Monday, September 12, 2005
தமிழகத்தில் கல்விச் சீர்திருத்தம்.
சமிபத்தில் நடந்த மத்திய கல்வி வழிகாட்டு மன்ற கூட்டத்தில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை கைவிட பரிந்துரை செய்திருக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய முடிவு. அனைத்து மாநிலங்களும் (குறிப்பாக தமிழக அரசு) இதை ஏற்குமா என்பதையும், எப்போது அமல்படுத்தும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த சமயத்தில் இன்னும் சில சீர்திருத்தங்கள் எனக்குத் தோன்றுகின்றன. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியக் கல்வி என பல்வேறு முறைகள் இருப்பது குழப்பத்தை விழைவிக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி கல்வி முறையிலுள்ள குறைகளை சாக்காக வைத்துக்கொண்டு, பல மெட்ரிகுலேஷன் மற்றும் பாலகர் பள்ளிகள் தமிழகமெங்கும் முளைத்துவிட்டிருக்கின்றன். இவைகள் பெரும்பாலும் மிகமட்டரகமான கல்வியளிப்பதோடு, ஆங்கிலத்தையும் திணித்து வருகின்றன. இதற்கு மாற்றாக இரண்டையும் இணைத்துவிட்டால் தமிழக கல்வி முறையில் ஒழுங்கும், முன்னேற்றமும் எற்படும். தமிழகத்திலுள்ள எல்லா மாணவர்களும் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்கள் நல்ல கல்வி பெறுவார்கள். இந்த புதிய பாட முறை போதிய தரமுடன் இருக்காது என்று கருதும் பள்ளிகள் சி.பி.எஸ்.இ கல்வி முறையைப் பின்பற்றலாம். மத்திய அல்லது மாநிலக் கல்வி முறை என்கிற தெளிவு பிறக்கும். எஸ்.எஸ்.எல்.சி முறையைக் குறை கூறி "கான்வென்ட்" கல்விக்காக ஓடும் பெற்றோரை சிந்திக்கவைக்கலாம். கல்வியென்றலே, ஆங்கிலத்தில்தான் என்று சென்றுகொண்டிருக்கும் தமிழகத்தை அழிவுப்பாதையிலிருந்து மீட்கலாம். இதுதவிர தமிழகத்தில் தமிழை எழுதப்படிக்கத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் அவலத்தை என்னவென்று சொல்வது? தமிழகத்தில் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் தமிழைப் பாடமாகப் பயிலவேண்டும். தமிழைத் தாய்மொழியாய்க் கொள்ளாதவர்களும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களும் தமிழை விருப்பப்பாடமாக படிக்கலாம். பன்னிரெண்டு வருட்ப்பிரிவுகளாக இந்த தமிழ் விருப்பப்பாடம் அமையவேண்டும். முதல் வருடத்திலிருந்து படிக்கும் மாணவர்கள் பன்னிரண்டும் முடித்திருப்பர். தாமதமாக ஆரம்பிப்பவர்கள் எவ்வளவு ஆண்டுகள் படித்தார்க்ளோ அத்தனை வருடப்பிரிவுகள் முடித்திருப்பார்கள். இதேபோல தமிழை முதற்பாடமாக படிக்கும் மாணவர்கள் வேறு ஏதேனுமொறு மொழியை விருப்பாடமாகப் படிக்கவேண்டும். திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தேயாகவேண்டுமென்று அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் தமிழ்வழிக் கல்வியைக் கண்டுகொள்ளாதது ஏனோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment