Sunday, August 31, 2008

பெங்களூரில் பெர்க்மன் வாரம்!

இங்க்மார் பெர்க்மன் நினைவு திரைப்பட வாரம் பெங்களூரில் இன்று துவங்கியது. சுஜித்ரா திரைப்பட சமூகத்தின் திரையரங்கில் வைல்டு ஸ்டராபரீஸை மீண்டும் பார்த்து ரசித்தேன். ஸ்வீடன் தூதரகம் மற்றும் பாலடோர் திரைப்பட நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த திரைப்பட வாரம் நடைபெறுகிறது. வருகிற சனிக்கிழமை முடிவடையும்.

வைல்டு ஸ்டராபரீஸுக்கெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய அவசியமிருப்பதாய் தெரியவில்லை. கடந்த ஆண்டு மறைந்த பெர்க்மனின் படங்களிலேயே மிகவும் இலகுவான படம். நான் பார்த்த அதிசிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள படம்! அவ்வளவுதான்.

வரும் மாதத்தில் நிகழவிருக்கிற இரண்டு திரைப்பட விழாக்கள் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 'தண்ணீரிலிருந்து எழும் ஒலிகள்' என்னும் தண்ணீர் பற்றிய விவரண திரைப்பட விழா மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கூட்டம் செப்டம்பர் 13 அன்று துவங்குகிறது.

லூமியர் கொண்டாடங்கள் என்னும் அமைப்பு நடத்தும் மலையாள திரைப்படத் திருவிழா செப்டம்பர் 19 அன்று துவங்குகிறது. லாவண்யா திரையரங்கில் நாலு பெண்கள், மரண சிம்மாசனம் உள்ளிட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

Sunday, August 24, 2008

மாத்தி மாய் (என் அம்மா)

பெங்களூரு திரைப்பட சமூகம் சார்பாக திரையிடப்பட்ட மாத்தி மாய் என்னும் மராத்தி மொழி படத்தை சனிக்கிழமையன்று பார்த்தேன். மகேஷ்வேத்தா தேவி வங்காள மொழியில் எழுதிய புதினத்தை சித்ரா பாலேகர் மராத்தியில் எடுத்திருக்கிறார். இறந்த குழந்தைகளை புதைக்கும் சோகமான வேலை செய்யும் ஒரு பெண் தாயாவதும், அதனால் நிகழும் விபரீதங்களும் படத்தின் கதை.

அதுல் குல்கர்னி, நந்திதா தாஸ் விளம்பரத்துக்கென நாயகர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் இயக்குனரைச் சொல்லி குற்றமில்லை. செத்துப்போன மராத்தி திரைப்பட உலகில் படமெடுத்ததற்கே அவரை பாராட்டவேண்டும்! படம் பார்க்க வந்திருந்த கிரீஷ் கர்னாட், படத்தின் இசை குறித்து இயக்குனரிடமே குறை சொன்னது மிகவும் ரசக்குறைவாக இருந்தது.

சித்ரா பாலேகர் பேசும்போது, "நாம் பிரஞ்சு மொழி திரைப்படங்களை திரையிட்டாலும் இந்தியாவின் பிறமாநில மொழிப் படங்களை திரையிடமாட்டோம்" என்றார். ம்... ஒரே நாளில் ஐந்தாறு மொழிப்படங்கள் திரையிடப்படும் பெங்களூருக்கு இந்த விமர்சனம் பொருந்தாதுதான். ஆனால் இன்றிரவு இருநூறு ருபாய் கொடுத்து Far North என்னும் படுசுமாரான படத்தை பார்த்தபோது, என்.டி.டிவி லூமியர் நிறுவனம் இந்திய மொழித் திரைப்படங்களையும் விநியோகிக்கலாம் என்று தோன்றியது.

'சாவதற்கு முன் பார்க்கவேண்டிய 50 படங்கள்' என்கிற சவடாலோடு (பிரதி வெள்ளி இரவு 11 மணிக்கு) யு.டிவி உலகத் திரைப்பட அலைவரிசையில் ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் வாரத்தில் ஹீரோ என்கிற ஹாங் காங் படத்தை திரைடயிட்டார்கள். இது நான் சாவதற்கு முன் பார்க்கவேண்டிய படமா? Crouching Tiger, Hidden Draganனை மீண்டுமெடுக்க செய்யப்பட்ட இந்த வீண் முயற்சியைப் பார்த்து எவனாவது சாகாமலிருந்தால் சரி!

Wednesday, August 20, 2008

மாமல்லர்கள்!

1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சுஷீல் குமாருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

குத்துச் சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள விஜேந்திர குமாருக்கு பாராட்டுகளும், அவர் வெண்கலத்தோடு நில்லாமல் தங்கமோ, வெள்ளியோ பெற வாழ்த்துகள்!

விஜேந்திர குமார் மற்றும் காலிறுதி வரை முன்னேறி, போராடித் தோற்ற அகில் குமார், ஜிதேந்தர் குமார் என்னும் மூன்று வீரர்களை நாட்டுக்கு அளித்த பிவானிக்கு ஒரு ஓ போடலாம்!

பேட்மிண்டன் விளையாட்டில் சிறப்பாக விளையாடிய சாய்னா நேஹ்வால் பிற்காலத்தில் பதக்கங்களையும் வென்றுவருவார் என நம்பலாம். பறக்கும் இறக்கைகளைக் கொண்ட இந்த விளையாட்டு பேட்மிண்டன் வீடு என்னும் இடத்தின் பெயரால் அழைக்கப் படுவது சுவாரசியமான விசயம்!

கடைசியாக, அப்கானிஸ்தானின் ரோஹுல்லாஹ் நிக்பாய் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. பாராட்டுகள்!

Saturday, August 16, 2008

தமிழில் உபாகர்மம்!

உபாகர்மம் என்னும் பாரம்பரிய பழக்கத்தை கைவிடாது செய்துவருபவர்களுக்கு எனது பாராட்டுகள். வேத பாடசாலையில் வரும் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் செய்யப்படும் செயல்களுக்கு உபாகர்மம் என்று பெயர். மேலும் விவரங்கள் இங்கே.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரம்மனையும் (Brahman - Cosmic flow), கணபதியையும் (chance, luck) சூரியனையும், மற்றும் பிற இயற்கையின் அங்கங்களையும், வேதம் இயற்றிய, பகுத்தளித்த பெரியோர்களையும் வணங்கும் இந்தப் பழக்கம் மிகவும் சிறப்பானதே. இந்த வழக்கததை தமிழில் செய்ய விரும்புவர்களுக்கு தேவையான குறிப்புகள் கீழே.

கடந்த ஆண்டு காயத்ரி மந்திரம் குறித்து நான் எழுதிய இடுகை இங்கே.

உபாகர்மம் (ஆரம்ப செயல்கள்)

1. காமோகார்ஷீத் ஜபம் (காமன் மன்யு என்னும் தேவதைகளை வேண்டுதல்):

காமனே போற்றி! மன்யுவே போற்றி! (108 தடவை)

2. யஜ்ஞோபவீத தாரணம் (பூணூல் அணிதல்):

2.1. ஆசமனம் (குறியிடுதல்):

அச்சுதனுக்கு வணக்கம், அனந்தனுக்கு வணக்கம், கோவிந்தனுக்கு வணக்கம். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, சிறீதரா, ஹிருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

உன்னைப் பன்னிரு திருநாமங்களால் போற்றி என் உடலைனைத்தும் குறி இடுகின்றேன்.

2.2. கணபதி-தியானம்:

எங்கும் நிறைந்தவரும், எனினும் அன்பர்க்குகந்த வடிவம் ஏற்பவரும், வெண்மையான ஆடை உடுத்தவரும். நிலவு போன்ற ஒளியுள்ளவரும், நான்கு கைகளுள்ளவரும், ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக தியானிக்கிறேன்.

2.3. பிராணாயாமம் (மூச்சின் ஆட்சி):

ஓங்காரமே பூலோகம், ஓங்காரமே புவர்லோகம், ஓங்காரமே ஸுவர்லோகம், ஓங்காரமே மஹர்லோகம், ஓங்காரமே ஜனலோகம், ஓங்காரமே தபலோகம், ஓங்காரமே சத்தியலோகம், ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி உருவத்தை தியானிப்போம்.

ஓங்காரமே நீரும், ஒளியும், ரசம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும், எங்கும் பரந்த ஆகாசமும் ஆகும்.

மனம், புத்தி, அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.

2.4. சங்கல்பம் (தெளிந்த தீர்மானம்):

பக்தியோகமும், கர்மயோகமும், ஞானயோகமும் இந்த பூணூலை அணிவதால் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

2.5. யஜ்ஞோபவீதம் (பூணூல் அணிதல்):

பரிசுத்தியளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும், ஆயுளையும், முதன்மையையும் அளிக்கவல்லதுமாகிய வெண்மையான பூணூலைத் தரிக்கிறேன். ஞான ஒளியும், பலமும் அதனால் நிலைபெற வேண்டும்.

2.6. உபவீதம் (பழைய பூணூலைக் கழட்டுதல்):

இழைகள் பின்னமானதும் பலங்குறைந்ததும், அழுக்கடைந்ததுமாகிய பூணூலை விலக்குகிறேன். பரம்பொருளே! மீண்டும் தொடர்ந்து எனக்கு ஞான ஒளியும் நீண்ட ஆயுளும் இருக்கும்படி அருளவேண்டும்.

3. காண்டரிஷி தர்ப்பணம் (வேத கண்ட ரிஷிகளை வணங்குதல்):

பிரஜாபதியின், ஸோமனின், அக்னியின், விச்வ தேவனின், ஸாஹிதீர் தேவனின் (உபநிசத), யாக்ஞீகீர் தேவனின் (உபநிசத), வாருணீர் தேவனின் (உபநிசத), ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவின், ஸ்தஸஸ்பதியின் வேதக் கண்டத்திற்கு உரியவர்களான ரிஷிகளுக்கு இந்த தர்பையை சமர்பிக்கிறேன்.

Friday, August 15, 2008

சுதந்திர தின வாழ்த்துகள்!


இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

Thursday, August 14, 2008

வென்றது இந்தியா!!


தில்லியில் நடந்த ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் மூன்றாம் தரநிலைப் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. பாராட்டுகள். இதன் மூலம் 2011 இல் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தகுதி பெற்றுள்ளது!

Monday, August 11, 2008

அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்றார்!!

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அபிநவ் பிந்த்ரா தனி நபர் தங்கம் வென்றார்! 10மீ துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தம் 700.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். பாராட்டுகள்!!

அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் தளத்தில் அபிநவ் தங்கம் வென்றது பற்றிய செய்தி இங்கே, அவரைப் பற்றிய பக்கம் இங்கே. பதக்கப் பட்டியல் இங்கே.

Sunday, August 10, 2008

பெங்களூரில் ஜெர்மன் திரைப்பட வாரம்

கூதே மையம், ஜெர்மன் திரைப்பட நிறுவனம், சுஜித்ரா திரைப்பட சமூகம் ஆகியோர் சேர்ந்து நடத்தும் ஜெர்மானிய திரைப்பட வாரம், பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் நடந்துவருகிறது.

நேற்று Grave Decisions, The Edge of Heaven மற்றும் Head-On ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன். நல்ல தரமுள்ள படங்கள். வரும் வியாழக்கிழமை வரை திரையிடப்படவிருக்கும் 21 படங்களில் (7 குழந்தைகள் திரைப்படங்கள்) 10 படங்களை பார்த்து விடுவதாக உத்தேசம்! அடுத்த வாரம் ஒற்றைவரி விமர்சனங்கள் எழுதுகிறேன்.

ஜெர்மானிய படங்கள் பிரஞ்சு, போலந்து நாட்டு படங்களைப் போல ஆழமில்லாதவை என்ற என் கருத்தை இந்த திரைப்பட விழா மாற்றவேண்டும். பார்க்கலாம்! நீங்கள் பெங்களூரில் இருந்தால் சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லாவண்யா திரையரங்கத்திற்கு விரையுங்கள்!

செப்டம்பர் 3: மேலே கூறிய மாதிரி ஒரு வரி விமர்சனம் எழுதும் ஆர்வம் போய்விட்டது! அதனால் இந்த விழாவில் நான் பார்த்த மற்ற படங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். Requiem, Ghosts, Nothing but Ghosts, Distant Lights, War Child.

Wednesday, August 06, 2008

நட்பு!