Thursday, June 19, 2008

தசாவதாரம் - அபாரம் பாதி, அபத்தம் மீதி!

கடவுள் இல்லை. அதுவும் ஆக்கலும் (creationist - transcendent), காத்தலும் (immanent - personal) ஒன்றாய் சேர்ந்த கடவுள் (monotheist God) சத்தியமாய் இல்லை என்று அற்புதமாய் சொல்லும் அல்லது சொல்ல நினைத்த படம் தசாவதாரம். கட்டாயம் பார்க்கலாம்.

தசாவதாரம் என்றால் என்ன? மக்கள் இயற்கையினாலும், பகைவர்களாலும் ஆபத்துக்கு உள்ளாகும் போது 'இறைவனான' விஷ்ணு அவதரித்து காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையே தசாவதாரக் கதை. அந்த பத்து அவதாரங்களையும் இந்தப் படத்தில் அற்புதமாய் கொண்டு வந்திருக்கிறார்கள்.

(கீழ் வருவன அரூண் என்பவர் சுருமுரியில் எழுதியதிலிருந்து பெறப்பட்ட விளக்கம்.)
1. மச்சம் - ரங்கராஜ நம்பி - கடலோடு போவதால்.
2. கூர்மம் - அமெரிக்க அதிபர் புஷ். தேவருக்கும் அசுரருக்கும் சண்டை மூட்டியது போல் இன்று மேற்கத்தியருக்கும், இஸ்லாமியருக்கும் சண்டை மூட்டிவிடுதல்.
3. வராகம் - பாட்டி - ஒரு பாட்டில் அவரே பன்றியாக நடிக்கிறார்.
4. நரசிம்மம் - ஸிங்கன் நராஹாசி - பெயர், கைகளால் கொல்வதற்காக பயிற்சி.
5. வாமனன் - கலீபுல்லா - விஸ்வரூபம்.
6. பரசுராமன் - ஃபெலெட்சர் - கொலைகாரர்.
7. ராமன் - அவதார் சிங் - ஒரு தார மணம்.
8. பலராமன் - பலராம நாயுடு - பெயர், காவல் துறை.
9. கிருஷ்ணன் - பூவராகன் - திரெளபதியை (அசின்) காத்தது, பாண்டவர் (சகாக்கள்), தூது செல்வது, காலில் அம்பு பட்டு இறப்பது.
10. கல்கி - கோவிந்த் ராமசாமி - நிகழ்கால உலகத்தை காப்பவர்.
(நன்றி அரூண்.)

மச்சவதாரம் இந்திய கதைப்படி மட்டுமல்லாது, வரலாறு, அகழ்வாராய்சி மூலமாகவும் மிகப் பழமையான கதையே. வேதக் கதைகளில் மனுவைக் (Manu) காப்பாறும் மீனும், ஆப்ராமிய மதக்கதைகளில் வரும் நோவா (Noah of the river) கதையும் பழைமையானவை. பாண்டியரின் சின்னமும், பல ஆப்பிரிக்க நாட்டு சித்திரங்களும்், திருமாலில் உள்ள 'மா'வும், மீன் ஆதி காலத்திலிருந்து வணக்கப் படுவதை பறைசாற்றும். மற்றபடி மீன் சாப்பிட்டதால் அது கடவுள். பிராமணர்கள் பால், மாட்டுக்கறி சாப்பிட்டதால் அவர்களுக்கு காமதேணு கடவுள் என்று மிக எளிதே.

நிற்க. மீன் கதை மிகப்பழைமையானது என்பதற்கு ஏற்றார்போல, தசாவதாரம் படத்தின் முதல் பகுதி மட்டும் தனியே 12ஆம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அதில் சைவரும், வைணவரும் அடித்துக்கொண்ட தமிழரின் அவமானகரமான வரலாற்றை சொன்னது ஓ போட வைத்தது. மற்றபடி காஞ்சி சங்கர மடத்தை கெடுத்த ஜயேந்திரர் உள்ளிட்ட பொறுக்கிகள், தீட்டு என்ற பெயரால் சாதியம் போற்றும் பிராமணர் (பூவராகன் உடலை கட்டிக்கொண்டு பாட்டி அழும்போது கூட வருபவர்), பிராமண பாஷை என்னும் பெயரில் வடமொழி கலப்பு (அசின் பேசுவது), முஸ்லீம்கள் என்றாலே அல்கொய்தா என்னும் அபாண்ட போலீஸ் நடைமுறை என்று பல பேரை சாத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் கமல் கதை, திரைக்கதை எழுதும்போது இருந்த அசாத்திய திறமையின் வெளிப்பாடு. படம் எடுக்க ஆரம்பித்தவுடன் எல்லாம் குட்டிசுவராய் முடிந்திருக்கிறது. மிக மோசமான ஒப்பனையை (Makeup) மன்னிக்கவே முடியாது. பலராம நாயுடு மற்றும் ஒப்பனையில்லாமல் வரும் கோவிந்த், ரங்கராஜ நம்பி பாத்திரங்கள் தவிர பிற ஒப்பனைகள் படுகேவலம்.

போயும் போயும் ஹிமேஷ் ரேஷ்மய்யா என்னும் தரித்திரத்தை பிடித்து வந்து இசையமைக்க வேண்டிய அவசியமென்ன? சண்டைக்காட்சிகள் மகா-மோசம் என்றால், கணிப்பொறி சித்திரவேலைகள் (graphics) தயாரிப்பாளரிடம் காசு தீர்ந்துவிட்டதை பறைசாற்றுகின்றன. கே. எஸ். ரவிகுமார் எல்லாம் ரஜினியோடு சேர்ந்து அல்லக்கை மடமெடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் ஒரு அருமையான கதையை, கருத்தை எடுக்கும் அளவுக்கு தமிழ் திரைப்பட உலகம் இன்னும் வளரவில்லை என்பதை தசாவதாரம் நிரூபித்திருக்கிறது. கமல் திரைப்படங்களை விடுத்து, புதினம் (novel) எழுத ஆரம்பித்தால் தமிழுக்கு அபாரமான சேவை செய்யமுடியும்.