Thursday, January 24, 2008

சித்திரையைக் காப்பாற்றுங்கள்!

தமிழரின் புத்தாண்டு தினம் (சித்திரை முதல் நாள்) அழிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கலாசாரத்தை சீரழித்த தாலிபான்களே கண்டுவியக்கும் அளவுக்கு இன்று தமிழ்க் கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சி நடந்துவருகிறது. மா சே துங் கலாசாரப் புரட்சி என்ற பெயரால் சீனர்களை வீணர்கள் ஆக்கியதுபோல் இன்று தமிழரின் பண்பாட்டு வேர்களைப் பிடிங்கி முட்டாள்களாக்கும் முயற்சி நடக்கிறது. தமிழ்த்தாயின் கண்ணீர் துடைக்க வாரீர்!

1. சூரியன் (solar), சந்திரன் (lunar) அல்லது இரண்டும் சேர்த்து (lunisolar) நாட்களைக் கணக்கிடுவது எல்லா சமுதாயங்களிலும், எல்லா மக்களிடத்தேயும் இருக்கும் வழக்கமே. ஆங்கில Calendar சூரிய நாட்காட்டிதானே? இந்தமுறையை மூடப்பழக்கமாகவும், மத நம்பிக்கையாகவும் சித்தரிப்பது எதற்காக?
2. திருவள்ளுவர் கி.மு. 31 இல் அதுவும் தைத்திங்கள் இரண்டாம் நாளில் பிறந்தார் என்னும் படுகேவலமான மூடநம்பிக்கையை மக்களிடையே பரப்பும் முயற்சி நடக்கிறது. வாழ்க பகுத்தறிவு!
3. இந்தியாவில் தமிழகமும், கேரளம், அசாம், வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சூரிய (solar) நாட்காட்டியை பயன்படுத்துகின்றன. மற்ற மாநிலங்களின் கலாசார நாட்காட்டிகள் lunisolar முறையைப் பயன்படுத்துகின்றன. கேரளம் மகர சங்கராந்தி (January), விஷு (April), உழவர் திருநாளாக ஓணம் (August) என்று படுஆர்வமாக தனது கலாசாரத்தைக் கொண்டாடுகிறது. ஆனால் தமிழன் சித்திரை முதல் நாளைக் கொண்டாடுவது இங்கு சிலருக்குப் பிடிக்கவில்லை!
4. பஞ்சாபில் பொங்கலை லோரியாகவும், வைகாசி (நம் கணக்கில் சித்திரை) முதல் நாளைப் புத்தாண்டாகவும் (பைசாக்கி) வெகு விமர்சியாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழும் தெரிந்த பஞ்சாபி ஆளுனர் பர்னாலாவின் உரையைக் கொண்டே தமிழ்ப் புத்தாண்டுக்கு வேட்டுவைத்துவிட்டார்களே?
5. இன்று சீனப் புத்தாண்டைக் கொண்டாடாதவரே உலகில் இல்லை! கூகுள் தனது முதல்பக்கத்திலேயே சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறது. எனது Blogger Profile பக்கத்தில் நான் 'நாய்' வருடத்தில் (1982) பிறந்தது குறிப்பிடப்படுகிறது. அந்த நாய் எங்கிருந்து வந்தது? சீனர்கள் சூரிய 60 ஆண்டுக்கணக்கை அசிங்கமாகக் கருதவில்லையே?
6. தமிழன் அந்த அறுபது ஆண்டுகளுக்கு ஆரிய அறிஞர்களின் பெயர்கள் வழங்கிய ஒரே காரணத்துக்காக அம்முறையை அழித்தது எதற்காக? பாலாஜி என்ற என் பெயரை பாலாசி என்று மாற்றக் கோரிய மறைமலை அடிகள் உள்ளிட்ட கிழங்கட்டைகள் அந்த அறுபது ஆண்டுகளுக்கும் திருவள்ளுவன், கம்பன், அவ்வை, இளங்கோ என்று பெயரிட்டு அவர்களுக்கு இறவா புகழ் வாங்கித்தந்திருக்கலாமே?
7. சந்திர நாட்காட்டி பயன்படுத்தப்படும் அரபு நாட்டில், நபிகள் நாயகம் அவர்கள் மக்கா நகரிலிருந்து மெதினா நகருக்குச் சென்ற ஆண்டை முதல் ஆண்டாக வைத்துக்கொண்டாலும், அவர் சென்ற ரபி மாதத்தை முதல்மாதமாக வைக்க அடம்பிடிக்கவில்லையே? முஹரம் மாதத்தைத்தானே முதல்மாதமாக அனுசரிக்கிறார்கள். ரமலான், மிலாது நபி போன்ற நாட்கள் வரும் மாதங்களை அவர்கள் கோலாகலமாகக் கொண்டாடுவது அதனால் நின்றுவிட்டதா? தமிழன் பொங்கலன்று புத்தாண்டாக இல்லாவிட்டால் பொங்கல் கொண்டாடுவதை நிறுத்திவிடுவானா?
8. பொங்கல் மதச்சார்பற்ற நாளாம். உண்மைதான். ஆனால் சித்திரை முதல்நாள் எப்படி மதச்சார்புள்ள நாளாயிற்று? வருடப் பிறப்பைக் கொண்டாட நம் வீடுகளில் செய்யப்படும் மாம்பழ-வேப்பம்பூ பச்சடியில் இருக்கும் வேப்பம்பூ, மாரியாத்தா என்கிற இந்துக் கடவுள் என்று இவர்களுக்கு பயம் வந்துவிட்டதா?
9. பொங்கல் அன்று எல்லா மதத்தாரும், சாதியினரும் சமுதாயப் பொங்கலிட்டு (சூரியனை வழிபட்டோ, வழிபடாமலோ?) இனி புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமாம். இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இவ்வாறு பொங்கலிட்டு புத்தாண்டைக் கொண்டாடப் போகிறார்களா? சித்திரை முதல் நாளேன்றால் தாரளமாகக் கொண்டாடுவார்களே?
10. சூரியனை வழிபடுவது, கோலமிடுவதெல்லாம் ஒருவகையில் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரானவை. அதனால்தான் தேசப்பற்றிலும், இந்தியாவின் பாரம்பரியத்திலும் எவருக்கும் குறையாத இஸ்லாமியரில் சிலர் வந்தே மாதரம் பாடுவதிலும், (மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் செய்யப்படும்) சூரிய நமஸ்காரத்திலும் பங்குபெறுவதா, கூடாதா என்று குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். இப்போது பொங்கலன்று புத்தாண்டு கொண்டாடச் சொன்னால் அவர்கள் என்ன செய்து கொண்டாடுவது? "சூரியனை வணங்காவிட்டால் நீ தமிழனே அல்ல" என்று நம் இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லப் போகிறோமா? அவர்களுக்கு ஏன் இந்த தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டும்?
11. நான் இளங்கலைப் படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்தபோது என்னை ragging செய்வதற்காக தமிழ்த்தாய் வாழ்த்து பாடச்சொன்னார்கள்! தமிழரில் 99.99 சதவிதத்தினருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்தெரியாது என்று அவர்களுக்கு நம்பிக்கை! தமிழ் மாதப் பெயர்களை வரிசையாகச் சொல்லக் கேட்டால் பையன்கள் அழுதுவிடுவார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ? இன்று தைப் பொங்கல் என்றும் சித்திரை வருடப் பிறப்பு என்றும் இருப்பதால்தான், இரண்டு தமிழ்மாதங்களின் பெயர்களாவது குழந்தைகளுக்குத் தெரிகிறது. திருவள்ளுவர் பிறந்தநாள் என்னும் மூடநம்பிக்கையைக் கொண்டுவந்தால் பொங்கலே திருவள்ளுவருக்காக படைக்கப்படுகிறது என்று பிற்காலத்தில் ஆக்கிவிடுவார்கள் நம் பகுத்தறிவுவாதிகள்!
12. தேசம், மதம் என்று எந்தச் சாயமுமின்றி, தமிழரின் புத்தாண்டாய், அரசு விடுமுறையாய் இருந்த சித்திரை முதல் நாளில், சூப்பர் ஸ்டாரின் படம்பார்த்து, மாம்பழப் பச்சடி சாப்பிட்டுக் கொண்டாடிய தமிழன் நேற்றோடு செத்தான். வாழ்க தமிழ்!

இது பற்றிய எனது முந்தைய இடுகை -> தைப்புத்தாண்டு என்னும் மடத்தனம்!

18 comments:

தமிழ்பித்தன் said...

நல்ல விவாதம் இதை படிப்பார்களா எங்கள் திராவிட பகுத்தறிவு ஜீவிகள்

✪சிந்தாநதி said...

?

✪சிந்தாநதி said...

//மறைமலை அடிகள் உள்ளிட்ட கிழங்கட்டைகள்//

உங்கள் தமிழ்ப்பற்றுக்கு நன்றி

//கேரளம் மகர சங்கராந்தி (January), விஷு (April), உழவர் திருநாளாக ஓணம் (August) என்று படுஆர்வமாக தனது கலாசாரத்தைக் கொண்டாடுகிறது.//

அதே மகரசங்கராந்தி, தமிழரின் பொங்கல் திருநாள் புத்தாண்டானால் மட்டும் ஏன் வெறுப்பு?

//தமிழ்த்தாயின் கண்ணீர் துடைக்க//

ஓநாய் நினைவுக்கு வருகிறது

Balaji Chitra Ganesan said...

>> அதே மகரசங்கராந்தி, தமிழரின் பொங்கல் திருநாள் புத்தாண்டானால் மட்டும் ஏன் வெறுப்பு?

அவர்கள் மூன்று நாட்கள் கொண்டாடும் போது நாமே வழிய வந்து இரண்டில் ஒன்றை எதற்கு அழிக்கவேண்டும் என்றுதானே கேட்கிறேன்.

தைத்திங்களை முதல் நாளை பொங்கலாகவும், சித்திரை முதல்நாளை புத்தாண்டாகவும் கொண்டாடினால் என்ன பாதகம் உண்டாகிவிட்டது?

கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழன் தைத்திங்களில் புத்தாண்டு கொண்டாடினான் என்று எதாவது ஆதாரம் இருக்கிறதா?

VSK said...

இதுக்கெல்லாம் ஒரு பதிவு போட்டு ஏன் வீணடிக்கறீங்க?

அம்மா கொண்டு வந்த சமுதாய மாற்றங்களுக்கு ஏற்பட்ட அதே கதி இதற்கும் ஏற்படும்ம். இதுவும் கழிந்து போம்!
:))

Anonymous said...

இது வரை, இஸ்லாமிய சகோதரர்கள், எப்படி சித்திரை முதல் நாளை கொண்டாடினார்களோ? அப்படியே தை முதல் நாளையும் கொண்டாடட்டுமே!

இது நாள் வரை இந்துக்கள் மட்டுமே கொண்டாடி வந்த தை, இப்போது அனைத்து தமிழர்களும், கிறிஸ்த்துவ மற்றும் இஸ்லாமிய நண்பர்களும் உட்பட, சேர்ந்து கொண்டாடட்டுமே?

திருவள்ளுவர், இது நிஜபெயர் தான் என்று உங்களுக்கு தெரியுமா?
எதை வைத்து, அவர் திருவள்ளுவர் என்று கூறுகிறீர்கள்?

சீனா, கேரளா, பஞ்சாப் அவங்க எல்லாம் ஒரு விஷயம் பண்ணா? நாமளும் அதையே பண்ணனுமா?

//தமிழ்க் கலாசாரத்தை சீரழிக்கும் முயற்சி நடந்துவருகிறது//

தமிழ்க் கலாச்சாரம் சீரழியாமல் இருப்பதாக நினைக்கிறர?
தமிழ்க் கலாச்சாரம், ஆதி தமிழன் வாழ்ந்த விதம் தானே? ஜாதி, அடிமை,தீண்டாமை... தமிழ்க் கலாச்சாரம் ஓரளவு சீரழிந்தால் பரவாஇல்லை, ஒரு நல்ல கலாச்சாரம் வரும்.

//"சூரியனை வணங்காவிட்டால் நீ தமிழனே அல்ல" என்று நம் இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லப் போகிறோமா?//
என்ன கொடுமை ____ இது? சரவணன் இந்து பேராமே?

//இன்று தைப் பொங்கல் என்றும் சித்திரை வருடப் பிறப்பு என்றும் இருப்பதால்தான், இரண்டு தமிழ்மாதங்களின் பெயர்களாவது குழந்தைகளுக்குத் தெரிகிறது//

இதுக்காகதான் சித்திரை முதல் நாள் வரணும்னு சொல்றீங்களா?
தமிழ் கலாச்சாரம், நல்ல முறையில் இருக்கு. நீங்க தான் தமிழ் கலாச்சாரத்தின் காவலரோ?
தை - மாசி - பங்குனி - சித்திரை - வைகாசி - ஆணி - ஆடி - ஆவணி -புரட்டாசி -ஐப்பசி - கார்த்திகை -மார்கழி

//தேசம், மதம் என்று எந்தச் சாயமுமின்றி, தமிழரின் புத்தாண்டாய், அரசு விடுமுறையாய் இருந்த சித்திரை முதல் நாளில், சூப்பர் ஸ்டாரின் படம்பார்த்து, மாம்பழப் பச்சடி சாப்பிட்டுக் கொண்டாடிய தமிழன் நேற்றோடு செத்தான். வாழ்க தமிழ்//

தேசம்?! - சரி விடுங்க.

அரசு விடுமுறையாய் - இதை நான் ஆமோதிக்கிறேன் ;-)

வாழ்க தமிழ்.

-Amar

Balaji Chitra Ganesan said...

அமர்,

>> திருவள்ளுவர், இது நிஜபெயர் தான் என்று உங்களுக்கு தெரியுமா?
எதை வைத்து, அவர் திருவள்ளுவர் என்று கூறுகிறீர்கள்?

திருவள்ளுவர் நிஜப்பெயரா என்று எனக்குத் தெரியாது. இல்லை என்று நான் எங்கும் சொல்லவில்லை. இதுபற்றி உங்களுக்குத் தெரிந்தால் நிச்சயம் எனக்கு சொல்லுங்கள்.

>> சீனா, கேரளா, பஞ்சாப் அவங்க எல்லாம் ஒரு விஷயம் பண்ணா? நாமளும் அதையே பண்ணனுமா?

உலகெங்கிலும் நாட்காட்டி எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்று தெரிவிப்பது குற்றமா? அவர்களெல்லாம் தப்பாய் செய்து நாம் சரியாய் செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். விதண்டாவாதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது.

>> தமிழ்க் கலாச்சாரம் சீரழியாமல் இருப்பதாக நினைக்கிறர?
தமிழ்க் கலாச்சாரம், ஆதி தமிழன் வாழ்ந்த விதம் தானே? ஜாதி, அடிமை,தீண்டாமை... தமிழ்க் கலாச்சாரம் ஓரளவு சீரழிந்தால் பரவாஇல்லை, ஒரு நல்ல கலாச்சாரம் வரும்.

ஆதி தமிழ் பெண்கள் ஏன் சோழப் பெண்களேகூட இடுப்புக்குமேல் துணி அணிந்ததில்லை. திரும்பிடுவோமா? ஆதி தமிழன் நடுகல் வணக்கம், பிறகு சேயோன், திருமால் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டான். அதற்கு அப்புறம் வந்த எல்லா மதங்கள், திருக்குறள் உள்ளிட்ட சமண சமய நூல்கள், எல்லாவற்றையும் அழித்துவிடலாமா?

>> தமிழ் கலாச்சாரம், நல்ல முறையில் இருக்கு.

தெரிகிறது. அதனால் அழிக்க வந்திருக்கிறார்களோ?

>> தேசம்?! - சரி விடுங்க.

ஆமாம். தேசம், தேசப்பற்று, தேசிய கவி, தேசியம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துபவன் தமிழ்விரோதி. நல்லா இருங்கப்பு.

Anonymous said...

அய்யோ என்ன கொடுமை இது?திருட்டு திராவிடீயம் தமிழ் சித்திரையை தூக்கிக் கொண்டு ஓடி விட்டதா?மரம் வெட்டி மீண்டும் சித்திரையை மீட்டு தமிழர்களிடம் சேர்ப்பாரா?

மிதக்கும்வெளி said...

நல்ல நகைச்சுவைப் பதிவு.

pudugaithendral said...

நல்லாத் தான் சொல்லியிருக்கீங்க.

நாம் பேசி ஆகபோவது என்ன? மக்களாட்சியில், மக்களை கலந்து ஆலோசிக்காமலேத்தானே எல்லாம் நடக்குது.இதுவும் அதுல ஒன்னு.

நாம் சொல்றத எதுத்து திட்ட மாத்திரம் தயாரா இருப்பாங்க.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பாலாஜி - உங்களின் கடைசி இரண்டு இடுகைகள் வைத்து நாட்காட்டி முறைகள் குறித்து மேல் விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

தமிழ் அறிஞர்கள் கருத்து தவறு என்று கருதினாலும் அவர்களை கிழங்கெட்டைகள் என்று அழைக்கத் தேவையில்லையே? கருத்தை மட்டும் கண்டியுங்கள். இன்னொருவரைக் கண்ணியக் குறைவாக அழைப்பதால் உங்கள் கண்ணியம் தான் குறையும்.

தை 1 அன்று புத்தாண்டு கொண்டாடுவதால் பொங்கல் கொண்டாடும் வழக்கம் ஒழியும் என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடில்லை.

பொங்கல் என்பது உழவர்களுக்கு உணர்வுப்பூர்வமான நாள். உழவு இருக்கும் வரை அந்த உணர்வும் கொண்டாட்டமும் இருக்கும். ஒரு உழவுக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதை உறுதியாகக் கூற இயலும். உழவர் அல்லாதவர்களுக்கு அது பொங்கலானாலும் புத்தாண்டானாலும் தொலைக்காட்சி பார்த்து ஏதேனும் செய்து சாப்பிட ஒரு நாள். அவ்வளவு தான்.

என் பார்வையில் சித்திரைப் புத்தாண்டு என்பது இந்துக் காலக்கணிப்பில் அமைந்த புத்தாண்டே. அதை இந்துக்கள் அல்லாத தமிழர்கள் கொண்டாடி நான் கேள்விப்பட்டதில்லை. தற்போதை தை 1 அனைத்துத் தமிழரும் கொண்டாட இயலுமானால் நல்லது தானே? ஆங்கிலப் புத்தாண்டு என்று கொண்டாடுவது போல் வேண்டுபவர்கள் தனியாக இந்துப் புத்தாண்டு கொண்டாடிக் கொள்ளலாமே? இதற்கு யார் தடை செய்ய இயலும்? தமிழ்ப் புத்தாண்டைத் தானே மாற்றி இருக்கிறார்கள்? இந்துப் புத்தாண்டை அல்லவே? அரசின் முடிவில் ஏற்புடையவர்கள் கொண்டாடப்போகிறார்கள். இல்லாதவர்கள், விட்டுவிடப் போகிறார்கள். அவ்வளவு தான். இதில் பண்பாட்டு அழிப்பு என்றெல்லாம் பதைக்க ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை.

Anonymous said...

பெரும்பாலும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 அன்று வரு. அது அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினமும் ஆகும்.

ஜாதிவெறி பிடித்த கருணாநிதிக்கு அம்பேத்கர்ரைக்கண்டாலே ஆகாது.

சென்னையில் அவர் பெயரில் ஓடிக்கொண்டிருந்த போக்குவரத்துக் கழகதின் பெயரை மாற்றியவர்.

இது தமிழ் முலாம் பூசப்பட்ட நவீன தீண்டாமை.

Balaji Chitra Ganesan said...

ரவி,

கிழங்கட்டைகள் என்று சொன்னது நகைச்சுவைக்காகத் தான். திருவள்ளுவர் ஆண்டு போன்ற காமெடிகளை செய்தவர்களுக்கு தகுந்த மரியாதைதானே?!!

புத்தாண்டாக அறிவித்தால் பொங்கல் கொண்டாடுவதை நிறுத்திவிடுவார்கள் என்று நான் எங்கும் சொல்லவில்லையே! 'பொங்கல் வந்தால் புத்தாண்டு' என்று ஆகிவிட்டால் புத்தாண்டின் பெருமையும், தமிழ் மாதங்களின் recall valueஉம் குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்.

அதுவும் வழியப்போய் ஒரு தமிழ்த் திருநாளைக் கொன்றதை என்னால் சீரணிக்கவே முடியவில்லை.

இந்து மதமென்றால்லாம் தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லை. ஒரு 92 சதவீதம்பேர் 'இந்து' வாக இருப்பதால் அந்த பகுப்புமுறை உதவாது.

நடுகல் வணக்கம் முதல் முனியாண்டி வரை வழங்கிவரும் animism/folk worship, வேத மதம் வழி வந்த வைஷ்ணவம், சமணம் உள்ளிட்ட சிரமணமதங்கள், இவை மூன்றும் கலந்து உருவாகிய சைவம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம். இவை எல்லாவற்றிலுமே பங்குபெறாத ஆதிதிராவிட மதம். இவர்களில் வந்தேறிகளைத் தேடுவதால் தமிழுக்கு எந்தப் பயனுமில்லை.

சமுதாயச் சீர்திருத்தவாதிகள் தமிழறிஞராயும் கருதப்படுவதால், தெரிந்தோ தெரியாமலோ தமிழரின் பல அறிய கண்டுபிடுப்புகள் அழியநேர்ந்துவிடுகிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த 'தூய தமிழ்' பண்பாடுதான் வேண்டும் என்று கேட்பது திராவிட Fashion.

[பி.கு: நான் சாதி/பிராமனீயம் எதிர்ப்பவன் என்பதும், கடவுள் மறுப்பவன் என்பதும், தமிழார்வமுள்ளவன் என்பதும் உங்களுக்கு தெரியுமென்பதால்தான் இத்தகைய 'ஆபத்தான' கருத்துகளைத் தெரிவிக்கிறேன்!]

Anonymous said...

//சீனர்கள் சூரிய 60 ஆண்டுக்கணக்கை அசிங்கமாகக் கருதவில்லையே? //

என்ன சொல்றீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களா? சீனர்களின் ஆண்டுக் கணக்கு 60 ஆண்டுக்கொருமுறை அல்ல 12 ஆண்டுகளுக்கொரு முறை சுழற்சியில் வருவது.

Balaji Chitra Ganesan said...

சீனர்கள் 60 ஆண்டுக் கணக்கை பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியும். எகிப்து, மெசபடோமியா, இந்தியா என்று இந்த 60 ஆண்டுக்கணக்கு பல இடங்களில் பயன்படுத்தப் பட்டது.

ஆதைத்தான் நான் சொன்னேன் என்று சல்லியடிக்க விரும்பவில்லை! நான் 60 ஆண்டுகளுக்கும் பெயர் வைத்திருப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். அவர்கள் 60 ஆண்டுகளை 10 Heavenly stems மற்றும் 12 Earthly Branches என்று பிரிப்பதை நீங்கள் சுட்டிக்காட்டியபின்தான் நானே தெரிந்துகொண்டேன். நன்றி!

அதனால் எனக்கு பாதி மார்க்! மிச்சத்தை இவங்களுக்கு கொடுத்திடலாம்.

கோவி.கண்ணன் said...

//Balaji சொன்னார் ...
சீனர்கள் 60 ஆண்டுக் கணக்கை பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.
//

பாலாஜி,

60 ஆண்டுகள் ? இது ஆதாரமற்றது. எனது இடுகையில் சீனர்களின் 12 ஆண்டுக்கணக்கை படத்துடன் எனது பதிவில் இட்டு இருக்கிறேன்.

Balaji Chitra Ganesan said...

ஹலோ? 10 Heavenly stems மற்றும் 12 Earthly Branches பற்றி அதே பின்னூட்டத்திலேயே எழுதியிருக்கிறேனே? ஆதாரத்தையும் சுட்டியாக கொடுத்திருக்கிறேனே?

Madhu said...

Hi,

Look at this site, by typing in tamil can able to search in google.

http://www.yanthram.com/ta