Wednesday, December 19, 2007

கல்லூரி - எங்கே என் முத்து?

கல்லூரி திரைப்படம் பார்த்தவர்கள் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா பற்றி நினைத்துப் பார்ப்பார்கள். எனக்கு என் நன்பன் முத்துகணேஷ் நினைவுக்கு வந்தான். தாயில்லா பிள்ளை, தோல் பதனிடும் சாலையிலும், நிலத்திலும் உழைத்து மகனை பள்ளிக்கு அனுப்பிய தந்தை, சிறு வயதிலேயே மணம் செயது கொடுக்கப்பட்ட தங்கை, அக்காவாவின் வயதேயுடைய பாசமுள்ள மாற்றான்தாய்.

படத்தில் வரும் முத்து என்ன ஆனானென்று தெரியவில்லை. என் முத்து எட்டாவது படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடிவிட்டான். அவனை பள்ளிக்கு மீட்டுவர நான் போதுமான அளவு முயற்சிக்கவில்லை என்று இப்போது வருந்துகிறேன்.

ஓ, விமர்சனமா? தமன்னா கபளீகரமாக (Gorgeous?!) இருக்கிறார். புதுமுகங்கள் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். காட்சிகள், பாத்திரங்களில் யதார்த்தம் மேலிடுகிறது. Shoutcastஇல் நான் ரசிக்கும் 'ஜுன் ஜுலை' பாட்டு இப்படத்தில்் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். 'நீங்க சொல்லுங்க ..., ஏன் ...' மாதிரி நகைச்சுவைகளை எப்படி ரசி(சகி)ப்பதென்று தெரியவில்லை. குருநாதரைப் போலவே பாலாஜி சக்திவேலிடமும் சரக்கு குறைவுதான் போலிருக்கிறது. படம்: பார்க்கலாம்.

Tuesday, December 18, 2007

தஸ் கஹானியான் - பதிற்றுப் பத்து!

ஊடகங்களில் விமர்சனம் எழுதுபவர்களைப் பிடித்து நல்லா நாலு சாத்து சாத்தனும்னு நினைக்கிறேன். தஸ் கஹானியான் (இந்தி - பத்து கதைகள்) என்று அருமையா படம் எடுத்திருக்காங்க. சில அல்லக்கைகள் இதைத் தாறுமாறாக விமர்சித்திருக்கின்றன. காட்டு: ராஜிவ் மசந்த் மற்றும் ஷுப்ரா குப்தா. இவங்களைப் படம் எடுத்து காட்டச் சொல்லனும்.

தஸ் கஹானியான் - அற்புதமான முயற்சி. பிரஞ்சில் வந்த Paris Je taime பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். பொதுவா அழுகாச்சி படம் (Melodrama) எடுப்பவர்களால் பத்து நிமிடத்திலெல்லாம் கதை சொல்ல முடியாது. இங்கு ஆறு இயக்குனர்கள், பல நடிகர்கள், பின்னனிக் கலைஞர்கள் சேர்ந்து 10 பத்து நிமிடப் படம் எடுத்திருக்கிறார்கள்.

பத்தில் எட்டு பகுதிகள் நிறைவாகச் செய்யப் பட்டதாகவே நினைக்கிறேன். இதில் இரண்டு பகுதிகளில் தமிழும் இருக்கிறது! நானா பாடேகர் வரும் Gubbare என்னும் பகுதியும், நேகா தூபியா வரும் Strangers in the Night பகுதியும் என்னைக் கவர்ந்தன. நாயகன், சத்யா (இந்தி), பாட்ஷா போன்ற படங்களை பத்து நிமிடத்தில் அழகாக எடுக்க முடியுமென்று Rise and Fall இல் காட்டியிருக்கிறார்கள். பார்க்கத் தவறாதீர்கள்.

டான் மாதிரி டப்பாவை எல்லாம் இரண்டு தடவை காப்பியடிக்கும் நம்மவர்கள், இந்த மாதிரி நல்ல முயற்சிகளையும் காப்பி அடிக்கலாமே?

Monday, December 17, 2007

சென்னைத் திரைப்பட விழா

ஐந்தாவது சென்னைத் திரைப்பட விழா தற்போது நடந்துவருகிறது. சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்! இங்கு திரையிடப்படும் தமிழல்லாத படங்களில் The Lives of others என்னும் ஜெர்மானிய படத்தை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அடூரின் நாலு பெண்கள் பார்க்க ஆர்வம்.

இந்திய திரைப்பட ரசிகர்கள் சங்கம் என்னும் அமைப்பு இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது. பாராட்டுக்கள். இவர்கள் ஆண்டு முழுவதும் பல நல்ல படங்களை திரையிடுவது தெரிகிறது. கலக்குங்க!

அடுத்த மாதம் சென்னையிலும் குவஹாத்தியிலும் நடக்கவிருக்கும் குறும்பட விழாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்தியத் திரைப்பட விழாக்களின் பட்டியல் கீழே. இவை நடக்கும்போது நீங்கள் அந்த ஊரிலிருந்தால் போய்ப் பாருங்களேன்!

1. சர்வதேச இந்தியத் திரைப்பட விழா, கோவா.
2. அரசின் திரைப்படச் சரகம் நடத்தும் மும்பை திரைப்பட விழா.
3. திருவணந்தபுரத்தில் நடக்கும் கேரள திரைப்பட விழா.
4. அரசின் சிறார் திரைப்படக் கழகம் நடத்தும் குழந்தைகள் திரைப்பட விழா.
5. கொல்கத்தா திரைப்பட விழா.
6. சென்னைத் திரைப்பட விழா.
7. தில்லியில் நடக்கும் ஆசிய/அரபு திரைப்பட விழா.
8. ஐதராபாத் திரைப்பட விழா.
9. பூரியில் நடக்கும் சுவாரசியமான சுதந்திரத் திரைப்பட விழா.
10. திருச்சுரில் நடக்கும் குறும்பட விழா.
11. புணே சர்வதேச திரைப்ப்ட விழா.
12. பெங்களூரில் நடக்கும் தண்ணீர் திரைப்பட விழா!

Tuesday, December 11, 2007

ஜெயிக்கப் போவது யாரு?

ரவி கிளப்பிவிட்ட வோர்ட்விரஸ் புயல் நன்றாக அடித்துக்கொண்டு இருப்பது தெரிகிறது. இத்தாலி, பிரஞ்சு, இந்தோனேசியா, சப்பானிய மொழிகளோடு போட்டி போட்டுக்கொண்டு வோர்ட்பிரஸ் தமிழாக்க முயற்சி நடக்கிறது. இறுதிக்கோட்டை யார் முதலில் பிடிக்கப் போகிறார்கள்?

ரவி கொடுத்திருந்த வழிகாட்டி உதவியாயிருக்கிறது. அனைத்து வார்த்தைகளையும் மொழிபெயர்த்த பின்பும், அவற்றின் 'இடம் பொருள் ஏவல்' சரிபார்க்க ஆட்கள் தேவைப்படுவார்கள். எ.கா: Hawt Post ஐ எப்படி சுவையாக மொழிபெயர்ப்பது? ஒரு கைகொடுக்க வாங்க.

இந்த மடர்குழுமத்தில் மேலும் விவரங்கள் கிடைக்கும்.

Monday, December 10, 2007

பருத்திவீரன், முத்தழகன்?

என்னப்பு பாக்கறீங்க? எப்பவவோ வந்த படத்தைப் பத்தி இப்ப எழுதறானேன்னு தானே? அட இப்பதானுங்கள நாங்க இதப் பாத்தோம்!

சரி, சரி, அந்த கிராமத்தின் பேச்சுநடை எனக்கு வரப்போவதில்லை! பருத்திவீரன் சிறந்த படைப்பு என்பதில் சந்தேகமில்லை. சாதாரணமாக நல்ல கதை, கருத்து இருந்தும் படத்தை மோசமாக எடுப்பதுதான் இத்தகைய கதையம்சமுள்ள படங்களில் வழக்கம். சேரனின் இயலாமை, தங்கர் பச்சானின் அபத்தக் களஞ்சியங்கள், பார்த்திபனின் நாடகங்கள் என்று நாம் அறிந்ததுதானே! அமீர் இயக்கிய ராம் திரைப்படம்கூட எழெட்டு முடிவுகள் (climax) வைத்து சொதப்பிய படம்தான்.

அவற்றோடு ஒப்பிடும்போது பருத்திவீரன் மிகவும் பாராட்டப்பட வேண்டிய படம். பல நிமிடங்கள் வருகிற திருவிழா தொடக்கக் காட்சியாக வருவது அருமை. எங்கள் ஊருக்கு அருகில் நடக்கும் கிராமத் திருவிழாக்கள் நினைவுக்கு வந்தன! நல்ல நகைச்சுவை, சிறப்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர் தேர்வு, காட்சியமைப்பு என்று படம் எடுத்தவிதத்தில் கலக்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்தப் படம் சொல்லவருகிற அல்லது சொல்லாமல் விட்டுவிடுகிற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை! Fatalism (விதிவசம்) நல்ல வேளையாக இந்தப்படத்தின் கரு இல்லை என்று நினைக்கிறேன். 'முற்பகல் செய்யின் பிற்பகல் (சுற்றத்தார்க்கும்!) விளையும்' என்பது ஓரளவு பொருந்துகிறது. ஆனால் முத்தழகுக்கு நேரும் கதியை என்னால் சீரணிக்க முடியவில்லை!

நந்தா என்கிற படத்தை விகடன் விமர்சித்தபோது, "சோகத்தை சனங்கள் ரசிப்பார்கள், படுசோகத்தை?" என்று கேட்டது நினைவிருக்கிறது. அதேபோல் இந்தப் படத்தில் ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கும் முயற்சி எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் வேதனை அடைந்தேன் என்பது இயக்குனர் அமீரின் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள்!

Sunday, December 02, 2007

பள்ளிக்கூடம் போகாமலே ...

இருக்கமுடியாது! படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிய அல்லது பள்ளிக்கே போகாத சிறார்களை பள்ளிக்கு அழைத்துவர ஒரு உன்னதமான திட்டம் உருவாகியிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்காணித்து, அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை முடிந்தவரையில் போக்கி, அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர முயன்று வருகிறார்கள்.

அதுவும் தொழில்நுட்ப உதவியுடன். back2school.in என்னும் இணையதளத்தின் மூலம் அந்தச் சிறார்களை கண்காணிக்கிறார்கள். கலக்கல்! மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், தமிழக அரசு உதவியுடன் இந்தத் திட்டத்தை செவ்வனே செய்துவரும் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் பாபு, தன்னார்வளர்கள், பள்ளி ஆசிரியர்கள், இந்தத் தளத்தை உருவாக்கிய ஆர்பிடர் இன்போடெக் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.

இது பற்றிய பத்திரிக்கை செய்திகள் இங்கே மற்றும் இங்கே. நான் ஏற்கனவே எழுதியிருந்த படிக்கும் இனிக்கும் இயக்கமும் இத்திட்டத்தோடு ஒன்றிணைந்ததுதான்.

Saturday, December 01, 2007

ஜுஜுபி!



சூப்பர் மச்சி! மேலும் விவரங்கள் இங்கே.