Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Thursday, January 22, 2009

பெங்களூர் திரைப்பட விழா - விமர்சனங்கள்

கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா இன்றோடு நிறைவடைந்தது. இதில் நான் பார்த்த 9 படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே. எனக்கு பிடித்த வரிசையில்.

1. Obsluhoval jsem anglickeho krale (I served the King of England). செக் நாடு.

Closely Watched Trains மூலம் செக் திரைப்பட வரலாற்றில் புதிய அலையை (Czech New Wave) ஏற்படுத்திய ஜிரி மென்செல் அவர்களின் படம். அருமை. படத்தில் வரும் அனைத்து பெண்களும் ஆடையைக் கலைகின்றனர்! இது இரண்டாம் உலகப்போர், செக் நாட்டின் மீது நாசிக்களின் படையெடுப்பு ஆகியன பற்றிய படம் என்று படம் முடிந்தபின்கூட நம்புவது கடினம்தான். பெண்கள், பணம், பல்சுவை உணவு. படம் முழுக்க இதுதான். ஆனால் போரின் கொடுமையை விவரிக்கவும், நாசிக்களை சாடவும் படம் சிறிதும் தவறவில்லை.

2. Avaze gonjeshk-ha (The Song of Sparrows). இரான்.

மஜீத் மஜீதி அவர்களின் படம். ஒளிப்பதிவில் கலக்கியிறுக்கிறார்கள். இரானிய படங்களில் எதிர்பார்க்கக்கூடிய குழந்தைகள், நேர்மை, மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய படம். ஒரே ஒரு குறை நான் Children of Heavenஐ எக்கச்சக்கமான தடவை பார்த்திருப்பதுதான். அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. வான் கோழிகளைத் தவிர்த்து!

3. Iza Stakla (Behind the Glass). குரேஷியா.

ஒரு படம் எப்படி இருக்கவேண்டும் என்று நான் வகுத்திருக்கும் அனைத்து விதிகளையும் பின்பற்றும் படம். 100 நிமிடங்களுக்குள் இருத்தல், கதை எப்படி இருந்தாலும் குழம்பம் இல்லாத நல்ல திரைக்கதை, நடிகர்களையும், இயக்குனரையும் குறையே சொல்லமுடியாத நேர்த்தி, படம் பார்ப்பவர்கள் புத்திசாலிகள் என்று பாவிக்கும் யதார்த்தமான வசனம், அழகான பெண்கள் என்று அனைத்திலும் சோபித்திருக்கிறார்கள்.

4. Katyn. போலந்து.

கெஸ்லாவ்ஸ்கி தெய்வம் என்றால், ஆந்திரே வாஜ்டா இன்றும் வாழும் போலந்து நாட்டு திரைப்பட இமயம். இரண்டாம் உலகப்போரில் போலந்தில் நிகழ்ந்த கதீன் படுகொலை பற்றிய படம். சுவாரசியமான வரலாற்றுச் சோகம் என்பது தவிர படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. அந்த வரலாறு படித்துவிட்டு படம் பார்க்கப் போகாதீர்கள்!

5. L’Orchestra di Piazza Vittorio. (The Orchestra of Piazza Vittorio). இத்தாலி.

சுவாரசியமான விவரணப்படம். ரோம் நகரில் குடியேறிய பல்வேறு நாட்டு இசைக் கலைஞர்களை சேர்த்துக்கொண்டு உருவாக்கப்பட்ட ஆர்கஸ்ட்ராவின் தோற்றக் கதை. சிரித்துக்கொண்டே பார்க்கலாம்.

6. Varjoja Paratiisissa (Shadow in Paradise). ஃபின்லாந்து.

மேலே நான் சொன்ன திரைப்பட விதிகளைக் கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். படம் வெறும் 70 நிமிடம்தான். இயக்குனர் ஆக்கி கெளரிஸ்மாகி மிகவும் பேசப்படுபவர். இவரின் மற்ற படங்களையும் பார்க்க ஆசை.

7. Hadduta Misrija (Egyptian story) எகிப்து.

ஒரு இயக்குனரின் சொந்தக்கதையை எகிப்தின் வரலாறு மற்றும் மனித உறவுகள் பற்றிய சிந்தனைகளோடு சொல்ல நினைத்திருக்கிறார்கள். போர் அடித்தது.

8. Ben X பெல்ஜியம்.

குறைந்த செலவில், கைக்கேமராவுடன் கல்லூரி படம் போல எடுக்கும் பழக்கத்தை மேற்கு ஐரோப்பாவினர் நிறுத்தவேண்டும். Edukators போன்று சில நல்ல படங்கள் இவ்வதத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும்,
திரைப்படங்களை ஒரு கலையாக இவர்கள் கருதாதது வருத்தமளிக்கிறது. Ben X லில் நல்ல கருத்திருந்தாலும், திரைப்படத்தை மதிப்பிடுகையில் கதை, கருத்தெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது விதிகளில் ஒன்று.

9. Hae anseon (Coast Guard). கொரியா.

லூசுத்தனமாக படமெடுப்பதையே தனது சிறப்பம்சமாக ஆக்கியிருக்கும் கி-டுக்-கிம் இன் மற்றொரு படம்.

Friday, January 16, 2009

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா

சுசித்ரா அகாதமியும் கர்நாடக அரசும் சேர்ந்து நடத்தும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா வியாழனன்று (ஜனவரி 15) துவங்கியது. இதில் திரையிடப்படும் படங்களின் அட்டவனை இங்கே.

இன்றிரவு (வெள்ளி) ஆந்த்ரே வாஜ்டாவின் கடீன் என்ற போலந்து நாட்டுப் படத்தைப் பார்த்தேன். பார்க்கலாம். அடுத்த வாரம் விழா முடிந்தவுடன் நான் பார்த்த படங்களின் விமர்சனம் எழுதுகிறேன்.

குறிப்பு: இவ்விழாவில் படங்களைப் பார்ப்பதற்கு ஒட்டுமொத்த அனுமதிச்சீட்டு வேண்டும். திரையரங்க வாசலில் பெற்றுக்கொள்ளலாம். விலை ரூ 500. திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ரூ 300. மாணவர்களுக்கும் சலுகை விலையில் கிடைக்கும்.

Sunday, December 21, 2008

கேரள சர்வதேச திரைப்பட விழா

டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கிய கேரள சர்வதேச திரைப்பட விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. நான்கு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொன்டு 10 படங்களைப் பார்த்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நான்கு படங்களின் விமர்சனங்கள் இங்கே! திருவனந்தபுரம் புகைப்படங்கள் இங்கே.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் தற்போது நடந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நிறைவுறும். கலந்து கொண்டவர்கள் விவரங்கள் தெரிவிக்கவும்!

Wednesday, December 03, 2008

மதுரை விவரணத் திரைப்பட விழா

10 ஆவது உலக விவரண மற்றும் குறும்படத் திரைப்பட விழா மதுரையில் இன்று (டிசம்பர் 3) தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விவரங்கள் இங்கே.

Wednesday, September 03, 2008

கற்றது தமிழ், செத்தது ரசனை!

'ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்' என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் 'கற்றது தமிழ்' என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.

ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது பலருக்கும் புரிவதில்லை. கதை, கருத்து அகியவையெல்லாம் ஒரு படத்தை மதிப்பிடுவதில் எந்த பங்கும் வகிக்கக்கூடாது. (ம் ... கதையே இல்லாமல் படமெடுப்பதை கண்டிப்பது வேறு விசயம்!)

கொடுத்த கதையை எவ்வாறு எடுத்திருக்கிறார்கள், ஒளி, ஒலிப்பதிவு எப்படியிருக்கிறது, திரைக்கதை தெருக்கூத்துத் தனமாக இருக்கிறதா, நடிகர்கள் தேமேயென்று வந்துபோகிறார்களா, ஒப்பனை தேவைப்பட்டால் அது எவ்வளவு அசிங்கமாகயிருக்கிறது? என்று எதையுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்தை புகழ்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது!

மேலே நான் கொடுத்த எந்த தராதரத்திலும் 'கற்றது தமிழ்' நூற்றுக்கு பத்து மதிப்பெண்களைக்கூடப் பெறாது. மற்றபடி எதோ தமிழ் பற்றிய கதை என்றால் அதுவும் நகைப்புக்குரியது. ஒரு நூறு படங்களில் பார்த்துப் புளித்துப்போன தனிமனிதனின் துன்பங்களுக்காக சமூகத்தைப் பழிவாங்கும் மசாலாக் கதையில், தமிழ் என்ற மையை லேசாக (தேவையேயில்லாமல்) தடவி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

நிற்க. படமெடுப்பவர்கள் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்களே, படத்தை விமர்சிக்க நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள். ஆரோக்கியமான விமர்சனமே கலைஞர்களிடமிருந்து சிறந்த படைப்புகளை வரவைக்கும்!

***

பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று 'வின்டர் லைட்' என்ற படத்தை பார்த்தேன். எப்போதும் போல ஆழமான படம். கடவுள் நம்பிக்கை போலித்தனமான சுயநலவாதம் என்கிறார் பெர்க்மன். ஆமேன்!

Sunday, August 31, 2008

பெங்களூரில் பெர்க்மன் வாரம்!

இங்க்மார் பெர்க்மன் நினைவு திரைப்பட வாரம் பெங்களூரில் இன்று துவங்கியது. சுஜித்ரா திரைப்பட சமூகத்தின் திரையரங்கில் வைல்டு ஸ்டராபரீஸை மீண்டும் பார்த்து ரசித்தேன். ஸ்வீடன் தூதரகம் மற்றும் பாலடோர் திரைப்பட நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த திரைப்பட வாரம் நடைபெறுகிறது. வருகிற சனிக்கிழமை முடிவடையும்.

வைல்டு ஸ்டராபரீஸுக்கெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய அவசியமிருப்பதாய் தெரியவில்லை. கடந்த ஆண்டு மறைந்த பெர்க்மனின் படங்களிலேயே மிகவும் இலகுவான படம். நான் பார்த்த அதிசிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள படம்! அவ்வளவுதான்.

வரும் மாதத்தில் நிகழவிருக்கிற இரண்டு திரைப்பட விழாக்கள் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 'தண்ணீரிலிருந்து எழும் ஒலிகள்' என்னும் தண்ணீர் பற்றிய விவரண திரைப்பட விழா மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கூட்டம் செப்டம்பர் 13 அன்று துவங்குகிறது.

லூமியர் கொண்டாடங்கள் என்னும் அமைப்பு நடத்தும் மலையாள திரைப்படத் திருவிழா செப்டம்பர் 19 அன்று துவங்குகிறது. லாவண்யா திரையரங்கில் நாலு பெண்கள், மரண சிம்மாசனம் உள்ளிட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

Sunday, August 24, 2008

மாத்தி மாய் (என் அம்மா)

பெங்களூரு திரைப்பட சமூகம் சார்பாக திரையிடப்பட்ட மாத்தி மாய் என்னும் மராத்தி மொழி படத்தை சனிக்கிழமையன்று பார்த்தேன். மகேஷ்வேத்தா தேவி வங்காள மொழியில் எழுதிய புதினத்தை சித்ரா பாலேகர் மராத்தியில் எடுத்திருக்கிறார். இறந்த குழந்தைகளை புதைக்கும் சோகமான வேலை செய்யும் ஒரு பெண் தாயாவதும், அதனால் நிகழும் விபரீதங்களும் படத்தின் கதை.

அதுல் குல்கர்னி, நந்திதா தாஸ் விளம்பரத்துக்கென நாயகர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் இயக்குனரைச் சொல்லி குற்றமில்லை. செத்துப்போன மராத்தி திரைப்பட உலகில் படமெடுத்ததற்கே அவரை பாராட்டவேண்டும்! படம் பார்க்க வந்திருந்த கிரீஷ் கர்னாட், படத்தின் இசை குறித்து இயக்குனரிடமே குறை சொன்னது மிகவும் ரசக்குறைவாக இருந்தது.

சித்ரா பாலேகர் பேசும்போது, "நாம் பிரஞ்சு மொழி திரைப்படங்களை திரையிட்டாலும் இந்தியாவின் பிறமாநில மொழிப் படங்களை திரையிடமாட்டோம்" என்றார். ம்... ஒரே நாளில் ஐந்தாறு மொழிப்படங்கள் திரையிடப்படும் பெங்களூருக்கு இந்த விமர்சனம் பொருந்தாதுதான். ஆனால் இன்றிரவு இருநூறு ருபாய் கொடுத்து Far North என்னும் படுசுமாரான படத்தை பார்த்தபோது, என்.டி.டிவி லூமியர் நிறுவனம் இந்திய மொழித் திரைப்படங்களையும் விநியோகிக்கலாம் என்று தோன்றியது.

'சாவதற்கு முன் பார்க்கவேண்டிய 50 படங்கள்' என்கிற சவடாலோடு (பிரதி வெள்ளி இரவு 11 மணிக்கு) யு.டிவி உலகத் திரைப்பட அலைவரிசையில் ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் வாரத்தில் ஹீரோ என்கிற ஹாங் காங் படத்தை திரைடயிட்டார்கள். இது நான் சாவதற்கு முன் பார்க்கவேண்டிய படமா? Crouching Tiger, Hidden Draganனை மீண்டுமெடுக்க செய்யப்பட்ட இந்த வீண் முயற்சியைப் பார்த்து எவனாவது சாகாமலிருந்தால் சரி!

Sunday, August 10, 2008

பெங்களூரில் ஜெர்மன் திரைப்பட வாரம்

கூதே மையம், ஜெர்மன் திரைப்பட நிறுவனம், சுஜித்ரா திரைப்பட சமூகம் ஆகியோர் சேர்ந்து நடத்தும் ஜெர்மானிய திரைப்பட வாரம், பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் நடந்துவருகிறது.

நேற்று Grave Decisions, The Edge of Heaven மற்றும் Head-On ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன். நல்ல தரமுள்ள படங்கள். வரும் வியாழக்கிழமை வரை திரையிடப்படவிருக்கும் 21 படங்களில் (7 குழந்தைகள் திரைப்படங்கள்) 10 படங்களை பார்த்து விடுவதாக உத்தேசம்! அடுத்த வாரம் ஒற்றைவரி விமர்சனங்கள் எழுதுகிறேன்.

ஜெர்மானிய படங்கள் பிரஞ்சு, போலந்து நாட்டு படங்களைப் போல ஆழமில்லாதவை என்ற என் கருத்தை இந்த திரைப்பட விழா மாற்றவேண்டும். பார்க்கலாம்! நீங்கள் பெங்களூரில் இருந்தால் சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லாவண்யா திரையரங்கத்திற்கு விரையுங்கள்!

செப்டம்பர் 3: மேலே கூறிய மாதிரி ஒரு வரி விமர்சனம் எழுதும் ஆர்வம் போய்விட்டது! அதனால் இந்த விழாவில் நான் பார்த்த மற்ற படங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். Requiem, Ghosts, Nothing but Ghosts, Distant Lights, War Child.

Saturday, July 05, 2008

ஊருக்கு நூறு பேர்

பழைய படம் தான். மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையில் இன்றிரவு ஊருக்கு நூறு பேர் திரையிட்டார்கள். சுமாரான படம். பார்க்கலாம்.

மரண தண்டனை எதிர்ப்பு, கம்யூனிசம் உள்ளிட்ட கருத்துகளை பற்றிய ஜெயகாந்தன் அவர்களின் கதை. தேசிய விருது வாங்கிய படம். கொஞ்சம் பிரசார நெடியடித்தாலும், நல்ல நடிப்பு, பாத்திரத்தேர்வு, வசனம் என்று சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அந்த (?!) காலத்தில் தூர்தர்ஷன் மாநில மொழித்திரைப் படங்களைப் பார்த்ததை பலபேர் என்னிடம் சிலாகித்திருக்கிறார்கள். இப்போது மக்களவை தொலைக்காட்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு விருது பெற்ற படங்களை திரையிடுவதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட உலக திரைப்படங்கள் என்னும் அலைவரிசையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் பாருங்கள்.

நீங்கள் தில்லியில் வசிப்பவராயின் ஓசியான் அமைப்பின் ஆசிய மற்றும் அரபு திரைப்படவிழாவில் (ஜுலை 10-20) கலந்துகொள்ளலாமே!

Thursday, June 19, 2008

தசாவதாரம் - அபாரம் பாதி, அபத்தம் மீதி!

கடவுள் இல்லை. அதுவும் ஆக்கலும் (creationist - transcendent), காத்தலும் (immanent - personal) ஒன்றாய் சேர்ந்த கடவுள் (monotheist God) சத்தியமாய் இல்லை என்று அற்புதமாய் சொல்லும் அல்லது சொல்ல நினைத்த படம் தசாவதாரம். கட்டாயம் பார்க்கலாம்.

தசாவதாரம் என்றால் என்ன? மக்கள் இயற்கையினாலும், பகைவர்களாலும் ஆபத்துக்கு உள்ளாகும் போது 'இறைவனான' விஷ்ணு அவதரித்து காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையே தசாவதாரக் கதை. அந்த பத்து அவதாரங்களையும் இந்தப் படத்தில் அற்புதமாய் கொண்டு வந்திருக்கிறார்கள்.

(கீழ் வருவன அரூண் என்பவர் சுருமுரியில் எழுதியதிலிருந்து பெறப்பட்ட விளக்கம்.)
1. மச்சம் - ரங்கராஜ நம்பி - கடலோடு போவதால்.
2. கூர்மம் - அமெரிக்க அதிபர் புஷ். தேவருக்கும் அசுரருக்கும் சண்டை மூட்டியது போல் இன்று மேற்கத்தியருக்கும், இஸ்லாமியருக்கும் சண்டை மூட்டிவிடுதல்.
3. வராகம் - பாட்டி - ஒரு பாட்டில் அவரே பன்றியாக நடிக்கிறார்.
4. நரசிம்மம் - ஸிங்கன் நராஹாசி - பெயர், கைகளால் கொல்வதற்காக பயிற்சி.
5. வாமனன் - கலீபுல்லா - விஸ்வரூபம்.
6. பரசுராமன் - ஃபெலெட்சர் - கொலைகாரர்.
7. ராமன் - அவதார் சிங் - ஒரு தார மணம்.
8. பலராமன் - பலராம நாயுடு - பெயர், காவல் துறை.
9. கிருஷ்ணன் - பூவராகன் - திரெளபதியை (அசின்) காத்தது, பாண்டவர் (சகாக்கள்), தூது செல்வது, காலில் அம்பு பட்டு இறப்பது.
10. கல்கி - கோவிந்த் ராமசாமி - நிகழ்கால உலகத்தை காப்பவர்.
(நன்றி அரூண்.)

மச்சவதாரம் இந்திய கதைப்படி மட்டுமல்லாது, வரலாறு, அகழ்வாராய்சி மூலமாகவும் மிகப் பழமையான கதையே. வேதக் கதைகளில் மனுவைக் (Manu) காப்பாறும் மீனும், ஆப்ராமிய மதக்கதைகளில் வரும் நோவா (Noah of the river) கதையும் பழைமையானவை. பாண்டியரின் சின்னமும், பல ஆப்பிரிக்க நாட்டு சித்திரங்களும்், திருமாலில் உள்ள 'மா'வும், மீன் ஆதி காலத்திலிருந்து வணக்கப் படுவதை பறைசாற்றும். மற்றபடி மீன் சாப்பிட்டதால் அது கடவுள். பிராமணர்கள் பால், மாட்டுக்கறி சாப்பிட்டதால் அவர்களுக்கு காமதேணு கடவுள் என்று மிக எளிதே.

நிற்க. மீன் கதை மிகப்பழைமையானது என்பதற்கு ஏற்றார்போல, தசாவதாரம் படத்தின் முதல் பகுதி மட்டும் தனியே 12ஆம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அதில் சைவரும், வைணவரும் அடித்துக்கொண்ட தமிழரின் அவமானகரமான வரலாற்றை சொன்னது ஓ போட வைத்தது. மற்றபடி காஞ்சி சங்கர மடத்தை கெடுத்த ஜயேந்திரர் உள்ளிட்ட பொறுக்கிகள், தீட்டு என்ற பெயரால் சாதியம் போற்றும் பிராமணர் (பூவராகன் உடலை கட்டிக்கொண்டு பாட்டி அழும்போது கூட வருபவர்), பிராமண பாஷை என்னும் பெயரில் வடமொழி கலப்பு (அசின் பேசுவது), முஸ்லீம்கள் என்றாலே அல்கொய்தா என்னும் அபாண்ட போலீஸ் நடைமுறை என்று பல பேரை சாத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் கமல் கதை, திரைக்கதை எழுதும்போது இருந்த அசாத்திய திறமையின் வெளிப்பாடு. படம் எடுக்க ஆரம்பித்தவுடன் எல்லாம் குட்டிசுவராய் முடிந்திருக்கிறது. மிக மோசமான ஒப்பனையை (Makeup) மன்னிக்கவே முடியாது. பலராம நாயுடு மற்றும் ஒப்பனையில்லாமல் வரும் கோவிந்த், ரங்கராஜ நம்பி பாத்திரங்கள் தவிர பிற ஒப்பனைகள் படுகேவலம்.

போயும் போயும் ஹிமேஷ் ரேஷ்மய்யா என்னும் தரித்திரத்தை பிடித்து வந்து இசையமைக்க வேண்டிய அவசியமென்ன? சண்டைக்காட்சிகள் மகா-மோசம் என்றால், கணிப்பொறி சித்திரவேலைகள் (graphics) தயாரிப்பாளரிடம் காசு தீர்ந்துவிட்டதை பறைசாற்றுகின்றன. கே. எஸ். ரவிகுமார் எல்லாம் ரஜினியோடு சேர்ந்து அல்லக்கை மடமெடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் ஒரு அருமையான கதையை, கருத்தை எடுக்கும் அளவுக்கு தமிழ் திரைப்பட உலகம் இன்னும் வளரவில்லை என்பதை தசாவதாரம் நிரூபித்திருக்கிறது. கமல் திரைப்படங்களை விடுத்து, புதினம் (novel) எழுத ஆரம்பித்தால் தமிழுக்கு அபாரமான சேவை செய்யமுடியும்.

Monday, February 25, 2008

குப்பை படத்துக்கு ஆஸ்கரா?

நேற்றிரவு The Counterfeiters என்னும் ஆஸ்திரிய நாட்டுப் படம் பார்த்தேன். படு கேவலம். அதற்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. கொடுமைடா சாமி!

படு கேவலம்னா பி.வாசு படம் அளவுக்குக் கேவலம். சும்மா holocaust பற்றி தலைப்பு வச்சுட்டு ஒரு கருப்பு திரையைக் காட்டினாகூட ஆஸ்கர் கொடுத்திடுவாங்க போலயிருக்கு. Manufactured Emotions கொண்ட ் அழுகாச்சிப் படம். அதைக்கூட ஒழுங்கா எடுக்கத்தெரியல.

ஆஸ்விட்சு மூகாமிலிருக்கும் யூத நாயகன் எவ்வளவோ சிரமத்துக்கு அப்புறம் மருந்து வாங்கிட்டு வருவாரு, ஆனா இழுத்துகிட்டு இருந்தவரு, நாயகன் வருகிற நேரத்துல சாவாரு. வில்லன் நாயகன் மேலே சிறுநீர் கழிப்பாரு. ஒருத்தரு மணிக்கட்டில வெட்டிக்கிட்டு சாவாரு. நாசிக்கள் தோற்று ஓடினப்புறம் முகாம்வாசிகள் ஒரு நல்ல படுக்கையைப் பார்த்து கண்ணீர் வடிப்பாங்க. இந்த மாதிரியான, ஒரு பதினையாயிரம் படங்களில் பார்த்த காமெடி காட்சிகளை வைத்து ஆஸ்கர் வாங்கிட்டாங்க. அசிங்கம்.

இந்த படத்துக்கு விருதாம். ஆனா திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான 4,3,2 க்கு nomination கூட கிடையாதாம்! அரசியல் காரணங்களுக்காக 4,3,2 சேர்க்கப் படவில்லை என்பது தெரிந்ததுதான். (கருக்கலைப்பு பற்றிய படம் குடியரசுக் கட்சிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும்.) இது ஒரு மோசடின்னு சில விமர்சகர்கள் கூட எழுதியிருக்காங்க. ஆனா 4,3,2 வந்த ஆண்டில் ஒரு கேவலமான படத்துக்கு விருது கிடைத்தது பெரும் அவமானம்.

Monday, February 11, 2008

4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள்

பயம்... நடுக்கம்... திரையரங்கிலிருந்து எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம்.

4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள். (ரோமானிய மொழி) இந்தப் படத்தைப் பார்த்து நடுங்காதவன் ஆண்மகனேயில்லை. ஆமாம்! ஏனென்றால் பெண்கள், குறிப்பாக அம்மாக்கள் இந்தப் படத்தை நடுங்காமல் பார்ப்பார்களாயிருக்கும். ஆண்களால் முடியுமாயென்று தெரியவில்லை. என்னால் முடியவில்லை.

நான் பார்த்த படங்களிலேயே தாங்க முடியாத படங்களென நான் கருதுவது Cries and Whispers மற்றும் The Return. முதலாவது பர்க்மனின் தேவையில்லாத (ஆனால் புகழ்பெற்ற) சித்தரவதை. இரண்டாவதை எடுத்து குலை நடுங்க வைத்தவர் அடுத்து படமெடுக்கலாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்!

சரி 4,3,2. இதோட கதை பற்றியெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் பாருங்கள். பெண்களுடன் சேர்ந்து பார்ப்பது நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இது பெண்களைப் பற்றி ஒரு ஆண் இயக்குனர் (Cristian Mungiu) ஆண்களுக்காக எடுத்த படம்... பாடம்.

ஹாயல்லாஹ்!!



ஆஹா, நதீன் லபாக்கியை எப்படிய்யா இத்தனை நாளா எங்ககிட்டேர்ந்து மறச்சீங்க? லெபனான் பெண்களும் இத்தாலிய ஆண்களும் இருப்பதிலேயே அழகானவர்கள் என்று சில வேலையத்த ஆராய்ச்சிகள் தெரிவிப்பது வழக்கமே. அதுக்காக இப்படியா? ஆயிரக் கணக்கான வருடங்களின் வரலாறு தாங்கி. பல மதங்களைத் தழுவி, அரபிக், பிரஞ்சு என்று கொஞ்சி, மேற்கும் கிழக்கும் கலந்தடிக்கும் பெண்களுக்கு 'அழகிகள்' என்னும் பட்டம் மிகவும் சாதாரணமாகப் படுகிறது!

ம்... நான் நேற்று பார்த்த Caramel இன் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை போலிருக்கிறது!

Saturday, February 09, 2008

சென்னையில் பிரஞ்சுத் திரைப்பட விழா

சென்னை சத்யம் திரையரங்கில் Alliance Francaise ஆதரவுடன் நடைபெறும் பிரஞ்சுத் திரைப்பட விழா துவங்கியிருக்கிறது. இது பற்றிய செய்தி இங்கே.

நீங்கள் சென்னையில் இருந்தும் Caramel (Sukkar banat) உள்ளிட்ட படங்களில் எதையாவது ஒன்றையேனும் பார்க்க உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை 'கோவிந்தா' ஆகிக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம்! ஆ!!!

சரி அப்படியே, போன வாரம் நான் பார்த்த படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே.

Mar adentro
(Sea Inside) - மனிதாபிமானக் கொலை (Euthanasia) பற்றிய ஸ்பானியப் படம். பார்க்கலாம்.

Argent de poche, L'
(Small Change or Pocket Money) - சுட்டிகளின் லூட்டி! பார்க்கலாம். சொர்கத்தின் குழந்தைகள், நாய் பிழைப்பு போன்ற படங்களை ரசித்தவர்கள் இதையும் ரசிப்பார்கள்.

Domicile Conjugal (Bed and Board) - Francois Truffat எடுத்த பிரஞ்சு new wave படங்களில் ஒன்று. Antoine Doinel என்ற புனை பாத்திரம் வரும் ஐந்து படங்களில் நான்காவது. Claude Jade இன் கொள்ளை அழகுக்காகப் பார்க்கலாம்!

Monday, January 21, 2008

மரணம் ஈன்ற ஜனனம்

Scaphandre et le papillon, Le (The Diving Bell and the Butterfly) - சமீபத்தில் வெளியாகி 'தங்க உலகம்' உள்ளிட்ட விருதுகளை வென்ற பிரஞ்சுத் திரைப்படம். Jean-Dominique Bauby அவர்களின் உண்மைக்கதை. உள்ளத்தால் ஆகாதது எதுவுமில்லை என்று பறைசாற்றும் வாழ்க்கை வரலாறு. பார்க்கலாம்.

Ostre sledovane vlaky (Closely Watched Trains) - ஆகா என்ன பொண்ணுங்க?! என்ன சங்கதி!! நாசிக்களை எதிர்த்து செக்கஸ்லோவாக்கியர்் எவ்வாறு மெதுவாக கிளர்த்தெழுந்தார்கள் என்றும் சொல்லும் படம். New Wave என்னும் செக்கஸ்லோவாக்கியப் படங்களில் மிகவும் பாராட்டப்பட்ட படம். நிச்சயம் பார்க்கலாம்.

Goodbye Lenin! - கிழக்கு ஜெர்மனியின் மறைவை வித்தியாசமாகச் சொல்லும் படம். டேனியல் புருயலுக்காகப் பார்க்கலாம்.

Tuesday, January 15, 2008

நட்சத்திரங்கள் - நிழலும் நிஜமும்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

விமர்சனம் எழுதும் அளவுக்கு இன்று பொறுமையில்லை. கடந்த வாரம் நான் பார்த்த படங்களின் சிறுகுறிப்புகள் கீழே!

தாரே சமீன் பர் - நல்ல படம், பார்க்கலாம். டிஸ்லெக்சியா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக அமீர் கானைப் பாராட்டலாம்.

பால்சாக்கும் இளஞ்சீன தையல்காரியும்! - கலாசாரப் புரட்சி என்னும் சீனாவின் இருண்ட காலத்தில் பூத்த ஒரு காதல் கதை. இயக்குனரின் சொந்தக் கதை, புதினமாகவும், பின்பு திரைப்படமாகமும் வந்தது. சுமார்தான்.

கோப்பென்ஹேகன் - இரவா புகழ்பெற்ற நீல்ஸ் போர் - வெர்னர் ஹைசன்பர்க் ஆகியோரின் சந்திப்பு குறித்த விவரணப்படம். கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் படத்தில் இருக்கின்றன.

ஆனா ஃப்ராங்க் - அவரைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? கட்டாயம் பார்க்கவேண்டிய விவரணப்படம்.

Wednesday, December 19, 2007

கல்லூரி - எங்கே என் முத்து?

கல்லூரி திரைப்படம் பார்த்தவர்கள் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா பற்றி நினைத்துப் பார்ப்பார்கள். எனக்கு என் நன்பன் முத்துகணேஷ் நினைவுக்கு வந்தான். தாயில்லா பிள்ளை, தோல் பதனிடும் சாலையிலும், நிலத்திலும் உழைத்து மகனை பள்ளிக்கு அனுப்பிய தந்தை, சிறு வயதிலேயே மணம் செயது கொடுக்கப்பட்ட தங்கை, அக்காவாவின் வயதேயுடைய பாசமுள்ள மாற்றான்தாய்.

படத்தில் வரும் முத்து என்ன ஆனானென்று தெரியவில்லை. என் முத்து எட்டாவது படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடிவிட்டான். அவனை பள்ளிக்கு மீட்டுவர நான் போதுமான அளவு முயற்சிக்கவில்லை என்று இப்போது வருந்துகிறேன்.

ஓ, விமர்சனமா? தமன்னா கபளீகரமாக (Gorgeous?!) இருக்கிறார். புதுமுகங்கள் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். காட்சிகள், பாத்திரங்களில் யதார்த்தம் மேலிடுகிறது. Shoutcastஇல் நான் ரசிக்கும் 'ஜுன் ஜுலை' பாட்டு இப்படத்தில்் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். 'நீங்க சொல்லுங்க ..., ஏன் ...' மாதிரி நகைச்சுவைகளை எப்படி ரசி(சகி)ப்பதென்று தெரியவில்லை. குருநாதரைப் போலவே பாலாஜி சக்திவேலிடமும் சரக்கு குறைவுதான் போலிருக்கிறது. படம்: பார்க்கலாம்.

Tuesday, December 18, 2007

தஸ் கஹானியான் - பதிற்றுப் பத்து!

ஊடகங்களில் விமர்சனம் எழுதுபவர்களைப் பிடித்து நல்லா நாலு சாத்து சாத்தனும்னு நினைக்கிறேன். தஸ் கஹானியான் (இந்தி - பத்து கதைகள்) என்று அருமையா படம் எடுத்திருக்காங்க. சில அல்லக்கைகள் இதைத் தாறுமாறாக விமர்சித்திருக்கின்றன. காட்டு: ராஜிவ் மசந்த் மற்றும் ஷுப்ரா குப்தா. இவங்களைப் படம் எடுத்து காட்டச் சொல்லனும்.

தஸ் கஹானியான் - அற்புதமான முயற்சி. பிரஞ்சில் வந்த Paris Je taime பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். பொதுவா அழுகாச்சி படம் (Melodrama) எடுப்பவர்களால் பத்து நிமிடத்திலெல்லாம் கதை சொல்ல முடியாது. இங்கு ஆறு இயக்குனர்கள், பல நடிகர்கள், பின்னனிக் கலைஞர்கள் சேர்ந்து 10 பத்து நிமிடப் படம் எடுத்திருக்கிறார்கள்.

பத்தில் எட்டு பகுதிகள் நிறைவாகச் செய்யப் பட்டதாகவே நினைக்கிறேன். இதில் இரண்டு பகுதிகளில் தமிழும் இருக்கிறது! நானா பாடேகர் வரும் Gubbare என்னும் பகுதியும், நேகா தூபியா வரும் Strangers in the Night பகுதியும் என்னைக் கவர்ந்தன. நாயகன், சத்யா (இந்தி), பாட்ஷா போன்ற படங்களை பத்து நிமிடத்தில் அழகாக எடுக்க முடியுமென்று Rise and Fall இல் காட்டியிருக்கிறார்கள். பார்க்கத் தவறாதீர்கள்.

டான் மாதிரி டப்பாவை எல்லாம் இரண்டு தடவை காப்பியடிக்கும் நம்மவர்கள், இந்த மாதிரி நல்ல முயற்சிகளையும் காப்பி அடிக்கலாமே?

Monday, December 17, 2007

சென்னைத் திரைப்பட விழா

ஐந்தாவது சென்னைத் திரைப்பட விழா தற்போது நடந்துவருகிறது. சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்! இங்கு திரையிடப்படும் தமிழல்லாத படங்களில் The Lives of others என்னும் ஜெர்மானிய படத்தை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அடூரின் நாலு பெண்கள் பார்க்க ஆர்வம்.

இந்திய திரைப்பட ரசிகர்கள் சங்கம் என்னும் அமைப்பு இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது. பாராட்டுக்கள். இவர்கள் ஆண்டு முழுவதும் பல நல்ல படங்களை திரையிடுவது தெரிகிறது. கலக்குங்க!

அடுத்த மாதம் சென்னையிலும் குவஹாத்தியிலும் நடக்கவிருக்கும் குறும்பட விழாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்தியத் திரைப்பட விழாக்களின் பட்டியல் கீழே. இவை நடக்கும்போது நீங்கள் அந்த ஊரிலிருந்தால் போய்ப் பாருங்களேன்!

1. சர்வதேச இந்தியத் திரைப்பட விழா, கோவா.
2. அரசின் திரைப்படச் சரகம் நடத்தும் மும்பை திரைப்பட விழா.
3. திருவணந்தபுரத்தில் நடக்கும் கேரள திரைப்பட விழா.
4. அரசின் சிறார் திரைப்படக் கழகம் நடத்தும் குழந்தைகள் திரைப்பட விழா.
5. கொல்கத்தா திரைப்பட விழா.
6. சென்னைத் திரைப்பட விழா.
7. தில்லியில் நடக்கும் ஆசிய/அரபு திரைப்பட விழா.
8. ஐதராபாத் திரைப்பட விழா.
9. பூரியில் நடக்கும் சுவாரசியமான சுதந்திரத் திரைப்பட விழா.
10. திருச்சுரில் நடக்கும் குறும்பட விழா.
11. புணே சர்வதேச திரைப்ப்ட விழா.
12. பெங்களூரில் நடக்கும் தண்ணீர் திரைப்பட விழா!

Monday, December 10, 2007

பருத்திவீரன், முத்தழகன்?

என்னப்பு பாக்கறீங்க? எப்பவவோ வந்த படத்தைப் பத்தி இப்ப எழுதறானேன்னு தானே? அட இப்பதானுங்கள நாங்க இதப் பாத்தோம்!

சரி, சரி, அந்த கிராமத்தின் பேச்சுநடை எனக்கு வரப்போவதில்லை! பருத்திவீரன் சிறந்த படைப்பு என்பதில் சந்தேகமில்லை. சாதாரணமாக நல்ல கதை, கருத்து இருந்தும் படத்தை மோசமாக எடுப்பதுதான் இத்தகைய கதையம்சமுள்ள படங்களில் வழக்கம். சேரனின் இயலாமை, தங்கர் பச்சானின் அபத்தக் களஞ்சியங்கள், பார்த்திபனின் நாடகங்கள் என்று நாம் அறிந்ததுதானே! அமீர் இயக்கிய ராம் திரைப்படம்கூட எழெட்டு முடிவுகள் (climax) வைத்து சொதப்பிய படம்தான்.

அவற்றோடு ஒப்பிடும்போது பருத்திவீரன் மிகவும் பாராட்டப்பட வேண்டிய படம். பல நிமிடங்கள் வருகிற திருவிழா தொடக்கக் காட்சியாக வருவது அருமை. எங்கள் ஊருக்கு அருகில் நடக்கும் கிராமத் திருவிழாக்கள் நினைவுக்கு வந்தன! நல்ல நகைச்சுவை, சிறப்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர் தேர்வு, காட்சியமைப்பு என்று படம் எடுத்தவிதத்தில் கலக்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்தப் படம் சொல்லவருகிற அல்லது சொல்லாமல் விட்டுவிடுகிற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை! Fatalism (விதிவசம்) நல்ல வேளையாக இந்தப்படத்தின் கரு இல்லை என்று நினைக்கிறேன். 'முற்பகல் செய்யின் பிற்பகல் (சுற்றத்தார்க்கும்!) விளையும்' என்பது ஓரளவு பொருந்துகிறது. ஆனால் முத்தழகுக்கு நேரும் கதியை என்னால் சீரணிக்க முடியவில்லை!

நந்தா என்கிற படத்தை விகடன் விமர்சித்தபோது, "சோகத்தை சனங்கள் ரசிப்பார்கள், படுசோகத்தை?" என்று கேட்டது நினைவிருக்கிறது. அதேபோல் இந்தப் படத்தில் ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கும் முயற்சி எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் வேதனை அடைந்தேன் என்பது இயக்குனர் அமீரின் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள்!