Friday, March 30, 2007

அய்யா சாமிகளே!, செய்தி படிக்க விடுங்கப்பா...

நான் தினமும் இணையத்தில் குறைந்தது பத்து செய்தித் தளங்களுக்காவது செல்கிறேன். ஆனால் உன்னை படிக்க விடுகிறேனா பார் என்று ஒரு கூட்டம் இங்கே அலைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஒன்று அவர்களுடைய தளத்தில் செய்திகளை எவருக்கும் தெரியாத இடத்தில் ஒளித்து வைத்திருப்பார்கள். (எ.கா: என்.டி.டீவி, டி.என்.எ) அல்லது குட்டிக்கரணம் அடித்தாலும் லினக்சில் படிக்கமுடியாதபடியான எழுத்துரு மற்றும் பக்க அமைப்பு வைத்திருப்பார்கள். (எ.கா: தினமலர், தினமணி மற்றும் எல்லா தமிழ் நாளிதழ்கள்!)

இந்நிலையில் தட்சுதமிழ் தளத்தை ஒருங்குறிக்கு மாற்றியவர்களுக்கு மட்டும் இந்த கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்சனை வராமலிருக்க வேண்டிக்கொள்கிறேன்! விகடன் ஒருங்குறியில் இல்லாவிட்டாலும் அவர்களின் எழுத்துரு லினக்சில் தெரிவதாலும், நன்றாக இருப்பதாலும் அவர்களுக்கு டாங்கர் லாரி தண்ணிர் மட்டும் கிடைக்கட்டும்.

படிக்க முடியாதவனாகிவிட்ட (?!) எனக்கு இணையத்தில் இலவசமாக ஒளிபரப்பப்படும் சில செய்தித் தொலைக்காட்சிகள் ஓரளவுக்கு ஆறுதல். (என்.டி.டீவி, ஐ.பி.என், தூர்தர்சன்) ஐயா கலாநிதி மாறனே, சன் செய்தியையும் இதே மாதிரி இலவசமா ஒளிபரப்பினா தம்பியை முதலமைச்சாராவே ஆக்கிடலாமில்ல? முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரேயொரு கேள்வி. கே.டீவின்னு அருமையான தமிழ் பெயர் வைத்திருப்பதில் எழுத்துப்பிழை இருப்பதுமாதிரி தெரிகிறதே. குரங்கு டீவின்னா கு.டீவின்னு தானே வரனும்?

Saturday, March 24, 2007

ஆசிய நாகரீகங்கள் அருங்காட்சியகம்

சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்குள்ள ஆசிய நாகரீகங்கள் அருங்காட்சியகத்தைப் போய் பார்த்தேன். அருங்காட்சியகம் என்றாலே போரடித்து தும்ம வைக்குமிடமென்றில்லாமல் நேர்த்தியாகவும் நவினமாகவும் இருந்தது. சிங்கப்பூர் செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்.

அதற்கு முந்தைய வாரம் தஞ்சை பெரிய கோயிலுக்கும், சரசுவதி மகால் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றிருந்தேன். மிக்க மனநிறைவளித்த பயணமென்றாலும் இரண்டு விசயங்கள் நெருடச்செய்தன.

1. வேலூர் கோட்டையிலுள்ள அகழியைக்கூட ஓரளவுக்குப் பராமரிப்பவர்கள் பெரிய கோயில் அகழியை சீரழித்தது ஏனென்று தெரியவில்லை. அங்கே உள்ளேயிருப்பது முன்னால் இந்தியப் பிரதமரைக் கொன்ற அதிமுக்கியமானவர்கள், இங்கிருப்பதோ உதவாக்கரை சிவன் மட்டும்தான் என்பதாலா?



2. சரசுவதி மகால் நூலகத்திலிருக்கும் ஓலைச்சுவடிகள் மிகவும் அரிய செல்வங்களென்றாலும், இந்த சிறிய நூலகத்தைப் பற்றியா இவ்வளவு தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம்? சப்பென்றாகிவிட்டது!

Tuesday, February 20, 2007

ஜூஸ்ட் (ரசப்படுத்தல்?!)

ஸ்கைபை உருவாக்கிய சென்ஸ்டிராம் மற்றும் ஃப்ரைஸ் ஆகியோர், ஜூஸ்ட் என்னும் இணைய தொலைக்காட்சித் தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது நேசவலை மற்றும் சூல்ரன்னர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இங்கு யூடியுப் போன்று எல்லோரும் பதிவேற்ற முடியாதென்பதால் காப்புரிமைகளுக்கு வேட்டு வைக்க முடியாது! சென்ற வாரம் யூடியுபிலிருந்து தங்களின் படங்களை அகற்றச்சொன்ன வயோகாம் நிறுவனம் அவற்றை ஜூஸ்டில் வெளியிட முடிவு செய்துள்ளது. தமிழக தயாரிப்பாளர்களும் விழித்துக்கொண்டால் நல்லது!

சூல்ரன்னர் தொழில்நுட்பம் மொசில்லவுடையாதாகும். இதனை பயன்படித்தும் சாங்பேர்டு முயற்சி வெற்றிபெற்றால் ஐடியூன்ஸை லினக்ஸுக்குத் தராமல் அழிச்சட்டியம் செய்யும் ஆப்பில் நிறுவனத்துக்கு பாடம் புகட்டலாம்!

Saturday, February 17, 2007

ரெய்ல்ஸில் விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள்!

பணி நிமித்தமாக ரூபி ஆன் ரெய்ல்ஸ் என்னும் வலை கட்டமைப்பு மென்பொருளை படித்துக்கொண்டிருக்கிறேன். சி, சி++, மைசீக்வல் என்று இணையத்தின் புறங்கடையிலிருந்த என்னை ரெய்ல்ஸில் விளையாடுடா என்று வராண்தாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். நான் பயன்படுத்தும் சில சுட்டிகளைத் தருகிறேன். யான் பெற்ற இன்பம் (துன்பம்?) பெறுக இவ்வையகம்!

1. ரூபி ஆன் ரெய்ல்ஸோடு உருளுங்கள்!
2. புத்தகங்கள். (தூக்கத்திற்கு முன்)
3. விக்கி. (தூக்கத்திற்கு பின்)

Friday, February 16, 2007

மாற்று! - உரக்க சிந்தித்தல்!

சில நாட்களாக, மாற்று! புண்ணியத்தில் தமிழ் வலைப்பதிவுகளைப் படித்ததில் எனக்குத் தோன்றியவை:

1. தமிழில் எக்கச்சக்கமான பதிவுகள் வருகின்றன என்று நினைத்திருந்தேன். ஆனால் மாற்று! தினசரி சேகரிக்கும் (150 பதிவர்கள் எழுதும்) சுமார் 20 பதிவுகளில் நல்ல பதிவுகள் ஐந்துக்கு மேல் தேறுவதில்லை! தமிழில் எழுதுபவர்கள் தரமாக எழுதுவதில்லை என்று தோன்றுகிறது.
2. மாற்றுக்கு பங்களிப்போரின் சொந்தப் பதிவுகள் நன்றாக இருக்கின்றன.
3. தமிழ்மணத்தில் மானாவாரியாக அடித்துக்கொள்கிறார்கள் என்று ரவி சொல்லக்கேட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை என்பது தெரிகிறது. (எரிகிற நெருப்பில் நானும் கொஞ்சம் என்ணெய் ஊற்றிவிட்டுவந்தேன் என்பது வேறு விஷயம்!) மாற்று போன்ற முயற்சிகள் வெற்றிபெறுவது தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு நல்லது.

Tuesday, February 13, 2007

பாவம் மணிப்பூர்

பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலத் தேர்தல்கள்்் பற்றி இந்தியாவின் தமாஷா (செய்தி!) ஊடகங்களில் அடித்துக் கொள்கிறார்கள். பிற்பாடு வரப்போகும் உத்தர பிரதேசம், குஜராத் தேர்தல்கள் பற்றி கூட செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால் மணிப்பூர் தேர்தல் பற்றிய செய்திகளை சீந்துவாரில்லை. நாமாவது மணிப்பூர் பத்திரிககை் இ-பாவ் படித்து மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம்!

பசுமை விகடன்

விகடன் குழுமம் ஆரம்பித்திருக்கும் 'பசுமை விகடன்' பத்திரிக்கை மிகவும் வரவேற்கத்தகுந்த முயற்சியாகும். விவசாயத்திற்கும் எனக்கும் மிகவும் தூரமென்றாலும் விரும்பிப்படிக்கிறேன். சுற்றுலா, விவசாய வரலாறு மற்றும் துணுக்குகள் பகுதிகள் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கின்றன.

"சினிமாக்காரி படம் போட்டு ஆனந்த விகடன் குட்டிச்சுவராப் போச்சு!" என்று என் பாட்டி அங்கலாய்த்தாலும் விகடனை வாரம் தவறாமல் படிக்கிறேன். சில காலமாக வரும் 'வெளிச்சம்: உலக சினிமா' பகுதி சிறப்பாகவுள்ளது. நேரமிருந்தால் நான் சமீபத்தில் ரசித்த பின்வரும் படங்களை நீங்களும் பாருங்களேன்!

1. சில்ரன் ஆப் ஹெவன்.
2. தி ரிடர்ன்.
3. தி குக்கூ.
4. மூன்று நிறங்கள்: நீலம்.

Tuesday, February 06, 2007

விபிளே!

சில மாணவர்கள் சேர்ந்து ஆரம்பித்திருக்கும் விபிளே! என்னும் இணைய வானொலி ஒரு அருமையான தொடக்கமாகும். சிறப்பான இசைத்தொகுப்பு, நேயர் விருப்பம், முக்கியமாக காப்புரிமைகளை மீறாத தளமென்று கலக்குகிறார்கள். தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் அருமையான பாடல்களைக் கேட்கலாம்.

Wednesday, January 03, 2007

தமிழக அரசில் லினக்ஸ்

ஏற்கனவே டெக்கான் க்ரானிகலில் வந்ததுதான் என்றாலும் 'ஸ்லேஷ்டாட்' தளத்தின் 'தமிழக அரசில் லினக்ஸ்' பற்றிய இந்தப் பதிவைப் படிக்கலாம்.

Wednesday, December 27, 2006

ஹாரி பாட்டர் 7 பீட்டா!

சில ஹாரி பாட்டர் விசிறிகள் எழுதியுள்ள 'எழாவது ஹார்க்ரக்ஸ்' என்னும் புத்தகத்தை இங்கே படிக்கலாம். கொஞ்சம் 'கிலுகிலுப்பாக' இருப்பது முதலில் பிடித்திருந்தாலும் போகப்போக எரிச்சலடையச் செய்கிறது!

Saturday, December 23, 2006

ஹாரி பாட்டர் 7

ஹாரி பாட்டர் ஏழாவது புத்தகத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகம் வரும்வரை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால் இங்குள்ள ஆய்வுகளைப் படித்து உங்கள் ஆவலைத் தணித்துக்கொள்ளலாம்.

Thursday, December 21, 2006

மாயாபிம்பம்

தமிழில் இயக்கமூட்டிய படங்களை உருவாக்கிவரும் மாயாபிம்பம் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

Wednesday, December 20, 2006

சபக்

ரிலயன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சபக் என்னும் கணினி விளையாட்டுத்தளம் பெரியதாக வருமென்று நினைக்கிறேன்.

Saturday, December 16, 2006

மீண்டும்...

தமிழில் வலைப்ப்திவு செய்யும் எனது முந்தய முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றதென்பது இழே பார்த்தாலே தெரியும்! இருந்தாலும் பரவாயில்லை. இன்னொரு தரம் முயன்று பார்க்கலாமே! இதற்கு காரணமான மாற்றுக்கு நன்றி!

Monday, September 12, 2005

தமிழகத்தில் கல்விச் சீர்திருத்தம்.

சமிபத்தில் நடந்த மத்திய கல்வி வழிகாட்டு மன்ற கூட்டத்தில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை கைவிட பரிந்துரை செய்திருக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய முடிவு. அனைத்து மாநிலங்களும் (குறிப்பாக தமிழக அரசு) இதை ஏற்குமா என்பதையும், எப்போது அமல்படுத்தும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த சமயத்தில் இன்னும் சில சீர்திருத்தங்கள் எனக்குத் தோன்றுகின்றன. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியக் கல்வி என பல்வேறு முறைகள் இருப்பது குழப்பத்தை விழைவிக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி கல்வி முறையிலுள்ள குறைகளை சாக்காக வைத்துக்கொண்டு, பல மெட்ரிகுலேஷன் மற்றும் பாலகர் பள்ளிகள் தமிழகமெங்கும் முளைத்துவிட்டிருக்கின்றன். இவைகள் பெரும்பாலும் மிகமட்டரகமான கல்வியளிப்பதோடு, ஆங்கிலத்தையும் திணித்து வருகின்றன. இதற்கு மாற்றாக இரண்டையும் இணைத்துவிட்டால் தமிழக கல்வி முறையில் ஒழுங்கும், முன்னேற்றமும் எற்படும். தமிழகத்திலுள்ள எல்லா மாணவர்களும் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்கள் நல்ல கல்வி பெறுவார்கள். இந்த புதிய பாட முறை போதிய தரமுடன் இருக்காது என்று கருதும் பள்ளிகள் சி.பி.எஸ்.இ கல்வி முறையைப் பின்பற்றலாம். மத்திய அல்லது மாநிலக் கல்வி முறை என்கிற தெளிவு பிறக்கும். எஸ்.எஸ்.எல்.சி முறையைக் குறை கூறி "கான்வென்ட்" கல்விக்காக ஓடும் பெற்றோரை சிந்திக்கவைக்கலாம். கல்வியென்றலே, ஆங்கிலத்தில்தான் என்று சென்றுகொண்டிருக்கும் தமிழகத்தை அழிவுப்பாதையிலிருந்து மீட்கலாம். இதுதவிர தமிழகத்தில் தமிழை எழுதப்படிக்கத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் அவலத்தை என்னவென்று சொல்வது? தமிழகத்தில் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் தமிழைப் பாடமாகப் பயிலவேண்டும். தமிழைத் தாய்மொழியாய்க் கொள்ளாதவர்களும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களும் தமிழை விருப்பப்பாடமாக படிக்கலாம். பன்னிரெண்டு வருட்ப்பிரிவுகளாக இந்த தமிழ் விருப்பப்பாடம் அமையவேண்டும். முதல் வருடத்திலிருந்து படிக்கும் மாணவர்கள் பன்னிரண்டும் முடித்திருப்பர். தாமதமாக ஆரம்பிப்பவர்கள் எவ்வளவு ஆண்டுகள் படித்தார்க்ளோ அத்தனை வருடப்பிரிவுகள் முடித்திருப்பார்கள். இதேபோல தமிழை முதற்பாடமாக படிக்கும் மாணவர்கள் வேறு ஏதேனுமொறு மொழியை விருப்பாடமாகப் படிக்கவேண்டும். திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தேயாகவேண்டுமென்று அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் தமிழ்வழிக் கல்வியைக் கண்டுகொள்ளாதது ஏனோ?