக்க விடுகிறேனா பார் என்று ஒரு கூட்டம் இங்கே அலைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஒன்று அவர்களுடைய தளத்தில் செய்திகளை எவருக்கும் தெரியாத இடத்தில் ஒளித்து வைத்திருப்பார்கள். (எ.கா: என்.டி.டீவி, டி.என்.எ) அல்லது குட்டிக்கரணம் அடித்தாலும் லினக்சில் படிக்கமுடியாதபடியான எழுத்துரு மற்றும் பக்க அமைப்பு வைத்திருப்பார்கள். (எ.கா: தினமலர், தினமணி மற்றும் எல்லா தமிழ் நாளிதழ்கள்!)

இந்நிலையில் தட்சுதமிழ் தளத்தை ஒருங்குறிக்கு மாற்றியவர்களுக்கு மட்டும் இந்த கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்சனை வராமலிருக்க வேண்டிக்கொள்கிறேன்! விகடன் ஒருங்குறியில் இல்லாவிட்டாலும் அவர்களின் எழுத்துரு லினக்சில் தெரிவதாலும், நன்றாக இருப்பதாலும் அவர்களுக்கு டாங்கர் லாரி தண்ணிர் மட்டும் கிடைக்கட்டும்.

படிக்க முடியாதவனாகிவிட்ட (?!) எனக்கு இணையத்தில் இலவசமாக ஒளிபரப்பப்படும் சில செய்தித் தொலைக்காட்சிகள் ஓரளவுக்கு ஆறுதல். (என்.டி.டீவி, ஐ.பி.என், தூர்தர்சன்) ஐயா கலாநிதி மாறனே, சன் செய்தியையும் இதே மாதிரி இலவசமா ஒளிபரப்பினா தம்பியை முதலமைச்சாராவே ஆக்கிடலாமில்ல? முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரேயொரு கேள்வி. கே.டீவின்னு அருமையான தமிழ் பெயர் வைத்திருப்பதில் எழுத்துப்பிழை இருப்பதுமாதிரி தெரிகிறதே. குரங்கு டீவின்னா கு.டீவின்னு தானே வரனும்?

Saturday, March 24, 2007

ஆசிய நாகரீகங்கள் அருங்காட்சியகம்

சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்குள்ள ஆசிய நாகரீகங்கள் அருங்காட்சியகத்தைப் போய் பார்த்தேன். அருங்காட்சியகம் என்றாலே போரடித்து தும்ம வைக்குமிடமென்றில்லாமல் நேர்த்தியாகவும் நவினமாகவும் இருந்தது. சிங்கப்பூர் செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்.

அதற்கு முந்தைய வாரம் தஞ்சை பெரிய கோயிலுக்கும், சரசுவதி மகால் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றிருந்தேன். மிக்க மனநிறைவளித்த பயணமென்றாலும் இரண்டு விசயங்கள் நெருடச்செய்தன.

1. வேலூர் கோட்டையிலுள்ள அகழியைக்கூட ஓரளவுக்குப் பராமரிப்பவர்கள் பெரிய கோயில் அகழியை சீரழித்தது ஏனென்று தெரியவில்லை. அங்கே உள்ளேயிருப்பது முன்னால் இந்தியப் பிரதமரைக் கொன்ற அதிமுக்கியமானவர்கள், இங்கிருப்பதோ உதவாக்கரை சிவன் மட்டும்தான் என்பதாலா?



2. சரசுவதி மகால் நூலகத்திலிருக்கும் ஓலைச்சுவடிகள் மிகவும் அரிய செல்வங்களென்றாலும், இந்த சிறிய நூலகத்தைப் பற்றியா இவ்வளவு தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம்? சப்பென்றாகிவிட்டது!